Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Janu / 2024 செப்டெம்பர் 12 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளைஞர் யுவதிகளுக்கு உலகளாவிய தரத்திற்கு ஏற்ப உயர்கல்வி வாய்ப்புக்களைப் பெறும் சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில் அரச மற்றும் தனியார் துறையில் பல புதிய கல்வி நிறுவனங்கள் நாட்டில் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு காலிமுகத்திடல் ஹோட்டலில் வியாழக்கிழமை (12) முற்பகல் இடம்பெற்ற “Times School of Higher Education” உயர் கல்விக்கான பாடசாலைத் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
வரையறுக்கப்பட்ட விஜய பத்திரிகை நிறுவனத்துடன் இணைந்ததாக டைம்ஸ் உயர்கல்வி நிறுவனம் நிறுவப்பட்டு, மூன்று வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து சர்வதேச தரத்திற்கு ஏற்ப கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மூன்று முக்கிய தகுதிப் பிரிவுகளின் கீழ் பலதரப்பட்ட தொழில் சார்ந்த கற்கை நெறிகள் இங்கு வழங்கப்படுகின்றன. அதன்படி சான்றிதழ், டிப்ளமோ, உயர் டிப்ளமோ கற்கைகள் மற்றும் டிஜிட்டல் அகடமி ஊடாக தொழில்முறை திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பட்டப்பின் படிப்புகள் இங்கு நடத்தப்படும்.
டைம்ஸ் உயர்கல்வி நிறுவனத்தின் செயல்பாடுகள் விஜய பத்திரிகை நிறுவனத்தினால் நியமிக்கப்படும் துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்ட ஐந்து பேர் கொண்ட ஆலோசனைக் குழுவால் நிர்வகிக்கப்படும். இளைஞர்கள் எதிர்காலத்தில் பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைவதன் மூலம் உலகத் தரத்திற்கு ஏற்ப தரமான கல்வியை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்று நிர்வாகக் குழு கூறுகிறது.
இதன் போது “Times School of Higher Education” என்ற புதிய இணையதளத்தையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது;
இன்று, நாம் எதிர்பார்க்கும் நவீன கல்வி முறைக்குரிய டைம்ஸ் உயர்கல்வி நிறுவனத்தைத் திறந்து வைத்தேன். உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த பின்னர் டிப்ளோமா கற்கைகளைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை இந்த நிறுவனம் வழங்க இருக்கிறது.
ஏற்றுமதிப் பொருளாதாரத்தை நோக்கிச் செல்ல வேண்டுமானால், 21ஆம் நூற்றாண்டின் மத்தியில் எதிர்காலத்தை நோக்கிச் செல்வதாயின், நமது நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு புதிய அறிவு தேவைப்படுகிறது. எனவே, எதிர்காலத்தில் இதுபோன்ற பல நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும். இந்த நிறுவனம் டிஜிட்டல் அகாடமியையும் கொண்டுள்ளது. இந்த கல்வி நிறுவனங்களால் நம் நாட்டு இளைஞர்கள் பெரிதும் பயனடையலாம்.
50,000 இளைஞர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் ஊடாக தொழில் பயிற்சி வழங்க அரசாங்கம் நிதியுதவி அளிக்கவுள்ளது. அந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு இவ்வாறான நிறுவனங்களை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களாக மாற்றும் திறன் எங்களிடம் உள்ளது. தற்போதுள்ள பயிற்சி நிறுவனங்களுக்கு மேலதிகமாக இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.
மேலும், அடுத்த சில ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சியுடன், முதலீட்டு வாய்ப்புகள் அதிகரித்து, புதிய தொழில்கள் ஆரம்பிக்கும்போது, அரச மற்றும் தனியார் துறைகளில் சுமார் 100,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
மேலும் நாம் உருவாக்க நினைக்கும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு, இதுபோன்ற நிறுவனங்கள் அவசியம். எனவே, நமது நாட்டில் இதுபோன்ற கல்வி நிறுவனங்களை அரச மற்றும் அரச சாராத வகையில் அதிகரித்து, இந்த நாட்டின் இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகளைத் தேடுவதற்குத் தேவையான ஆதரவை வழங்க எதிர்பார்க்கிறோம்" என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைன் (H.E. David Pine), வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், டைம்ஸ் உயர்கல்விப் பாடசாலையின் பணிப்பாளர் பொறியியலாளர் ஜனக ரத்னகுமார உள்ளிட்ட நிர்வாக சபை உறுப்பினர்கள்,விஜய பத்திரிகை நிறுவன தலைவர் ரஞ்சித் விஜேவர்தன உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago