Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 13, வியாழக்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 24 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
குமாரி இசானியின் அரங்கேற்றம் இலண்டன் மாநகரில் உள்ள Watersmeet அரங்கில் அரங்கு நிறைந்த மக்களுடன் செப்டெம்பர் மாதம் இரண்டாம் திகதி அரங்கேறியது. மேடை அலங்காரமும், ஆடை அலங்காரமும் நேர்த்தியாக கண்களைக் கவரும் வகையில் சிறப்பாக இருந்தன.
கலைக் குடும்பத்தில் தோன்றிய நான்காவது தலைமுறையினள் இந்த இஷானி. இவரின் பூட்டனாரும் பாட்டியும் சிறந்த நடனக் கலைஞர்களே. தாயாரையே குருவாகப் பெற்ற பாக்கியசாலி.
சற்றே வித்தியாசமான புதிய படைப்பாற்றலுடன் கூடிய புஷ்பாஞ்சலியும் அலாரிப்புமாக நிகழ்வு ஆரம்பித்தது. இறை வணக்கம், குரு வணக்கம், அவை வணக்கம், கணேஷ நிருத்தியாஞ்லியும் அதி அற்புதமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து ஜதீஸ்வரமும், குருநாத சுவாமி மேல் இயற்றப்பட்ட சப்தமும் அழகுற அரங்கத்தினரின் கண்களைக் குளிர வைத்தன.
ஐம்பது நிமிடங்களை எடுத்துக் கொண்ட வர்ணம். நாயன்மார்கள் மேல் ஈசன் காட்டிய திருவிளையாடல்களை நவரசங்கள் மூலம் மிக மிக அற்புதமாக, சிறந்த முகபாவனையுடன் ஆடி அசத்தியிருந்தார்.
கூத்தப் பெருமானின் கண்களிலிருந்து வடிந்த குருதியை கண்ட கண்ணப்ப நாயனரரின் மனவேதனையை இஷானி தன் முகபாவத்தில் கொண்டு வந்து நாயன் மார்களின் வரலாற்றை கண்முன்னே நிறுத்தி விட்டார். சிவனை மறைத்து நின்ற நந்திதேவரால் ஈசனை பார்க்க முடியாது துடித்த நந்தனாரின் பக்திப் பரவசத்தை நர்த்தகியின் கண்களில் கண்டு வியந்தேன். நேர்த்தியான முறையில் அமைந்த கீர்த்தனை, கண்ணன் பாடலுக்கு மிகவும் அருமையான நடனம் என்று கண்களுக்கும் மனதிற்கும் குளிர்மையான விருந்து தொடர்ந்து கொண்டே இருந்தது.
இராமன் மேல் சூர்ப்பனகை கொண்ட காதலை சிறப்பான முகபாவனையுடன் பதத்தில் சித்தரிந்திருந்தார். இதனைத் தொடர்ந்து விறுவிறுப்பான தில்லானாவும் நிறைவாக மங்களமும் அரங்கு நிறைந்த மக்களின் கைத்தட்டல்களினால் அரங்கை அதிர வைத்தன.
கணீரென்ற குரலில் அமைந்த நாட்டிய கலா வித்தகர் அபிராமி அவர்களின் நட்டுவாங்கமும், நீண்ட ஐதிக் கோர்வைகள், ஜதி சொல்லும் முறை, நேர்த்தியான நடன அமைப்பு என்று எல்லாமே மிகவும் அற்புதம். நர்த்தகியின் நடனத்தில் அங்க சுத்தம், அடவு சுத்தம், முத்திரை சுத்தம் என்பவை அருமையாக இருந்தன. உடுப்பி .s. சிறீநாத்தின் வாய்ப்பாட்டும், சிறீ .சி. ஜலதரன் அவர்களின் வயலின் இசையும் சிறீ. ஞானவரதனின் புல்லாங்குழல் இசையும், சிறீ. சிதம்பரநாதன் அவர்களின் மோர்சிங் இசையும் இணைந்து அவர்களது பங்களிப்பை மிகவும் அற்புதமாக வழங்கியிருந்தன. மிருதங்க வித்துவான் சிறீ. பாலசந்திரன் அவர்களோ தமது தாள லயத்தினால் ஆடலுக்கு உயிர் கொடுத்து அரங்கேற்றத்தை மேலும் சிறப்படையச் செய்திருந்தார். திருமதி ஆனந்தராணி பாலேந்திரா தனக்கே உரிய பாணியில் அருமையாக இரசிக்கும் வகையில் நிகழ்வினை தொகுத்து வழங்கியிருந்தார்.
அன்றைய அரங்கேற்றத்தில் இஷானியின் அற்புதமான நடனநிலை கண்டேன். அனைத்து நிகழ்ச்சிகளிலும் புதிய படைப்பாற்றலையும் காண முடிந்தது. ஆசிரியை அபிராமியின் கடின உழைப்பும், மாணவியின் சிறந்த ஆற்றலும் வெளிப்பட்டன. இசானியின் கலைப் பயணம் மேலும் மேலும் வளர்ந்து தொடர வேண்டும் என்று எம்பெருமான் ஈசனை வேண்டுகிறேன்.
திருமதி. அகல்யா நித்தியலிங்கம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago