2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

பாராளுமன்றத்தில் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

Mayu   / 2024 ஜூலை 05 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற தத்துவங்களும் சிறப்புரிமைகளும் சட்டம் மற்றும் தற்கால ஊடகப் பயன்பாடு தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு பாராளுமன்றத்தில் 
பாராளுமன்ற தத்துவங்களும் சிறப்புரிமைகளும் சட்டம் மற்றும் ஊடகப் பயன்பாடு தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் வெள்ளிக்கிழமை (04) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. 


இலங்கை பாராளுமன்றத்தின் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் என்பன இணைந்து இந்த செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தன. 

ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சமல் ராஜபக்ஷ, நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ, பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன, சட்டவாக்க சேவைகள் திணைக்கள பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டனர்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நெரின் புள்ளே இதன்போது பிரதான உரை நிகழ்த்தினார். அதனையடுத்து, பாராளுமன்ற தத்துவங்களும் சிறப்புரிமைகளும் சட்டம் தொடர்பான சட்ட ரீதியான தன்மைகள் தொடர்பில் நிபுணர்கள் குழுவுடன் கேள்வி, பதில் நிகழ்வும் இடம்பெற்றது. 
கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஊடகவியலாளர்களை ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை குழு முன்னிலையில் அழைப்பதற்கு ஏற்பட்டமை மற்றும் எதிர்காலத்தில் அவ்வரான நிலைமை ஏற்படுவதை தவிர்ப்பதற்கு ஊடகவியாளர்களை தெளிவூட்டுவதும் அவர்களது அறிவை இற்றைப்படுத்துவதும் இந்த செயலமர்வில் குறிக்கோளாகும். 

இங்கு உரையாற்றிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிடுகையில்: பாராளுமன்றத் தகவல்களை உண்மையாகவும் பிழைகள் இன்றியும் அறிக்கையிடுவது ஊடகவியலாளர்களின் பிரதான பொறுப்பாகும் எனத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் அடிப்படை அற்ற, பிழையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் அவை அனைத்தையும் செய்தியாக அறிக்கையிடுவது எந்தளவு நியாயமானது என சிந்தித்துப் பார்க்க வேண்டும் என சபாநாயகர் குறிப்பிட்டார். 

அத்துடன், ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சமல் ராஜபக்ஷ குறிப்பிடுகையில், கடந்த பாராளுமன்றக் கூட்டத்தொடரில் 51 சிறப்புரிமை கேள்விகள் இடம்பெற்றதாகவும், இந்தக் கூட்டத்தொடரில் இதுவரை 16 சிறப்புரிமை கேள்விகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். இவற்றில் அதிகமானவை ஊடகங்களில் வெளியிடப்பட்ட விடயங்கள் எனவும் அதனால் ஊடகங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகிய இரு தரப்பினரும் சிறந்த புரிதலுடன் செயற்படுவது முக்கியமானது எனவும் சுட்டிக்காட்டினார். 

இங்கு கருத்துத் தெரிவித்த நீதியமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ தெரிவிக்கையில், ஜனநாயகம் வெற்றிகரமாக செயற்படுவதற்கு உண்மையான தகவல்களை மக்களுக்கு கொண்டுசேர்ப்பது மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்தார். பிழையான தகவல்கள் மக்களுக்கு கிடைக்குமானால் மக்களால் எடுக்கப்படும் அனைத்துத் தீர்மானங்களும் பிழையானதாகும் எனவும், உண்மையான தகவல்களை வழங்குவதற்கு ஊடகங்களுக்கு பாரிய பொறுப்பு காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். 
அத்துடன்இ பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன குறிப்பிடுகையில், இந்த செயலமர்வு புதிய அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு மாத்திரமல்லாமல் இந்தத் துறையுடன் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்குக் காணப்படும் சிக்கல்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான சிறந்த வாய்ப்பாகும் எனக் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X