2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

’வயதெல்லையை 45ஆக அதிகரிக்கவும்’

Editorial   / 2020 பெப்ரவரி 09 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத், ஏ.ஆர்.எம்.றிபாஸ்

வேலையற்ற பட்டதாரிகளை அரச சேவைக்குச் சேர்த்துக்கொள்ளும் புதிய வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 35 என்று வரையறுக்கப்பட்டுள்ள வயதெல்லையை, 45ஆக உயர்த்துமாறு வலியுறுத்தி, கிண்ணியா வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குக் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

அரச சேவையில் 50 ஆயிரம் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியிருக்கும் நிலையில், இந்த வேலைத்திட்டத்தில், 35 வயதுக்கு மேற்பட்டோர் புறக்கணிக்கப்பட்டு உள்ள​னரெனவும், குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பட்டதாரிகளுக்கு ஜனாதிபதியால் வேலைவாய்ப்புகள் வழங்கும்போது, வயதெல்லை, ஆண்டு, உள்வாரிப் பட்டதாரிகள், வெளிவாரிப் பட்டதாரிகள், வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றமை உள்ளிட்ட விடயங்கள் கவனத்திற்கொள்ளப்பட மாட்டாதென்று தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், குறித்த வேலைவாய்ப்புக்காக விநியோகிக்கப்படும் விண்ணப்பங்களில், வயதெல்லை 35 எனக் குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும், இதனால், 35 வயதைத் தாண்டிய பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவே தாங்கள் கருதுவதாகவும், அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தில், 35 வயதுக்கு மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் 62 பேர் உள்ளனரெனவும் திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக, 200க்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள், 35 வயதைப் பூர்த்தி செய்தவர்களாகக் காணப்படுகின்றனர் எனவும், குறித்த சங்கத்தின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தால், கிண்ணியா அப்துல் மஜீத் வித்தியாலயத்தில் நடத்தப்பட்ட ஊடகச் சந்திப்பொன்றின் போதும், இந்த வயதெல்லைப் பிரச்சினை தொடர்பில் வலியுறுத்தப்பட்டது.

இது தொடர்பில், கருத்துத் தெரிவித்த திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கே.றஹ்மத்துல்லா, திருகோணமலை மாவட்டத்தில், 35 வயதுக்கு மேற்பட்ட சுமார் 290 வேலையற்ற பட்டதாரிகள் பல்வேறு பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வருகின்ற நிலையில், வேலைவாய்ப்புக்கான பட்டதாரிகளின் தெரிவின்போது, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர், வயதெல்லை பற்றி அவதானித்து, அவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .