2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்; மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2021 நவம்பர் 28 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

முல்லைதீவு மற்றும் திருகோணமலை பகுதிகளில், இராணுவத்தினராலும் குண்டர்களாலும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையைக் கண்டித்து, மட்டக்களப்பில் இன்று (28) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு.ஊடக அமையம், மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து, இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

மட்டக்களப்பு காந்திபூங்கா அருகில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபி அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஊடகவியலாளர்கள், பல் சமய ஒன்றியங்களின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டமைக்கு கடுமையான எதிர்ப்புகள் இதன்போது தெரிவிக்கப்பட்டதுடன், ஊடகவியலாளரை தாக்கிய இராணுவத்தினரை கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

அதேபோன்று, குறிஞ்சாக்கேணி படகு பாதை விபத்துத் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் குண்டர்களால் தாக்கப்பட்டு, அவர்களது புகைப்படக் கருவிகளும் பறிக்கப்பட்டு சேதமாக்கப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், குறித்த தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், கைதுசெய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் கோகிலனை விடுதலை செய்ய வலியுறுத்தப்பட்டதுடன், ஊடகவியலாளர்கள் அச்சமின்றி ஊடக கடமையை மேற்கொள்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துமாறும் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .