2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

கொழும்பு மாநகர சபைக்கும் தேர்தல் தடை

Editorial   / 2025 ஏப்ரல் 07 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கொழும்பு மாநகர சபை உட்பட பல உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை மே 16 ஆம் திகதி வரை நடத்துவதைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் திங்கட்கிழமை (07) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு மாநகர சபைக்கு மேலதிகமாக குளியாப்பிட்டிய, ஹரிஸ்பத்துவ, உடபளாத்த, பன்வில மற்றும் பாத்ததும்பர பிரதேச சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

வேட்புமனுக்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்ததால் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலித்த பின்னர் மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

மனுவை விசாரிக்க அனுமதி அளித்த நீதிமன்றம், மே 16 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி தங்கள் சமர்ப்பனங்களை முன்வைக்குமாறு பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது, மேலும் அந்த திகதி வரை தொடர்புடைய உத்தரவு அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டது.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தற்காலிகத் தலைவர் நீதியரசர் முகமது லாஃபர் தாஹிர் மற்றும் நீதியரசர் கே.பி. பெர்ணாந்து ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.  இந்த மனுக்களில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பிற கட்சிகள் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

பிறப்புச் சான்றிதழ்கள் சமாதான நீதிபதிகளால் சான்றளிக்கப்பட்டதால் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 53 மனுக்களை நீதிமன்றம் பரிசீலித்தது.

மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மனோகர ஜெயசிங்க, உயர் நீதிமன்றம் இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ளதால், அந்த உத்தரவு செல்லுபடியாகும் என்றும், அதன்படி, மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்றும் கூறினார்.

உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைப்பதால் மக்களின் வரிப் பணம் வீணாகி, நாடு மேலும் படுகுழியில் விழுவதாகவும், இதற்கு சில அதிகாரிகள் பொறுப்பு என்றும், அவர்களின் செயல்கள் இதைப் பாதிக்கின்றன என்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

பிரதி சொலிசிட்டர் ஜெனரலின் வாதம் சரியானது என்றும், இரு தரப்பினருக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் தற்காலிக தலைமை நீதியரசர் லாபர் தாஹிர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மனுதாரர் மற்றும் பொதுமக்களின் உரிமைகளைக் கருத்தில் கொண்டு, இரு தரப்பினருக்கும் நியாயமான முடிவு வழங்கப்பட வேண்டும் என்று கூறி, மே 16 ஆம் திகதி மனுக்களை பரிசீலிக்க தற்காலிக தலைமை நீதியரசர் லாபர் தாஹிர் முடிவு செய்தார்.

மனுதாரர்கள் சார்பாக, ஜனாதிபதி வழக்கறிஞர் பைசர் முஸ்தபா மற்றும் நிஜாம் காரியப்பர் ஆகியோருடன், வழக்கறிஞர் சாமர காரியவசம் ஆஜரானார்.

பிரதிவாதிகள் சார்பாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மனோகர ஜெயசிங்க ஆஜரானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X