Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2022 ஓகஸ்ட் 25 , பி.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
- முருகவேல் சண்முகன்
ஆசியக் கிண்ணத் தொடரானது நாளை மறுதினம் ஆரம்பிக்கவுள்ளது. இம்முறை ஆறு அணிகள் பிரதான தொடரில் விளையாடவுள்ளன. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகியன நேரடியாக பிரதான தொடருக்குத் தகுதி பெற்றுள்ளதுடன், ஆறாவது அணியானது தகுதிகாண் போட்டிகளிலிருந்து தெரிவு செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், பிரதான தொடரில் பங்கேற்கும் ஆறு அணிகளும் மூன்று மூன்றாக இரண்டாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும் லீக் முறையில் போட்டிகள் நடைபெற்று அதில் முதலிரண்டு அணிகளும் சுப்பர் – 4 சுற்றுக்குத் தகுதி பெற்று, சுப்பர் – 4 சுற்றில் லீக் முறையில் போட்டிகள் இடம்பெற்று முதலிரண்டு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவுள்ளன.
அந்தவகையில் இப்பத்தியானது குழு பியில் இடம்பெற்றுள்ள இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகளைப் பற்றி ஆராய்கிறது. ஏறத்தாழ மூன்று அணிகளும் இக்குழுவில் சமபல அணிகளாகக் காணப்படுவதோடு, இதில் எந்த இரண்டு அணிகள் முன்னேறினாலும் ஆச்சரியப்படுவதுக்கில்லை.
அண்மைய காலப் பெறுபேறுகளை வைத்துப் பார்க்கும்போது ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகியன சுப்பர்- 4 சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையணியைப் பொறுத்த வரையில் மகேஷ் தீக்ஷன, வனிடு ஹஸரங்க, ஜெஃப்ரி வன்டர்சே, தனஞ்சய டி சில்வா, சரித் அஸலங்க என பலமான சுழற்பந்துவீச்சு வரிசையே இலங்கையின் பலமாக குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாகக் காணப்படுகிறது. காயம் காரணமாக துஷ்மந்த சமீரவை இலங்கை இழந்தமையானது அவ்வணிக்கு பின்னடைவாகக் காணப்படுகிறது. வேகப்பந்துவீச்சைப் பொறுத்தவரையில் அனுபவமற்ற பிரமோத் மதுஷன், டில்ஷான் மதுஷங்க, மதீஷ பத்திரண ஆகியோரே குழாமில் காணப்படுகின்றனர்.
துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரையில் பதும் நிஸங்க, குசல் மென்டிஸ், சரித் அஸலங்க, பானுக ராஜபக்ஷவோடு அணித்தலைவர் தசுன் ஷானக, தனஞ்சய டி சில்வா ஆகியோர் தொடர்ச்சியான பெறுபேறுகளை வெளிப்படுத்தினாலே ஏனைய அணிகளுக்கு இலங்கை சவாலையளிக்க முடியும்.
குழாம்: தசுன் ஷானக (அணித்தலைவர்), சரித் அஸலங்க, அஷேன் பண்டார, தினேஷ் சந்திமால், வனிடு ஹஸரங்க, தனஞ்சய டி சில்வா, நுவனிடு பெர்ணாண்டோ, தனுஷ்க குணதிலக, பிரவீன் ஜெயவிக்கிரம, சாமிக கருணாரத்ன, பிரமோத் மதுஷன், டில்ஷான் மதுஷங்க, குசல் மென்டிஸ், பதும் நிஷங்க, மதீஷ பத்திரண, பானுக ராஜபக்ஷ, மகேஷ் தீக்ஷன, ஜெஃப்ரி வன்டர்சே.
அடுத்து ஆப்கானிஸ்தானைப் பொறுத்த வரையில் இருபதுக்கு – 20 போட்டிகளின் வருகையால் அதிகம் பயனடைந்த அணியாக அவ்வணியையே சொல்ல முடியும். சர்வதேசப் போட்டிகள் குறைவு என்பதால் பல வீரர்கள் உலகம் முழுவதுமுள்ள லீக்குகளில் விளையாடி பட்டை தீட்டப்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர்.
அணித்தலைவர் மொஹமட் நபி, நஜிபுல்லாஹ் ஸட்ரான், ஹஸரத்துல்லா ஸஸாய், அஃப்ஸர் ஸஸாய் என அதிரடியாகத் துடுப்பெடுத்தாடக் கூடிய வீரர்களுடன், இப்ராஹிம் ஸட்ரான், ஹஷ்மதுல்லாஹ் ஷகிடி என இனிங்ஸை நகர்த்திச் செல்லக்கூடிய வீரர்களும் காணப்படுகின்றனர்.
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ரஷீட் கான் தலைமையில் முஜீப் உர் ரஹ்மான், நூர் அஹ்மட் என சுழற்பந்துவீச்சுப் பட்டாளமே காணப்படுவதுடன், வேகப்பந்துவீச்சிலும் விக்கெட்டுகளை வீழ்த்தும் பஸல்ஹக் பரூக்கி, நவீன்-உல்-ஹக் ஆகியோர் காணப்படுவது ஆப்கானிஸ்தானை மேலும் பலமாக்குகிறது.
குழாம்: மொஹமட் நபி (அணித்தலைவர்), நஜிபுல்லாஹ் ஸட்ரான் (உப அணித்தலைவர்), அஃப்ஸர் ஸஸாய், அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாய், பரீட் அஹ்மட், பஸல்ஹக் பரூக்கி, ஹஷ்மதுல்லாஹ் ஷகிடி, ஹஸரதுல்லாஹ் ஸஸாய், இப்ராஹிம் ஸட்ரான், கரிம் ஜனட், முஜீப் உர் ரஹ்மான், நஜிபுல்லாஹ் ஸட்ரான், நவீன்-உல்-ஹக், நூர் அஹ்மட், ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ், ரஷீட் கான், சமியுல்லாஹ் ஷின்வாரி.
அடுத்து மூன்றாவது அணியான பங்களாதேஷை நோக்குகையில் ஒரு காலத்தில் சிறந்த அணியொன்றாக வளர்ச்சி கண்டு வந்த அணியானது தொடர்ச்சியான மாற்றங்கள், கிரிக்கெட் சபைத் தலைவரின் தலையீடுகள், களத்துக்கு வெளியேயான விடயங்களால் சரிவை எதிர்நோக்குகின்றது.
அணித்தலைவராகப் பெயரிடப்பட்டுள்ள ஷகிப் அல் ஹஸன், முன்னாள் அணித்தலைவர் மகமதுல்லா, முஷ்பிக்கூர் ரஹீம் ஆகியோர் அண்மைய காலங்களில் ஓட்டங்களைப் பெறாமை சிக்கலுக்குரியதாகக் காணப்படுகின்றது.
இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளிலிருந்து தமிம் இக்பால் ஓய்வு பெற்றுள்ளமையும், நுருல் ஹஸன் காயமடைந்துள்ளமையும் பங்களாதேஷுக்கு பின்னடைவாகக் காணப்படுவதுடன், ஷொரிஃபுல் இஸ்லாம் தெரிவுசெய்யப்படாமை ஆச்சரியமளிக்கிறது.
துடுப்பாட்டத்தைப் பொறுத்த வரையில் அஃபிஃப் ஹொஸைன் மாத்திரமே அண்மைய காலங்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவராகக் காணப்படுகின்றார். சுழற்பந்துவீச்சைப் பொறுத்தவரையில், ஷகிப் அல் ஹஸன், நசும் அஹ்மட், மஹெடி ஹஸன், மெஹிடி ஹஸன் மிராஸ் எனப் பலமானதாகவே காணப்படுகின்றது. முஸ்தபிசூர் ரஹ்மான், தஸ்கின் அஹ்மட் என வேகப்பந்துவீச்சும் சொல்லிக் கொள்ளும்படியாகவே காணப்படுகின்றது.
குழாம்: ஷகிப் அல் ஹஸன் (அணித்தலைவர்), அனாமுல் ஹக், முஷ்பிக்கூர் ரஹீம், அஃபிஃப் ஹொஸைன், மொஷாடெக் ஹொஸைன், மகமதுல்லாஹ், மஹெடி ஹஸன், மொஹமட் சைபுடீன், முஸ்தபிசூர் ரஹ்மான், நசும் அஹ்மட், சபீர் ரஹ்மான், மெஹிடி ஹஸன் மிராஸ், தஸ்கின் அஹ்மட், எபொடொட் ஹொஸைன், பர்வேஸ் ஹொஸைன் எமோன், மொஹமட் நைம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago