2025 பெப்ரவரி 25, செவ்வாய்க்கிழமை

’’தனியார்த் துறைக்கும் சம்பளம் அதிகரிக்கப்படும்”

S.Renuka   / 2025 பெப்ரவரி 25 , பி.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஒருசில வரையறைகளுக்கு மத்தியில் தான் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு அமைய எதிர்வரும் காலங்களில் அரச மற்றும் தனியார் துறையினருக்கும் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25)  நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் 7 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மக்களுக்கு பயனுடையதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இது ரணில் விக்கிரமசிங்கவின் வரவு செலவுத் திட்டம், லிபரல் வாத திட்டம், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் என்று எதிர்க்கட்சியினர் பல விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். 

தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை கொள்கைக்கு பரஸ்பரமான வகையில் இந்த பாதீடு முன்வைக்கப்படுகிறது என்றும் குறிப்பிடுகின்றனர்.

இலங்கையில் இவ்வளவு காலமும் புதிய லிபரல்வாத கொள்கைகள் செயற்படுத்தப்படவில்லை.

லிபரல்வாத கொள்கை என்று குறிப்பிட்டுக் கொண்டு குடும்ப ஆட்சியும், முதலாளித்துவ கொள்கையையே கடந்த கால ஆட்சியாளர்கள் முன்னெடுத்தார்கள். 

அரச சேவை தொடர்பில் தற்போது பேசப்படுகிறது. எவ்விதமான முறையாக வழிமுறைகளும் இல்லாமல் தான் தற்போதைய எதிர்க்கட்சியினர் அரசியல் சேவைக்காக அரச உத்தியோகஸ்த்தர்களை கடந்த காலங்களில் விஸ்திரப்படுத்தினார்கள்.

கூட்டுப்பொறுப்பு, சமூக பொருளாதாரம் மேம்படுத்தல், சமவுடைமை ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் தான் வரவு-செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளோம்.

வங்குரோத்து நிலையடைந்த அரசாங்கத்தையே நாங்கள் பொறுப்பேற்றோம்.

அரச செலவுகளை இயலுமான வகையில் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நலன்புரி சேவைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொருளாதார சவால்களுக்கு மத்தியில் மக்களுக்கு இயலுமான வகையில் நிவாரணமளிக்கப்பட்டுள்ளது.

அதிக வளம் இருந்திருந்தால் மக்களுக்கு அதிகளவான நிவாரணம் வழங்கியிருப்போம்.

தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் மறக்கடிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்படுகிறது.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை வரவு-செலவுத் திட்டத்தில் முதல் கட்டமாக குறிப்பிட்டுள்ளோம்.

ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்படுகிறது. பாடசாலை அதிபரின் சம்பளம் 30,105 ரூபாவாலும், ஆசிரியர்களின் சம்பளம் 25,360 ரூபாவினாலும், இதர அரச சேவையாளர்களின் அடிப்படைச் சம்பளம் 15,750 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஒருசில வரையறைகளுக்கு மத்தியில் தான் அரச சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சிக்கு அமைய எதிர்வரும் காலங்களில் அரச மற்றும் தனியார் துறையினருக்கு சம்பள வேதானிகள் அதிகரிக்கப்படும்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் மாத்திரமே குற்றஞ்சாட்டுகிறார்கள். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஒருசில நிபந்தனைகளுக்கு மத்தியில் தான் வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

ஆகவே, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் எமது பதவி காலத்துக்குள் நிறைவேற்றுவோம் என்றார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X