2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

குமார் பொன்னம்பலத்தின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

Princiya Dixci   / 2021 ஜனவரி 05 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முன்னாள் தலைவர் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 21ஆம் ஆண்டு நினைவு தினம்,  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில், மட்டக்களப்பு - கல்லடியில் இன்று (05) அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் திருவுருவப் படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் சிவஸ்ரீ எஸ்.சிவபாலன் குருக்கள், மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் எஸ்.சிவயோகநாதன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் க.குககுமரராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவேந்தல் உரைகள் நிகழ்த்தப்பட்டன. 

இதன்போது உரையாற்றிய தர்மலிங்கம் சுரேஸ், “மாமனிதர் குமார் பொன்னம்பலம் தமிழினத்துக்கு கிடைத்த மாபெரும் சொத்தாக இருந்தார். தமிழ் மக்கள் மீது பாரிய அடக்குமுறையை சிங்க தேசம் முன்னெடுத்தபோது தமிழர்கள் மத்தியில் ஆயுதப் போராட்டம் உருவெடுத்தவேளையில் அதன் நிலைப்பாட்டை, அந்த ஆயுதப் போராட்டத்தின் உண்மைத் தன்மையை சர்வதேச சமூகத்துக்கு கொண்டுசெல்வதற்கு இவர் மிகவும் முக்கியமானவராக இருந்தார்.

“சர்வதேசத்தின் கவனத்திற்கு இந்த நாட்டில் தமிழர்கள் எதிர்கொண்ட அவலத்தினையும் போராட்டத்தின் நியாயப்பாட்டினையும் கொண்டுசென்றார். அதன் காரணமாகவே 2,000ஆம் ஆண்டு ஜனவரி 05ஆம் திகதி ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

“தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேசத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றதன் காரணமாகவே அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரின் படுகொலைக்கு அன்று ஆட்சியில் இருந்த சந்திரிகாவின் ஆட்சியாளர்களே பொறுப்பேற்க வேண்டும்.

“இந்த நாட்டில் பெருமளவான தமிழ் கல்விமான்கள், சட்டத்தரணிகள், புத்திஜீவிகள், பொதுமக்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர். இதற்கான பொறுப்புக்கூறலை சர்வதேச விசாரணைகள் மூலம் பெற்றுக்கொள்வதற்கான நகர்வுகளை செய்யவேண்டும்.

“தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்டுள்ள இன அழிப்பு விவகாரங்கள் அனைத்தும் ஒரு காலகட்டத்தில் சர்வதேச சமூகத்தினால் விசாரணைசெய்யப்படும்.அதன்மூலம் சர்வதேச சமூகம் எங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும்.அதற்கான சந்தர்ப்பம் வரும். அதற்காக நாங்கள் காத்திருக்கின்றோம்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .