2025 மார்ச் 05, புதன்கிழமை

’ரூ.2,000 கேட்டவருக்கு 1,700 ரூபாய் போதுமா?’

Freelancer   / 2025 மார்ச் 05 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க பெருந்தோட்ட மக்களுக்கு 1,700  ரூபாய் சம்பளத்தை வழங்கிய போது, அதற்கு அன்று எதிர்ப்பு தெரிவித்து 2,000 ரூபாய் வழங்க வேண்டும்  என்று குரல் எழுப்பிய தற்போதைய  ஜனாதிபதி  அனுரகுமார திசாநாயக்க, இன்று 1,700 ரூபாய் போதும் என்கிறார். ஆகவே பெருந்தோட்ட  மக்களின் சம்பள விவகாரத்தில் அரசாங்கத்தின்  நிலைப்பாடு  என்னவென   ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை  (04)  இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 
 
அவர் மேலும் பேசுகையில்,
  
 மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளதால் அரசாங்கம் எவரின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்காமல் செயற்பட்டு தீர்மானங்களை எடுக்கிறது. இதன் காரணமாக தேசிய கொள்கை சபை ஒன்றை நியமிக்குமாறு   யோசனை ஒன்றை கொண்டு வந்தேன். இந்த சபை  ஜனாதிபதியின் விடயதானத்துக்குள் சுயாதீனமாக செயல்பட  வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். ஆனால்,  இதுவரையில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
 
அரசியல் பழிவாங்கல் பற்றி தற்போது பேசப்படுகிறது.  இதற்கு ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் பொறுப்புக் கூற வேண்டும். அரசியல் பழிவாங்கல்களுக்கு அச்சமடைந்து அரச  சேவையாளர்கள்  சேவை கட்டமைப்பில்   அதிருப்தி அடைந்துள்ளார்கள். இந்நிலை நீடித்தால் அரச சேவை கட்டமைப்பு முழுமையாக பலவீனமடைந்து விடும்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ஷவின்  ஆட்சியில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதி பத்திரம் வழங்கப்படவில்லை.  இந்த அரசாங்கமும் வழங்கவில்லை.  அதை வரவேற்கிறோம். இருப்பினும் எமது அரசாங்கத்தின் அரச சேவையில் முகாமைத்துவம் மற்றும் நிறைவேற்று துறையினருக்கு  வாகன இறக்குமதிக்கு  அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், தற்போது  அவ்வாறில்லை.

 முன்னாள் ஜனாதிபதி  கோட்டபாய  ராஜபக்‌ஷ பெருந்தோட்ட மக்களுக்கு 1,000 ரூபாய் சம்பளத்தை வழங்கினார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 1,700 ரூபாய்  வழங்கினார். இந்த 1,700 ரூபாய் போதாது  என்று கடும் எதிர்ப்பை அப்போது வெளிப்படுத்திய தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க 2,000 ரூபாய்  வழங்க வேண்டும் என்று அன்று குறிப்பிட்டார். ஆனால் தற்போது 1,700 ரூபாய்  போதும் என்கிறார். ஆகவே பெருந்தோட்ட  மக்களின் சம்பள விவகாரத்தில் அரசாங்கத்தின் உண்மை தன்மை என்ன?

வைத்தியர்களுக்கு 1980ஆம் ஆண்டு முதல்  மேலதிக கடமைக்காக  விசேட கொடுப்பனவு வழங்கப்படுகிறது. இதனை நீக்க  வேண்டாம் என்றே  வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள். இவ்விடயம் தொடர்பில்  எவருடன் அரசாங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது? எனவே,   இவ்வாறு தன்னிச்சையாக செயற்படுவதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள கொள்ள வேண்டும்  என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .