2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

’ஊடகத்துறைக்கு மீண்டும் சவால்’

Princiya Dixci   / 2021 மார்ச் 28 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான், சகா

ஊடகத்துறைக்கு மீண்டும் சவாலான சூழல் உருவாகுகின்ற நிலையிலே பழைய நிலைக்குச் செல்லாமல் ஊடக தர்மத்தையும் ஊடகங்களையும் பேணிப் பாதுகாப்பதிலே ஆட்சியாளர்கள், சமூகத்தினர் மற்றும் ஊடகத்துறையிலே இருக்கின்றவர்களுக்கு ஒரு பெரும் பங்கு இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்  தெரிவித்தார்.

அம்பாறை, கல்முனையில் நேற்று (27) மாலை நடைபெற்ற “பரிணாமம்” எனும் பத்திரிகை வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்றைய கால கட்டத்திலே ஊடகம் மிக முக்கிய பங்கை வகிக்கின்றது. விசேடமாக இந்த அரசாங்கத்தின் கீழ், துணிவோடு உண்மையை எடுத்துச் சொல்லுகின்ற ஊடகங்கள் தேவைப்படுகின்றன. ஊடக சுதந்திரம் திரும்பவும் கேள்விக்குறியாக்கப்படுகின்றது. ஊடக சுதந்திரம் இந்த நாட்டில் எப்படியாக இருந்தது என்று 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் எங்களுக்குத் தெரிந்திருந்தது. பல ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள், இன்னும் பலர் நாட்டை விட்டு ஓடினார்கள். 

“இன்றைக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெருமையோடு சொல்லுகினற விடயம் அவருடைய காலத்தில் எந்த ஊடகவியலாளரும் தாக்கப்படவில்லை என்பதாகும். அதை அவர் பெருமையாகச் சொல்லும் அளவுக்கு உண்மையும் இருக்கின்றது.

“ஆனால், தற்போது நிலைமை மாறுகின்றது என்கின்ற ஓர் அச்சம் எழுந்துள்ளது. பழைய நிலைக்குச் செல்லாமல் ஊடக தர்மத்தைக் காத்து ஊடகங்களைப் பேணிப் பாதுகாப்பதிலே ஆட்சியாளர்கள், சமூகத்தினர் மட்டுமல்ல ஊடகத்துறையிலே இருக்கின்றவர்களுக்கும் ஒரு பெரும் பங்கு இருக்கின்றது. உண்மையான, சரியான செய்தியைச் சரியான கோணத்தோடு அதனை வெளியிடுகின்ற போது, அந்த ஊடகத்துக்கும் அந்தச் செய்திக்கும் ஒரு மதிப்பு இருக்கும்.

“ஒரு பொறுப்போடு செய்திகளைப் பிரசுரிக்கத் தேவையில்லை என்ற வகையில் இணையவழி செய்திகள் தற்போது வெளிவருகின்றன. ஆனால், அச்சுப் பதிப்பாக ஓர் ஊடகம் வெளிவருகின்ற போது, அது சம்மந்தமான சட்டங்கள் எமது நாட்டில் ஊறிப்போயிருக்கின்ற காரணத்தினாலே எதையும் அச்சிட்டு பிரசுரித்துவிட முடியாது” என்றார். 

இதேவேளை, இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உரையாற்றுகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வீழ்ச்சியடைந்து செல்வதற்கு காரணம் கட்சி பற்றிய பொய் செய்திகளைப் பரப்புவதனால் ஆகும் எனக் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X