2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மோடியின் பதவியேற்பில் பங்கேற்கும் வெளிநாட்டு தலைவர்கள்

Editorial   / 2024 ஜூன் 07 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து நாட்டின் பிரதமராக பதவியேற்க மோடி உரிமை கோர உள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (07) நடைபெறுகிறது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் திகதி வெளியான நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை.
எனினும், பாஜக 240 இடங்களைப் பெற்றது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களை பெற்றது. சமாஜ்வாதி கட்சி 37, திரினாமூல் காங்கிரஸ் 29, திமுக 22 இடங்களையும் பெற்றது. தெலுங்கு தேசம் 16, ஐக்கிய ஜனதா தளம் கட்சி 12 இடங்களையும் பெற்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் இணைந்து 293 இடங்கள் வென்றிருப்பதால் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது.
பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு கடிதங்களை ஜூன் 5ஆம் திகதியே கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வழங்கினர்.

இந்த சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பாராளுமன்ற மைய மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (07) நடைபெறுகிறது. தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் இந்த கூட்டணிக் கட்சியின் மக்களவைக் குழு தலைவராக நரேந்திர மோடி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்கும் மோடி, ஆதரவு எம்.பி.க்கள் பட்டியலை அவரிடம் வழங்கி, ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை ஜூன் 9ஆம் திகதி மாலை 6 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் எளிய விழாவில் பாஜக கூட்டணி அரசு பதவியேற்க உள்ளது.
தொடர்ந்து 3ஆவது முறை பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். அவரோடு முக்கிய அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்று தெரிகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது. மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக ஆந்திர முதல்வராக பதவியேற்கும் சந்திரபாபு நாயுடு தனது பதவியேற்பு விழாவை ஜூன் 12ஆம் திகதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாள பிரதமர் பிரசண்டா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத், பூடான் பிரதமர் தாஷோஷெரிங் டோப்கே ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .