2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

குதப்பி துப்பியதால் இப்படியும் நடந்தது

Editorial   / 2020 டிசெம்பர் 23 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக,  பல்வேறான பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலும்,  தெரிந்தும் தெரியாமலும் தாங்கள் செய்யும் செயல்களாலும் மற்றையவர்களின் செயற்பாட்டாலும் பலரும் பாதிக்கப்பட்டு விடுகின்றனர்.

அவ்வாறான சம்பவமொன்று, பலாங்கொடை பகுதியில், கடந்த சனிக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

கொரோனா வைரஸ் தொற்றாளர்களை ஏற்றிக்கொண்டு, கொழும்பிலிருந்து, பலாங்கொடை, சமனலவெவ கொரோனா மத்திய நிலையத்துக்கு பஸ்ஸொன்று பயணித்துள்ளது. 

அப்போது, பஸ்ஸினுள் வெற்றிலை குதப்பிக்கொண்டிருந்த பெண்ணொருவர், பலாங்கொடை மிரஸ்வத்தை எனுமிடத்தில் வைத்து, ஜன்னலின் ஊடாகத் தலையை நீட்டி, வெற்றிலை எச்சிலை ‘புளிச்சென’ துப்பியுள்ளார்.

வெற்றிலை எச்சிலோ, பஸ்ஸூக்கு சமாந்தரமாக மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்று கொண்டிருந்தவர் மீது பட்டுள்ளது.

முகம், தலைக்கவசம், ஜெக்கெட் உட்பட, மோட்டார் சைக்கிளிலும் வெற்றிலை எச்சில் பட்டுத் தெறித்துள்ளது.

இதனால், கடுமையாகக் கோபமடைந்த அந்த நபர், பஸ்ஸை சிறிது தூரம் துரத்திச்சென்று, வழிமறித்து சாரதியுடன் கடுமையான தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். அத்துடன், பஸ்ஸின் கதவைப் பலவந்தமாகத் திறந்து உள்ளே சென்று, எச்சில் துப்பியவரைத் தேடி சத்தம் போட்டுள்ளார்.

 

அதன்போது, பஸ்ஸில் பயணிப்பவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்கள் என, அந்த நபருக்குத் தெரியப்படுத்தியதால், பதற்றமடைந்த அவர், கையிலிருந்த பயணப் பையையும் பஸ்ஸூக்குள்ளே தவறுதலாக விட்டுவிட்டு, துடித்துப் பதைத்து இறங்கிவிட்டார்.

இறங்கியவுடன் பொலிஸாரின் அவசர இலக்கமான 119க்கு அழைப்பை எடுத்து, நடந்தவற்றைக் கூறிவிட்டு, வீட்டுக்குச் சென்றுவிட்டார். சிறிது நேரத்துக்குள் வீட்டுக்குச் சென்ற பொதுச் சுகாதாரப் பிரிவினர், அவரையும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த மூவரையும், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இலங்கைப் போக்குவரத்துச் சபையில் பணியாற்றும் ஊழியரும் அவருடைய குடும்பத்தினருமே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள், பயணப் பொதி ஆகியன, தொற்று நீக்கத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என, இப்பிரதேசத்துக்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறிப்பு: ஒவ்வொருவரும் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் என்பதை கவனத்தில் கொண்டும், வாசகர்களின் வேண்டுகோளுக்கு அமையவும் இச்செய்தியை மீள்பிரசுரம் செய்கின்றோம் (ஆர்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .