2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

இலங்கையை வெள்ளையடித்த இந்தியா

Shanmugan Murugavel   / 2024 ஜூலை 30 , பி.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் இலங்கையை இந்தியா வெள்ளையடித்தது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஏற்கெனவே தோற்றிருந்த இலங்கை, பல்லேகலவில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் தோற்றமையைத் தொடர்ந்தே 3-0 என இந்தியாவால் வெள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் சரித் அசலங்க, இந்தியாவை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார். இலங்கை சார்பாக சகலதுறைவீரரான சமிந்து விக்ரமசிங்க அறிமுகத்தை மேற்கொண்டார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, மகேஷ் தீக்‌ஷன (3), விக்ரமசிங்க, அசித பெர்ணாண்டோ, ரமேஷ் மென்டிஸ், வனிது ஹசரங்கவிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில் ஷுப்மன் கில் 39 (37), ரியான் பராக் 26 (18), வொஷிங்டன் சுந்தர் 25 (18) ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு 138 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, பதும் நிஸங்கவின் 26 (27), குசல் மென்டிஸின் 43 (41), குசல் பெரேராவின் 46 (34) ஓட்டங்களுடன் வெற்றியிலக்கை நோக்கி நகர்ந்து 15.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 110 ஓட்டங்களுடன் காணப்பட்டபோதும் அடுத்த 27 ஓட்டங்களைச் சேகரிப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களையே பெற்று சுப்பர் ஓவருக்கு போட்டி முடிவு சென்றது. பந்துவீச்சில் ரவி பிஷ்னோய், சுந்தர், ரிங்கு சிங், அணித்தலைவர் சூரியகுமார் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் சுந்தர் வீசிய சுப்பர் ஓவரில் குசல் பெரேரா, நிஸங்க ஆட்டமிழக்க நான்கு பந்துகளையே எதிர்கொள்ள முடிந்த நிலையில் இரண்டு ஓட்டங்களையே பெற்றது. அந்தவகையில் மூன்று ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு களமிறங்கிய சூரியகுமார் யாதவ் தீக்‌ஷனவின் முதல் பந்திலேயே நான்கு ஓட்டங்களைப் பெற இந்தியா வென்றது.

இப்போட்டியின் நாயகனாக சுந்தர் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X