2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

1,000 பொலிஸார் கொழும்புக்கு அழைப்பு: விசேட ரோந்துக்கும் பணிப்பு

Editorial   / 2022 மே 15 , பி.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளைமறுதினம் 17ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில், விசேட கடமைகளுக்காக வெளி மாகாணங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு ஊவா, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் பொலிஸ் கல்லூரியில் இருந்தே அதிகாரிகள் கொழும்புக்கு, நாளை (16) வரவழைக்கப்படவுள்ளனர்.

இவர்கள் அனைவரும் நாளை (16) பிற்பகல் கொழும்பு தெற்கு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழுள்ள மிரிஹான பொலிஸ் விளையாட்டு மைதானத்துக்கு சமூகமளிக்க உள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தேசிய மற்றும் பொலிஸ் அடையாள அட்டைகள், குறிப்பேடுகள், மழையங்கிகள், பாதுகாப்பு தலைக்கவசங்கள் மற்றும் உத்தியோகபூர்வ குண்டாந்தடிகளை கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் ரோந்து பணியை அதிகப்படுத்துமாறு, அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ்மா அதிபரால் விசேட சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலைதளங்கள் மூலம் வன்முறைச் செயல்களிலும், பல்வேறு குற்றச் செயல்களிலும் ஈடுபட மக்கள் தூண்டப்பட்டு வருவதாக புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளதாகவும் மக்கள் தேவையில்லாமல் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வன்முறை மற்றும் குற்றங்களைத் தடுக்க அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தேவையான போது அவற்றைத் தடுக்க துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பான அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X