2024 நவம்பர் 23, சனிக்கிழமை

“பிள்ளை மடுவத்தில் வளர்ந்தவர்களும் நாடாளுமன்றத்துக்கு செல்லலாம்’”

Kogilavani   / 2017 ஒக்டோபர் 06 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இன்று சிறுவர் அபிவிருத்தி நிலையங்களாக அமைக்கப்டுபவை ஒரு காலத்தில் பிள்ளை மடுவங்கள் என்றே அழைக்கப்பட்டன. சிறுபராயத்தில் அந்த பிள்ளை மடுவத்தில் வளர்ந்த நாங்களும் இன்று நாடாளுமன்றம் செல்ல முடியும் என்பதை நிருபித்துள்ளோம். எனவே காலி பிரதேசத்தில் இருந்தும் நாளை அரசியல் ரீதியாக மக்களை பிரதிநிதித்துவம்  செய்பவர்கள்  உருவாக வேண்டும். அதற்கான நம்பிக்கையை உருவாக்கவே   காலிக்கு வந்துள்ளேன்” என   நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

 

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் வேண்டுகோளுக்கமைய, மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சால் காலி மாவட்டம், பென்தொட்ட தோட்டத்தில் அமைக்கப்பட்ட சுமார் 65 இலட்சம் ரூபாய் பெறுமதியான  சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் திறப்பு விழா, நேற்று நடைபெற்றது

மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சர் சந்ராணி பண்டார தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் காணி அபிவிருத்தி, நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சருமான கயந்த கரணாதிலக்க பிரதம அதிதியாகவும் மலைநாட்டு பதிய கிhமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் சிறப்பு அதிதியாகவும் அழைக்கப்பட்டிருந்தனர். அமைச்சர் திகாம்பரத்தின் பிரதிநிதியாக மேற்படி விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“நாங்கள் நுவரெலியா மாவட்ட பிரதிநிதிகள். ஆனபோதும் நுவரெலியா மாவட்டத்துக்கு  வெளியே வாழும் மலையக மக்கள் தொடர்பில் கவனமெடுத்து பணியாற்றி வருகின்றோம். அந்த வகையில், வெளி மாவட்டங்களுக்கு சென்று சேவையாற்றும் வாய்ப்பை நாம் அதிக அளவில் மேற்கொண்டு வருகின்றோம்.

“உலக வங்கியின் உதவியுடன், மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சால் முன்னெடுக்கப்படும் சிறுவர் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தில், பெருந்தோட்டப்பகுதிகளும் உள்ளடக்கப்படல் வேண்டும் என, எமது அமைச்சர் திகாம்பரம் விடுத்த கோரிக்கையின் பேரில், பெருந்தோட்ட பகுதிகள் அமைந்துள்ள பல மாவட்டங்களிலும் சிறுவர் பாடசாலையும் அபிவிருத்தி நிலையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

அவற்றுள் முதலாவது நிலையம் காலி மவாட்டத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவிலே பங்குபற்றும் அமைச்சர் கயந்த கரணாதிலக்க, சந்ராணி பண்டார உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இந்த சிறுவர் அபிவிருத்தி நிலையத்தை திறந்து வைக்கும் அனுபவம் கிடைக்கின்றது. ஆனால், இங்கு கலந்துகொண்டு உரையாற்றுபவர்களுள் எனக்கு மட்டுமே,  இத்தகைய நிலையம் ஒன்றில் வளர்ந்த அனுபவம் உள்ளது என நினைக்கிறேன்.

அந்த நாட்களில் பிள்ளை  காம்பராக்கள் அல்லது பிள்ளை மடுவங்கள் என அழைக்கப்பட்ட இந்த நிலையங்களில்தான் எங்கள் சிறுபராயத்தை நாங்கள் கழித்தோம். எங்களை பிள்ளை மடுவங்களில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுவிடும் தாய்மார் திரும்பிவரும்வரை ஆயாக்களின் பராமரிப்பிலேயே நாம் வளர்ந்தோம்.

இன்று ஆயாக்களின் பராமரிப்பு மாத்திரம் அல்லாமல் ஆசிரியர்களைக்கொண்டு முன்பள்ளியும் நடத்துவதற்கான சூழல், இந்த சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் ஏற்படுத்திக்கொடுக்கப்படுகின்றது. அன்று, பிள்ளை மடுவங்களில் வளர்ந்த என்னைப்போன்றவர்கள் பல்கலைக்கழக கல்வி வரை செல்லமுடிந்ததோடு மக்கள் பணி செய்து நாடாளுமன்றமும் சென்றுள்ளோம்.

இன்று இந்த சிறுவர் பள்ளியில் பயன்பெறும் மாணவர்கள் அத்தகைய இலக்கு நோக்கி பயணிப்பவர்களாக இருக்க வேண்டும் எனும் நம்பிக்கையை ஊட்டுவதற்காகவே நான் காலிக்கு வருகை தர விரும்பினேன்.

எனது அனுபவங்கள் இங்குள்ள  சிறார்களுக்கு நம்பிக்கை தருவதாக அமைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. எதனையும் தன்னிம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள். நாளை இங்கு வாழும் மக்களின் அரசியல் பிரதிநிதியாக நீங்கள் வரவேண்டும். பல்வேறு வசதி வாயப்புகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறுவர் பாடசாலை நாளை பெரியதோர் பள்ளிக்கூடமாக மாறவேண்டும். அதற்கு உங்கள் உழைப்பும் அர்ப்பணிப்புமே அவசியமாகிறது” எனவும் தெரிவித்தார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X