2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

மூவர் CIDயில் முன்னிலை

Mayu   / 2024 நவம்பர் 21 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர்களான ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் வியாழக்கிழமை (21) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைதந்துள்ளனர்.

தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் அங்கீகாரம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே இவர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெள்ளிக்கிழமை (22) குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சபையில் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தின் அங்கீகாரம் தொடர்பில் அப்போது அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான 18 அமைச்சர்களிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கடந்த 11ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றில் காரணிகளை முன்வைத்த அரசாங்கத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம, போலியாக மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாகக் கூறி, முன்னாள் சுகாதார அமைச்சர் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் திகதி இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் 182 வகையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்தபோது, ​​அமைச்சரவையில் 18 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

குறித்த அமைச்சரவைப் பத்திரத்தில் எவ்வாறான மருந்துகள் தேவை என்பது குறிப்பிடப்படாததன் பின்னணியில், உண்மையில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதா அல்லது அமைச்சரவை பத்திரத்திற்கு விசாரணையின்றி எவ்வாறு அங்கீகாரம் வழங்கியது என்பதற்கான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என அரசாங்கத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான வாக்குமூலங்களை வழங்குவதற்காக, முன்னாள் அமைச்சர்களான ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க, பிரசன்ன ரணதுங்க மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரை வியாழக்கிழமை (21)  காலை 10 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட புலனாய்வு பிரிவு 01 இல் ஆஜராகுமாறு புலனாய்வு அதிகாரிகள் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X