2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

இருவேறு விபத்துகளில் சிசு, சிறுவன் உட்பட மூவர் பலி; அறுவர் காயம்

Editorial   / 2020 மே 06 , பி.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், அப்துல்சலாம் யாசீம்

மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில், மோட்டார் சைக்கிள்கள் நான்கு, நேருக்கு நேர் மோதிக்கொண்ட இருவேறு விபத்துகளில் 6 மாத சிசு, 6 வயது சிறுவன் உட்பட மூவர் பலியாகியுள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு - கரடியனாறு, சின்னப்புல்லுமலை பிரதேசத்தில், மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், நொச்சிமுனை, தரிசனம் வீதியைச் சேர்ந்த 6 வயதுடைய றொபட் டினேஷ் ஹனபன் ஹொசேயா என்ற 6 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளான் என, கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

புல்லுமலை பிரதேசத்திலுள்ள கிறிஸ்தவ மதகுரு ஒருவர், மனைவி, 2 வயது பெண் பிள்ளை, உயிரிழந்த மகள் ஆகியோர் நேற்று (05) பிற்பகல் மோட்டார் சைக்கிளில் சென்ற போது  எதிரே வந்த பிறிதொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய மூவரும் படுகாயமடைந்த நிலையில், மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எதிரே வந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனின் சடலம், மட்டு. போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கைத் துறை முகத்துவாரம் பிரதான வீதியில், திங்கட்கிழமை (04) மாலை இடம்பெற்ற இவ்வாறான மற்றுமொரு விபத்தில் 06 மாத சிசுவொன்றும் ஈச்சிலம்பற்று - புன்னையடி பகுதியைச் சேர்ந்த வர்ணகுமார் டிலக்சன் என்ற 17 வயது இளைஞனும் உயிரிழந்துள்ளனர்.

விபத்து குறித்து தெரியவருவதாவது, தாய், தந்தை, சிசு, மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது எதிரே இளைஞன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

உயிரிழந்த சிசுவின் தந்தை துஸேந்தன், தாய் டிலக்ஸனா ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இரு விபத்துகள் தொடர்பாக கரடியனாறு பொலிஸாரும் சேருநுவர பொலிஸாரும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X