2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

MMCA கண்காட்சி...

Janu   / 2025 மார்ச் 19 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவீன மற்றும் சமகாலக்கலைக்கான இலங்கை அருங்காட்சியகமானது (MMCA இலங்கை) தமது ‘முழுநில அமைப்பு’ கண்காட்சியின் மூன்றாவதும் இறுதியானதுமான சுழற்சிப் படைப்புகளை மார்ச் 15ம் திகதி அன்று ஆரம்பித்துள்ளது.  சந்தேவ் ஹன்டி மற்றும் தினால் சஜீவவினால் எடுத்தாளப்படும் இக் கண்காட்சியானது 2025 மார்ச் 29ம் திகதி அன்று நிறைவுறும்.

‘முழு நில அமைப்பு’ கண்காட்சியானது இலங்கையின் நில அமைப்பு எவ்வாறு பரந்து விரிந்து சுவாரஸ்யமான விதங்களில் மாற்றப்பட்டுள்ளது என்பதை ஆராய்கின்றது. இக் கண்காட்சியில் பாரம்பரிய முறையில் நிலத்தோற்றத்தை காட்சிப்படுத்துவதை கடந்து புதிய முறையில் காட்சிப்படுத்தும் 29 சமகால கலைஞர்களின் படைப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இவர்களின் படைப்புகள், நிலத்தைப் பற்றிய கண்ணோட்டங்கள் எவ்வாறு கட்டியமைக்கப்பட்டுள்ளன மற்றும் விவாதிக்கப்படுகின்றன என்பதை உள்ளடக்கியுள்ளன.

‘முழு நில அமைப்பு’ எனும் கண்காட்சியானது நிலத்துடன் எமக்குள்ள உறவை முழுமையாக மீள நோக்க உந்தி மாற்றியமைக்கும் கலைப்படைப்புகளைக் கொண்டுள்ளது. “வழமையான பார்வையை விடுத்து மாறுபட்ட கோணத்தில் நோக்கும் முறைகளைத் தரும் கலைஞர்களை ஒருங்கே கொணர்கிறது ‘முழு நில அமைப்பு’ கண்காட்சியின் இறுதிச் சுழற்சி. நிலம், வரலாறு, சூழலியல் பற்றிய எமது புரிதல்களை வரையறுக்கும் சட்டக அமைப்புகளை நேரடியாகவும் , கருத்தியலாகவும் நாம் மீளவரையறுத்துக் கொள்ள எம்மை இட்டுச் செல்கிறார்கள் இக் கலைஞர்கள்.

MMCA இலங்கையின் சிரேஷ்ட எடுத்தாளுநர் சந்தேவ் ஹன்டி கூறுகையில் ,  

“சட்டகமிடுவது என்பது எப்போதுமே நடுநிலையானதல்ல - எம்மைச் சுற்றியுள்ள நில அமைப்புகளை நாம் எப்படிப்பார்க்கிறோம், அவை எப்படி மறைக்கப்பட்டுள்ளன, அவற்றுடன் நாம் எப்படித் தொடர்புறுகிறோம் என்பதை அது வரையறுக்கிறது. அங்கிங்காக நிறைந்து கிடக்கும் நோக்குகள் முதலாகப் புதைந்து போய்க் கிடக்கும் தேசியக் கதைகள் வரை இப் படைப்புகளில் பிரதிநிதித்துவப்பட்டிருக்கும் செய்தியானது நில அமைப்புகள் ஆனவை வெறுமனே பின்னணிகள் மட்டுமல்ல, வெளிக்கொணரக் காத்திருக்கும் நினைவுகள், வாதவேறுபாடுகள், கற்பனைகள் நிறைந்த வெளிகள் அவை என்பதைஎமக்கு நினைவுறுத்துவதாக அமைகிறது,” என அவர் மேலும் தெரிவித்தார்.

‘முழு நில அமைப்பின் சுழற்சி 3ல் உள்ள கலைஞர்கள் பந்து மன்னம்பெரி (பி.1972), தனுஷ்க மாரசிங்க (பி.1985), தேஷான் தென்னக்கோன் (பி.1977), இசுறி தயாரட்ண (பி.1985), லகி சேனநாயக்க (1937–2021), எம். விஜிதரன் (பி.1985), முஹன்னத் காதர் (பி.1966), ருவின் டி சில்வா (பி.1986), சகினா அலியக்பர் (பி.1996), சுந்தரம் அனோஜன் (பி.1991) மற்றும் றாஷியா டி மெல் (பி.1991). “இரு வருடங்களாக பணி ஆய்வுகளுக்குட்படுத்தப்பட இக் கண்காட்சியானது, நில அமைப்புக் குறித்த எமது எடுத்தாளல் ஆய்வுகளின் நுனிப்புல்லை மட்டுமே காண்பிக்கிறது,” எனக் குறிப்பிட்ட MMCA இலங்கையின் உதவி எடுத்தாளுநர் சஜீவ, “பல்வேறுபட்ட பார்வையாளர்களிடமிருந்து எமக்குக் கிடைத்த வரவேற்பு அளப்பரியது.

மாணவர்களுக்கான எமது தயாரிப்புகள் மற்றும் பொது மக்களுக்கான நிகழ்வுகளுக்கு என வருகை தந்த 900 பங்கேற்பாளர்கள் உட்பட இதுவரை 10,000 க்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டுள்ளனர். அருங்காட்சியக நுழைவு, எமது பொது நிகழ்ச்சிகளுக்குமான நுழைவிற்குக் கட்டணம் அறவிடப்படுவதில்லை. இலங்கை வாழ் மக்கள் அல்லது இலங்கைக்கு வருபவர்கள் ஒரு தடவை எமது அருங்காட்சியகத்திற்கு வருகை தந்து ‘முழு நில அமைப்பு’ சுழற்சி 3 னைப் பார்வையிட வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்,” என  தெரிவித்தார்.

நவீன மற்றும் சமகாலக்கலைக்கான இலங்கை அருங்காட்சியகம் (MMCA இலங்கை), கல்வியை முதன்மைப்படுத்தும் ஒரு முன்முயற்சியாகும். பொதுமக்கள், பாடசாலைகள், மற்றும் சுற்றுலா பயணிகளின் நலன் மற்றும் இன்பத்திற்காக, நவீன மற்றும் சமகால கலைகளின் காட்சி, ஆராய்ச்சி, சேகரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட பொது அருங்காட்சியகத்தை நிறுவுவதே இதன் நோக்கமாக உள்ளது. அருங்காட்சியகம் தினமும் மு.ப 10 மணி முதல் பி.ப 6 மணி வரை (பௌர்ணமி மற்றும் பொது விடுமுறை நாட்களைத் தவிர), கொழும்பு 3இல் அமைந்துள்ள க்ரெஸ்கட் புலவாட் இன் தரைத்தளத்தில் திறந்திருக்கும். மேலும், அருங்காட்சியகத்துக்கும் அதன் அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இலவசம் ஆகும்.

அருங்காட்சியகம், அதன் கண்காட்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களை அவர்களின் இணையதளமான www.mmca-srilanka.org இல் அல்லது முகநூலில் facebook.com/mmcasrilanka மற்றும் இன்ஸ்டகிராமில் instagram.com/mmcasrilanka/ பார்த்து அறியலாம்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .