2025 மார்ச் 12, புதன்கிழமை

’டிஜிட்டல் மயமாக்கல் நாட்டை உயர்த்தும்’

Freelancer   / 2025 பெப்ரவரி 08 , மு.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தின் ஊடாக மூன்று பிரதான டிஜிட்டல் வசதிகள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று  (07) ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி, அரச டிஜிட்டல் கொடுப்பனவு தளமொன்றை உருவாக்குதல் (GovPay) ,ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்திற்கு கொண்டுச் செல்லல், தூதரகங்களிலிருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு (eBMD) சான்றிதழ்களை மென்பொருள் மூலம் பெற்றுக் கொள்ளல் என்பன மேற்கொள்ளப்படும்.  

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, ICTA நிறுவனம் மற்றும் லங்கா பே (Lanka Pay) ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன், கொடுப்பனவு  முறையின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை உறுதி செய்ய மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. 

"Govpay" மென்பொருள் மூலம் ஆரம்ப கட்டமாக 16 அரசு நிறுவனங்களின் அனைத்து விதமான கொடுப்பனவுகளை செய்ய முடியும் என்பதுடன், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் மேலும் 30 அரச நிறுவனங்களில் இந்த மென்பொருளை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சகல அரச நிறுவனங்களையும் இதனுடன் இணைக்க எதிர்பார்க்கப்படுவதோடு ஏற்கெனவே 12 அரச மற்றும் தனியார் வங்கிகள் இதில் இணைந்துள்ளன.

இங்கு  கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தொழிநுட்பம் மற்றும் அறிவியலினால் ஏற்படும் முன்னேற்றங்கள்  மக்களின் வாழ்வை இலகுவாக்குவதாகவும், இதன் மூலம் வினைத்திறனான, தரமான மற்றும் விரயம் குறைந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.

தொழிநுட்பத்தின் வெற்றிகளின் காரணமாகவே உலக வரலாற்றில் படிப்படியாக   முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, மனித நாகரிகத்தை ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு நிலைக்கு உயர்த்த விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத்தின் புதிய கண்டுபிடிப்புகள் என்பன செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி நிதியத்தின் பணிகள் இதுவரை காலமும் கொழும்பில் இருந்தே செயற்படுவதாகவும், அதனால் தூர பிரதேசங்களில் உள்ள பிரஜைகள் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று முதல் பிரதேச செயலக மட்டத்தில் குறித்த முறைமையை செயற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நீண்ட காலத்துக்கு முன்னரே இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும், சரியான நேரத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படாமையினால் மக்களின் வாழ்க்கையும்  நாட்டின் பொருளாதாரமும் பின்னடைந்து காணப்படுவதோடு, இன்றைய தினம் டிஜிட்டல் மயமாக்கல் மூலமாக நகரமும் கிராமமும் ஒன்றிணைந்துள்ளதால், கிராமிய வறுமையை ஒழிப்பதற்கும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் அவசியமானது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எமது நாட்டை தற்போதைய நிலையில் இருந்து புதிய நிலைக்கு உயர்த்தும் ஒரே வழி டிஜிட்டல் மயமாக்கல் எனவும், அதனால் மக்களின் தேவைகளை எந்தவிதமான அழுத்தம் மற்றும் அலைச்சல் இன்றி நிறைவேற்ற முடியும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

இயந்திரமயமான வாழ்க்கை முறையினால் எமது நாட்டு மக்கள் பண்பாட்டு ரீதியான வாழ்க்கையை இழந்துள்ளதாகவும், பண்பாட்டு வாழ்வை உருவாக்கிகொள்ள டிஜிட்டல் மயமாக்கல் வசதியாக அமையும் எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இத்திட்டம் வெற்றியடைய வேண்டும் என்றும், டிஜிட்டல் அடையாள அட்டை இதன் முக்கிய திருப்புமுனையாக அமையும் என்றும் சுட்டிக்காட்டினார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .