2025 மார்ச் 22, சனிக்கிழமை

பியூமி விற்பனை செய்தது என்ன? அதிரடி நடவடிக்கை

Freelancer   / 2025 மார்ச் 21 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை மற்றும் மொடலிங் பியூமி ஹன்சமாலி தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பியூமி ஹன்சமாலியின் சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட சீராக்கல் மனுவின் அடிப்படையில், இது தொடர்பான முறைப்பாடு இன்று (21) கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க முன்னிலையில் அழைக்கப்பட்டது. 

இதன்போது, பியூமி ஹன்சமாலி சார்பாக ஆஜரான சட்டத்தரணி சுமுது ஹேவகே நீதிமன்றத்தில் உரையாற்றியபோது, 

தனது சேவைதாரர் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வருவதாகவும், அதன் கீழ் இதுவரை 34,506-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கூரியர் மூலம் அந்த பொருட்களை விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவித்தார். 

தனது சேவைதாரர் குறைந்த விலையில் அழகு சாதனப் பொருட்களை பெற்று, 30,000 முதல் 40,000 ரூபாய் வரை உயர்ந்த விலையில் விற்பனை செய்வதாக நேற்று அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டதாக சுட்டிக்காட்டிய அந்த சட்டத்தரணி அது முற்றிலும் பொய்யானது என்றும், இதனால் தனது சேவைதாரரின் தொழிலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறினார். 

அதன்படி, தனது சேவைதாரரிடமிருந்து அழகு சாதனப் பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்களை அழைத்து விசாரிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதனால் வாடிக்கையாளர்கள் பயந்து இந்த பொருட்களை வாங்குவதை தவிர்த்து, தனது சேவைதாரரின் தொழிலுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் சட்டத்தரணி தெரிவித்தார். 

மொடலிங் கலைஞராக செயல்படும் தனது சேவைதாரர் ஒரு தொழிலதிபராக உயர்ந்து வருவதில் என்ன தவறு உள்ளது என்று சட்டத்தரணி கேள்வி எழுப்பினார். 

அதன்படி, தனது சேவைதாரரின் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் விசாரணைகளை முன்னெடுப்பதைத் தடுக்க தேவையான உத்தரவுகளை வழங்குமாறு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார். 

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வாதிட்ட சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சம்பத் ராஜகருணா, 

பியூமி ஹன்சமாலி 30,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு தனது அழகு சாதனப் பொருட்களை கூரியர் மூலம் விற்பனை செய்ததாக குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார். 

2023 நவம்பர் 22 அன்று பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் பிரபல கொகெய்ன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், அந்த கடத்தல்காரருக்கும் இந்த பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார். 

பியூமி ஹன்சமாலிக்கு சொந்தமான சொகுசு மோட்டார் வாகனம் தற்போது அந்த போதைப்பொருள் கடத்தல்காரரின் வீட்டில் உள்ளதாகவும் பிரதான பொலிஸ் பரிசோதகர் சுட்டிக்காட்டினார். 

எனவே, பியூமி ஹன்சமாலி கூரியர் மூலம் விற்பனை செய்தது உண்மையில் அழகு சாதனப் பொருட்களா அல்லது ஏதேனும் சட்டவிரோத பொருட்களா என்பதை கண்டறிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும், அதற்காக தேவையான நபர்களிடமிருந்து வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார். 

இதன்போது, மேலதிக நீதவான் கூறியதாவது, விசாரணைகளுக்கு நபர்களிடமிருந்து வாக்குமூலங்களை பதிவு செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதை தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். 

இந்த நபர் தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதால், அதன் வழியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு அறிவுறுத்திய நீதவான், இந்த நபரின் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

அதன்படி, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்கு அறிக்கையிடப்பட வேண்டும் என்று நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X