பா.நிரோஸ்
நிதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டமானது, இனவாதம் இல்லாத வரவு செலவு திட்டம் என புகழாரம் சூட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், எல்லோரும் எதிர்க்கிறார்கள் என அரசாங்கத்தை எதிர்த்தால் முஸ்லிம் சமூகத்துக்கு அது பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நேற்றைய (15) விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், சிறுபான்மை இன மக்களுக்கும் வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க செய்யும் வகையிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
ஜனாஸா எரிப்பு தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடி அதற்கும் தாம் கடந்தக் காலங்களில் தீர்வை பெற்றுக்கொண்டிருந்தோம். தற்போது மாடறுப்பு தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளது. இது குறித்தும் பிரதமர், நிதி அமைச்சருடன் பேசி இருக்கிறோம். அதற்கும் விரைவில் தீர்வை பெற்றுதருவதாக கூறியிருக்கிறார்கள் எனவும் கூறினார்.
நாட்டில் சிறுபான்மை இனத்தவருக்குப் பிரச்சினைகள் வரும்போது அரசாங்கத்துடன் பேசி அதனை தீர்க்க வேண்டும். மாறாக எல்லோரும் எதிர்க்கிறார்கள் நாங்களும் எதிர்க்க வேண்டும் என எதிர்ப்பை வெளிப்படுத்தினால் அது முஸ்லிம் சமூகத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறினார்.