2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

‘ஒரேநாளில் மரவள்ளி நாட்டி கிழங்கு எடுக்க முடியாது’

Princiya Dixci   / 2021 மே 10 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம்

உரத்தடையின் மூலம் எமது நாட்டின் பொருளாதாரம் நிச்சயம் வீழ்ச்சியடையும் நிலையேற்பட்டுள்ளதென மட்டக்களப்பு மாவட்ட விவசாய சம்மேளனம் விசனம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி நினைத்துக் கொண்டார் "காலையில் மரவள்ளி நாட்டினால் மாலையில் மரவள்ளிக் கிழங்கு எடுக்கலாம் என்று" இவை திடீரென்று செய்யக் கூடிய விடயம் அல்ல என சம்மேளனத்தின் தலைவர் நடேசன் சுந்தரேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 90 சதவீதமான நிலங்கள் பசளையற்ற நிலங்களாகவே காணப்படுகின்றன. இதற்கு நாங்கள் பசளைகளைப் போட்டுத்தான் பயிர்களை உருவாக்க முடியும். இந்த நிலையில் எமது மாவட்டத்துக்கு உரம் நிச்சயமாகத் தேவையான ஒன்றாகும் எனவும் அவர் தெரிவித்தார்.  

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு எவ்வித உதவிகளும் இல்லை. மருந்து வகைக், கிருமிநாசினிகள் கூட வழங்கப்படவில்லை. பசளையும், உரமருந்துகளும் இல்லாமல் மிகவும் கஷ்டமான நிலையை எதிர்நோக்கி இருக்கின்றார்கள்.

“இது தொடர்பில் அரசாங்கத்திடம் தெரிவித்தால் அவர்கள் இயற்கை உரத்தையே பாவிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றார்கள். இத்தனை காலங்களும் நாங்கள் செயற்கை உரங்களையே பாவித்து வந்தோம்.

“கடந்த அரசாங்க காலத்தின் போது இவ்விடயத்தை நாங்கள் கூறி, இயற்கை உரம் பற்றியும் கூறியிருந்தோம். ஆனால், அந்த அரசாங்கம் இதனைக் கவனத்தில் கொள்ளவில்லை. இயற்கை உரப் பாவனை விடயத்தைச் சிறிது சிறிதாகவே நடைமுறைப்படுத்த வேண்டுமே தவிர, திடீரென நடைமுறைப்படுத்த முடியாது.

“உரம் நிறுத்தப்பட்டமையால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேரடியாக விவசாயத்தில் ஈடுபடும் 40 சதவீதமான விவசாயிகளும், மறைமுகமாக 20 வீதமான விவசாயிகளுமாக மொத்தம் 60 சதவீதமான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.

“அத்துடன், விவசாயிகளின் தொழில் முயற்சிகள் இல்லாமல் போவது மாத்திரமல்லாமல், இலங்கைக்குத் தேவையான மூன்றின் ஒரு பங்கு நெல் உற்பத்தியும் இல்லாமல் போகும் நிலை ஏற்படும்.

“மஞ்சள் இறக்குமதியை முற்றாக நிறுத்திவிட்டு, ஜனாதிபதி தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் மஞ்சள் கன்றுகளை வழங்குகின்றார். அந்தச் செடிகள் எப்போது வளர்ந்து, நாம் எப்போது மஞ்சள் உபயோகிப்பது.  

“மஞ்சள் இறக்குமதியைப் பாதியாகக் குறைத்துவிட்டே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்திருக்க வேண்டும். மஞ்சள் என்பது ஒரு மருத்துவப் பொருள். அதனைத் தடை செய்ததென்பது மிகவும் கொடூரமான செயல்.

“எனவே, ஜனாதிபதி நினைப்பதையெல்லாம் பிரயோக ரீதியில் நடத்திவிட முடியாது. ஐந்து வருடங்களுக்குள் குறைத்து இயற்கை உரத்தை உற்பத்தியாக்கும் முறைமையைச் சீனாவில் இருந்து அறிந்து, இயற்கை உர உற்பத்தியை உருவாக்கிய பின் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .