2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கவனயீர்ப்பு

Freelancer   / 2023 பெப்ரவரி 17 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன்  கியாஸ்

திருகோணமலை, வெள்ளைமணல் முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், இன்று (17) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வருடம் மார்ச் மாதம் ஆரம்பமாக உள்ள 2022ஆம் ஆண்டின் கல்வி நடவடிக்கைகளுக்காக தரம் ஒன்றில் தங்களுடைய பிள்ளைகளை சேர்த்துக் கொள்வதில் உள்ள பிரச்சினைகளை முன்வைத்தே இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

வெள்ளைமணல் முன்பள்ளியில் 52 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். இந்த மாணவர்களை அருகில் உள்ள அல் அஸ்கர் மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் இணைத்துக் கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

காரணம் அந்தப் பாடசாலை, ஆயிரம் பாடசாலை திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டதாகும். இதனால் இங்கு  6 தொடக்கம் 13 வரையான வகுப்புகளே உள்ளன.

இந்த நிலையில், இந்தப் பிரதேச மக்கள்  தரம் ஒன்றில் தங்களுடைய பிள்ளைகளை சேர்ப்பதற்கு பல கிலோமீற்றர் தொலைவிலுள்ள கருமலைஊற்று, நாச்சிகுடா, சின்னம்பிள்ளைசேனை மற்றும் கிண்ணியா  ஆகிய பிரதேச பாடசாலைகளையே தெரிவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.

இவ்விடயம் குறித்து பெற்றோர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “கூலித் தொழில் வேலை செய்து, வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற  நாங்கள்,  தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக ஒருவேளை உண்ணுவதற்கே கஷ்டப்படுகின்ற நேரத்தில், பிள்ளைகளின் கல்விக்கான ஓட்டோ போக்குவரத்துச் செலவைகளை எவ்வாறு ஈடு செய்ய முடியும்? அத்தோடு, சிறுவர்களின் பாதுகாப்பு குறித்தும் நாங்கள் கவலைப்படுகின்றோம்.

“இதன் காரணமாக, எங்கள் பிள்ளைகளின் கல்வி கற்கின்ற உரிமையை, பிள்ளைகளின் சொந்த பிரதேசத்திலே பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

“இதற்காக, தற்போது 06 தொடக்கம் 13 வரை வகுப்புகளை கொண்டு இயங்கி வரும் வெள்ளைமணல் அல் அஸ்கர் மகா வித்தியாலயத்தில் 1 தொடக்கம் 6ஆம் ஆண்டு வரையான ஆரம்பப் பிரிவுகளை ஆரம்பிப்பதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பெற்றோர்கள் தெரிவித்தனர். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X