2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

யார்? இந்த விக்னேஷ் புதூர்

Editorial   / 2025 மார்ச் 24 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நடப்பு ஐபிஎல் சீசனின் 3-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே மற்றும் தீபக் ஹூடா ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தி இருந்தார் மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புதூர். இம்பேக்ட் வீரராக இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீசிய அவர் யார் என்று பார்ப்போம்.

23 வயதான விக்னேஷ் புதூர், கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர். இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர். அவரை இந்த சீசனுக்கான மெகா ஏலத்தில் ரூ.30 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்தது 5 முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி. 

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக இம்பேக்ட் வீரராக விளையாடும் வாய்ப்பை விக்னேஷ் புதூர் பெற்றார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக விளையாடிய அவர், முதல் ஓவரிலேயே அரை சதம் எடுத்து களத்தில் செட் ஆகி விளையாடிக் கொண்டிருந்த ருதுராஜ் விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ந்து அடுத்தடுத்த ஓவர்களில் ஷிவம் துபே மற்றும் தீபக் ஹூடா விக்கெட்டை கைப்பற்றினார். அவரது பந்துவீச்சு ஆட்டத்தின் போக்கில் திருப்புமுனையை ஏற்படுத்தி இருந்தது. அந்த அளவுக்கு அவர் தாக்கம் ஏற்படுத்தினார். 4 ஓவர்களில் 32 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

கேரளாவைச் சேர்ந்த விக்னேஷ் புதூர், இன்னும் அந்த மாநிலத்தில் சீனியர் அணிக்காக விளையாடவில்லை. இதுவரை மாநில அளவில் அண்டர் 14 மற்றும் அண்டர் 19 அளவில் தான் விளையாடி உள்ளார். கேரள கிரிக்கெட் லீக் மற்றும் டிஎன்பிஎல் போன்ற கிரிக்கெட் தொடர்களில் விளையாடி உள்ளார். அவரது அப்பா சுனில் குமார் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். அம்மா கே.பி.பிந்து.

கிரிக்கெட் விளையாட தொடங்கிய ஆரம்ப நாட்களில் மித வேகப்பந்து வீச்சாளராக பந்து வீசி பழகியுள்ளார். அந்த நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த முகமது ஷெரிஃப் என்ற கிரிக்கெட் வீரர் ஆலோசனையின் படி சுழற்பந்து வீச பயிற்சி மேற்கொண்டுள்ளார். பின்னர் கிரிக்கெட் விளையாட்டில் முன்னேறும் நோக்கில் திருச்சூருக்கு இடம்பெயர்ந்துள்ளார். அங்கு புனித தாமஸ் கல்லூரி அணிக்காக கேரளா காலேஜ் ப்ரீமியர் டி20 லீகில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்து வீச்சாளர்களில் ஒருவராக அறியப்பட்டார்.

அதோடு ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் கிளப் அணிக்காக தனது ஆட்டத்திறனை சிறப்பான முறையில் தொடர்ந்து வெளிப்படுத்திய நிலையில் கேரளா கிரிக்கெட் லீகில் விளையாடும் வாய்ப்பினை பெற்றார். அது அவரது கிரிக்கெட் வாழ்வில் முக்கிய தருணமாக அமைந்தது. அங்கிருந்து இப்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

‘சிறந்த கிரிக்கெட் திறமைசாலிகளை அடையாளம் காணும் வகையில் மும்பை இந்தியன்ஸ் செயல்பட்டு வருகிறது. அப்படி தேடியதில் கிடைத்தவர் தான் விக்னேஷ் புதூர்’ என சிஎஸ்கே உடனான ஆட்டத்துக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ் தெரிவித்திருந்தார். ஆட்டத்துக்கு பிறகு தோனி, விக்னேஷ் புதூர் உடன் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X