2025 ஏப்ரல் 15, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

Freelancer   / 2025 ஏப்ரல் 14 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டையும் மக்களையும் வெற்றி பெறச்செய்வதற்காக இந்தப் புத்தாண்டில் அனைவரும் மேலும் வலிமையுடனும் ஒற்றுமையுடனும் ஒரே நோக்கத்துக்காக ஒன்றுபடுவோம் என அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன் என்று  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விடுத்துள்ள சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக புதிதாகும் எதிர்பார்ப்புகளை அடையாளப்படுத்தும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை, நாடு என்ற வகையில் பல வெற்றிகளை அடைந்துகொண்டு, சிறந்த மற்றும் புதியதொரு தேசத்தை உருவாக்கும் கனவுக்காக இடைவிடாமல் போராடும் வேளையில் நாம் கொண்டாடுகின்றோம்.

வீழ்ச்சியடைந்திருந்த நமது நாட்டை கடந்த சில மாதங்களாக மீண்டும் கட்டியெழுப்பி, பொருளாதார, சமூக, அரசியல் ரீதியாக புதிய நிலைக்கு உயர்த்தி வைத்துள்ளோம். அந்த வெற்றிகள் அனைத்தும் இந்நாட்டு மக்களுக்கே உரித்தாகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் மக்கள் எம் மீது வைத்த நம்பிக்கையே நாட்டில் மாற்றம் ஏற்படுவதற்கு வழிவகுத்தது என்பதையும் வலியுறுத்த வேண்டும்.

சவால்களுக்கு மத்தியில் சரிந்துவிடாமல் நாட்டுக்காக நமது பொறுப்பை மேலும் வலுவாக நிறைவேற்றும் துணிச்சல் எமக்கு உள்ளது. மேலும் பூகோள அரசியலைப் போன்றே தேசிய ரீதியாக நாட்டின் முன்பிருக்கும் அனைத்து விதமான சவால்களையும் எதிர்கொள்ளத் தேவையான திட்டங்களை அரசு தற்போது செயற்படுத்தி வருகின்றது.

மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான பௌதீக மற்றும் ஆன்மீகத் தொடர்புகளின் தனித்துவம் புத்தாண்டு மரபுகளினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவை சிங்கள மற்றும் தமிழ் இனங்களுக்கு இடையில் காணப்பட்ட வரலாற்று பிணைப்பு மற்றும் சகவாழ்வின் உயிர்ப்புள்ள சான்றாக விளங்குகின்றன.

இன்றைய சமூகம் பல்வேறு பிரிவுகளால் வேறுபட்டிருந்தாலும், புத்தாண்டு போன்ற கொண்டாட்டங்கள் அத்தகைய பிரிவுகளைக் கலைந்து சமூகத்துக்குள் மீண்டும் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வைப் பாதுகாப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன.

சகவாழ்வை ஊக்குவித்து மற்றவர்கள் மீது கருணை காட்டும் ஒழுக்கத்தின் இருப்பை எமக்குள் எற்படுத்திக்கொள்வதே இந்தப் புத்தாண்டில் நமது பொறுப்பாகும்.

மேலும், மக்கள் வாழ்வைப் புதுப்பித்துக்கொள்ளவும் பிற்போக்கான  மனப்பாங்கு மற்றும்  சிந்தனை அற்ற புதிய மனிதனை உருவாக்குவதுமே சூரிய பெயர்ச்சியுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் அனைத்து சம்பிரதாயங்களினதும் பொதுவான எதிர்பார்ப்பாகும். இவ்வாறு நாம் புதிதாவதால் மாத்திரமே புத்தாண்டு நமது வாழ்விற்கு புதிய ஆரம்பத்தை தரும்.

நாட்டுக்குத் தேவையான புதிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தேசிய திட்டத்தை வெற்றி பெறச் செய்வதற்காகவும், நாட்டையும் மக்களையும் வெற்றி பெறச் செய்வதற்காகவும் இந்தப் புத்தாண்டில் அனைவரும் மேலும் வலிமையுடனும் ஒற்றுமையுடனும் ஒரே நோக்கத்துக்காக ஒன்றுபடுவோம் என அனைவருக்கும்  நான் அழைப்பு விடுக்கின்றேன்.

உங்கள் அனைவருக்கும் 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' நோக்கிய பயணத்தின் எதிர்பார்ப்புக்களை ஒளிரச் செய்யும் செழிப்பான புத்தாண்டாக அமையட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X