2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

’ஐரோப்பிய நாடுகளுடனான உறவைப் பேண ஜனாதிபதி முயற்சி’

Princiya Dixci   / 2021 மார்ச் 29 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், வா.கிருஸ்ணா, பாறுக் ஷிஹான்

ஐ.நா தீர்மானம் நிறைவேற்றத்தினூடான சில தகவல்களை அரசாங்கத்துக்கு தந்திருக்கின்றார்கள் எனத் தெரிவித்த தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), நாட்டில் சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டு, மாற்றங்களை உருவாக்கி, மீண்டும் ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளைப் பேணுவதற்கான முயற்சிகளை ஜனாதிபதி மேற்கொள்ளவுள்ளார் என்றும் தெரிவித்தார். 

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்களுக்கான கட்சியின் நியமனம் வழங்கும் நிகழ்வு,  செங்கலடி சௌபாக்கியா மண்டபத்தில் நேற்று (28) நடைபெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யுத்தம் முடிவுற்ற தருவாயில் இருந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தொடர்பான விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தக் காலத்தில் கூட பாரிய நெருக்கடிகள் தரப்பட்டன. ஆனால், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனைச் சிறந்த முறையில் கையாண்டு முறியடித்துவிட்டார். 

“இந்தப் பிரச்சினை இரண்டு தரப்பும் இருந்து பேசித் தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சினையாகும். ஏனெனில், இலங்கை என்பது உண்மையில் நாணயம் மிக்க ஒரு தனித்துவமான நாடு. இந்து சமுத்தரப் பிராந்தியத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாகவும் இருக்கின்றது. அந்த வகையிலே இந்தத் தீர்மானம் நிறைவேற்றத்தினூடான சில தகவல்ளை அரசாங்கத்துக்கு அவர்கள் தந்திருக்கின்றார்கள். 

“இது சம்மந்தமாக நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கின்றார். குறைந்தது 6 மாதங்களுக்குள் நிறைவேற்றும்படி, இந்தத் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. எனவே, மீண்டும் ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை சிறந்த முறையில் பேணுவதற்கான முயற்சிகளை ஜனாதிபதி மேற்கொள்வார்கள்

“பல சிக்கலான கட்டத்தில் இந்த நாட்டைத் தளம்பல் இல்லாமல் வழிநடத்துகின்ற ஜனாதிபதி. அதற்கு அத்திபாரமாக இருக்கின்ற பிரதமர் என சிறந்த ஒரு நிருவாகக் கட்டமைப்புக்குள்ளால் நாம் நிறைய சாதனைகளைப் படைக்கலாம். இந்த அரசாங்கத்தை நாம் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். அதன்மூலம் எமது மக்களுக்கான வளங்களைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X