2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

சில முறைகளை ரத்து செய்தார் ஜனாதிபதி

Simrith   / 2024 நவம்பர் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை (நவம்பர் 21) கூடவுள்ள பத்தாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வை சம்பிரதாயபூர்வமாகத் ஆரம்பிப்பதற்கான ஒத்திகை இன்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

பாராளுமன்ற அறிக்கையின்படி, 10வது பாராளுமன்றம் நாளை காலை 9:55 மணிக்கு கோரமணி ஒலித்ததைத் தொடர்ந்து, 10:00 மணிக்கு ஆரம்ப அமர்வு ஆரம்பமாகிறது.

சபையில் செங்கோலை வைத்த பின்னர், பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம், ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களை, அமர்வுக்கான திகதி மற்றும் நேரத்தை நிர்ணயம் செய்து, முதல் அலுவலாக முன்வைப்பார்.

பின்னர் அரசியலமைப்பின் 64(1) மற்றும் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 4, 5 மற்றும் 6 ஆகியவற்றின் விதிகளின்படி சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

பின்னர், சபாநாயகர் சத்தியப்பிரமாணம் அல்லது உறுதிமொழி எடுப்பார், சபாநாயகரின் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை, பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை, பிரதிச் சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் வாக்களிப்பினால் தெரிவுசெய்தல் என்பன இடம்பெறும்.

முதலாவது நாளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆசன ஒதுக்கீடு மேற்கொள்ளப்படாது என்பதால் தமக்கு விரும்பிய ஆசனங்களில் அமர முடியும் என்பது விசேடமானதாகும்.

முதற்கட்ட சம்பிரதாயங்களைத் தொடர்ந்து, பாராளுமன்றம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும். முற்பகல் 11:30 மணிக்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பின் 32(4) மற்றும் 33 ஆவது சரத்துகளின்படி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்ப்பிப்பார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் ஆரம்ப நிகழ்வை எளிமையான முறையில் நடத்துமாறு ஜனாதிபதி வழங்கிய பணிப்புரைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு அமைய ஜயமங்கள கீதம், முப்படையினரின் அணிவகுப்பு, மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனப் பவனி என்பன இடம்பெறாது என படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்தார்.

இதற்கு அமைய மு.ப 11.00 மணிக்கு சகல விருந்தினர்களும் தமது இருக்கைகளில் அமரவைக்கப்படவுள்ளனர். மு.ப 11.10 மணிக்கு பாராளுமன்ற கட்டடத்தின் பிரதான நுழைவாயிலின் படிக்கட்டுக்கு அருகில் கௌரவ சபாநாயகர் வரவேற்கப்படவுள்ளார். அதனைத் தொடர்ந்து மு.ப 11.15 மணிக்கு கௌரவ பிரதமர் வரவேற்கப்படவிருப்பதுடன், இதன் பின்னர் கௌரவ ஜனாதிபதியின் வருகை இடம்பெறும்.

அதன்படி மு.ப 11.20 மணியளவில் கௌரவ சபாநாயகர், பாராளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்டோர் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களைப்  பாராளுமன்ற கட்டடத்தின் பிரதான படிக்கட்டுகளுக்கு அருகில் வரவேற்கவுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து படைக்கலசேவிதர், பிரதி படைக்கல சேவிதர் மற்றும் உதவி படைக்கல சேவிதர் ஆகியோர் முன்செல்ல கௌரவ சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரினால் ஜனாதிபதி பாராளுமன்ற கட்டடத்துக்குள் அழைத்துச் செல்லப்படுவார்.

இதன் பின்னர் உடையணி அறைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள ஜனாதிபதி அவர்கள் மு.ப 11.25 மணிவரை அங்கிருப்பதுடன், அதனைத் தொடர்ந்து பாராம்பரியத்துக்கு அமையப் பிரதிப் படைக்கல சேவிதர், செங்கோலைக் கையில் தாங்கியவாறு படைக்கல சேவிதர், ஜனாதிபதி, சபாநாயகர், செயலாளர் குழு மற்றும் உதவிப் படைக்கல சேவிதர் என்ற வரிசைப்படி அணிவகுத்து சபா மண்டபத்துக்குள் செல்வர்.

சபைக்குள் நுழையும்போது உதவி படைக்கல சேவிதர் ‘கௌரவ ஜனாதிபதி’ எனத் தெரிவித்ததும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து நிற்பது பாரம்பரியமாக இடம்பெறும்.

சபா மண்டபத்துக்கு அழைத்துவரப்படும் ஜனாதிபதி அங்கிராசனத்தில் அமர்ந்து சபைக்குத் தலைமை தாங்குவார். இதன்போது சபாநாயகர், பாராளுமன்ற குழுநிலையின்போது அமரும் கீழ் பகுதியிலுள்ள ஆசனத்தில் செயலாளர் குழுவுடன் அமர்ந்திருப்பார். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகன உரை நிகழ்த்தப்பட்டு, சபை ஒத்திவைக்கப்படும்.

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் ஆரம்ப நாள் நிகழ்வில் வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர்கள், பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற நீதிபதிகள், சட்டமா அதிபர், அமைச்சுக்களின் செயலாளர்கள், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் கலந்துகொள்ளவிருப்பதாக படைக்கல சேவிதர் குஷான் பெர்னாந்து தெரிவித்தார்.

விருந்தினர்களுக்கான அழைப்பிதழ்கள் இலத்திரனியல் முறையில் (E-Invitations) அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X