2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

காங்கேசன்துறையில் 'தல் செவன'

A.P.Mathan   / 2012 பெப்ரவரி 06 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் பொருளாதார, சுற்றுலா அபிவிருத்தியில் பெரிதும் தாக்கம் விளைவித்த பாரிய யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் - மீண்டும் அபிவிருத்திகள் துளிர்விடத் தொடங்கியுள்ளன. குறிப்பாக முதலீட்டாளர்களின் பார்வை வடக்கின் பக்கமே அதிகம் திரும்பியிருக்கிறது. குறைந்த செலவில் பாரிய முதலீடுகளை தற்சமயம் மேற்கொள்ளக் கூடிய இடமாக வடக்கு திகழ்கின்றமை சிறப்பானதாகும்.

யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களுக்கு முன்பாகவே அதாவது கடந்த 16 வருடங்களுக்கு முன்னரே யுத்தம் நிறைவடைந்துவிட்ட போதிலும் தற்சமயம்தான் அங்கு அபிவிருத்திகளை மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இதற்குக் காரணம் வன்னியில் இடம்பெற்ற பாரிய யுத்தத்தினால் யாழின் அபிவிருத்திகள் முடங்கியிருந்தமையே. இருந்தபோதிலும் இப்பொழுது யாழில் அபிவிருத்தி துரித வேகத்தில் இடம்பெற்று வருகிறது.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் தெற்கில் வசிக்கின்றவர்களின் முக்கிய சுற்றுலா தலமாக வடக்கு – குறிப்பாக யாழ்ப்பாணம் திகழத் தொடங்கியிருக்கிறது. ஒரே நாளில் பல நூற்றுக்கணக்கான மக்கள் வடக்கிற்று சுற்றுலா செல்கின்றனர். தெற்கிலிருந்து வடக்கு நீண்டதூர பயணமாக இருந்தபோதிலும் அதனை இனிமையாக அனுபவித்து – ஒரு மாறுதலுக்காக வடக்கிற்கு சுற்றுலா செல்கின்றனர். ஆனால், அபிவிருத்திகள் முடக்கப்பட்டிருந்த யாழில் சுற்றுலா பயணிகள் வசதியாக தங்குவதற்கு போதியளவு இடவசதிகள் இல்லை. இது சுற்றுலா பயணிகளுக்கு பெரும் அசௌகரியமாக இருந்து வருகிறது. இதனை கருத்திற்கொண்ட முதலீட்டாளர்கள் விடுதிகளை கட்டுவதில் பாரிய முதலீடுகளை செய்து வருகின்றனர். இதேவேளை, வடக்கில் தமது இருப்பிடங்களை விட்டு புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கின்ற சொந்தங்களும் தங்களது வீடுகளை விடுதிகளாக புனரமைத்து சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு வழிசமைக்கின்றனர். இது நல்லதொரு மாற்றமாக அமைகின்றமை சிறப்புக்குரியது.

இப்படியாக தங்குமிட சிக்கல்களை கருத்திற்கொண்ட பாதுகாப்பு படையினர் காங்கேசன்துறையில் 'தல் செவன' என்றும் சுற்றுலா விடுதியொன்றினை உருவாக்கியிருக்கிறார்கள். இலங்கையின் உச்சியில் அமைந்திருக்கின்ற காங்கேசன்துறையில் இந்த விடுதி அமைந்திருக்கின்றமை சிறப்பானதாகும்.

முற்றுமுழுதாக பாதுகாப்பு படையினரின் பராமரிப்பில் இயங்குகின்ற அழகிற விடுதி இது. காங்கேசன்துறை துறைமுகத்திற்கு மிக அருகில் இந்த விடுதி அமைந்திருக்கிறது. இலங்கையில் உச்சியிலிருந்து அதன் அழகினை ரசிப்பதற்கு ஏற்றவகையில் அழகுற விடுதி அமையப் பெற்றிருக்கிறது. பரந்து விரிந்திருக்கின்ற கடற்பரப்பு கண்கொள்ளா காட்சி. தூய்மையான கடற்காற்று மனதுக்கு ரம்மியத்தை ஏற்படுத்துகிறது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை கடற்பரப்பு விரிந்து காணப்படுகிறது. வரலாற்று புகழ்மிக்க காங்கேசன்துறை வெளிச்சவீடு அண்மையில் தெரிகிறது. புழைய நினைவுகளை புதிய சுவாசத்துடன் ரசிக்கக்கூடிய அழகிய இடம் 'தல் செவன'.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தபோது மேஜர் மல்லவராச்சியின் அழைப்பின்பேரில் லெப். கேணல் லால் நாணயகாரவின் உத்தரவிற்கிணங்க 'தல் செவன' சுற்றுலா விடுதிக்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. 'தல் செவன' சுற்றுலா விடுதியின் முகாமையாளராக மேஜர் அளவத்த எம்மை இன்முகத்துடன் வரவேற்றார். அவரோடு மேலும் பல இராணுவ அதிகாரிகளும் சிப்பாய்களும் சாதாரண உடைகளில் சுற்றுலா பயணிகளுக்கு பணிவிடை செய்கின்றனர். இராணுவத்தின் பெண்கள் பிரிவினைச் சேர்ந்தவர்கள் வரவேற்று அறையில் கடமையாற்றுகிறார்கள்.

'தல் செவன' சுற்றுலா விடுதி படையினரால் நடத்தப்படுகின்றபோதிலும் சீருடையில் எவரும் அங்கு கடமையாற்றுவதில்லை. மக்களோடு மக்களாக சேவை செய்கின்ற சாதாரண மனிதர்களாகவே அவர்கள் கடமையாற்றுகின்றனர். அதீத பாதுகாப்புடன் கூடிய இந்த சுற்றுலா விடுதி குடும்பத்தினரோடு தங்குவதற்கு மிகச் சிறந்த இடம்.

இந்த 'தல் செவன' சுற்றுலா விடுதியில் அதி சொகுசு 'வீவீஐபி' அறையொன்று உட்பட, சொகுசு அறைகள் 8 மற்றும் சாதாரண 16 அறைகளும், குடும்ம அறை என ஒன்றும், இரண்டு 'கபானா'க்களும் இருக்கின்றன.

அதிசொகுசு அறையில் மிக முக்கியமான நபர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஜனாதிபதி, இராணுவத்தளபதி போன்ற அதி முக்கியமான நபர்கள் இந்த அறையில்தான் தங்குவார்களாம். இந்த அறையினை 'வீவீஐபி'க்கள் பயன்படுத்துவதானால் 8000 ரூபாய் அறவிடப்படுகிறது. நீங்களும் இதில் தங்கலாம். இதுதவிர சொகுசு (லக்ஷரி) அறைகளில் தங்குவதற்கு 5000 ரூபாய் கட்டணம் அறவிடப்படுகிறது. ஏனைய அறைகளில் தங்குவதற்கு 2000 ரூபாய் அறவிடப்படுகிறது. இவை அனைத்தும் குளிரூட்டப்பட்ட அறைகள். இவைதவிர சாதாரண அறைகளும் இருக்கின்றன. 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய்வரை இந்த சாதாரண அறைகளில் தங்குவதற்க அறவிடப்படுகிறது. இரண்டு கபானாக்கள் இருக்கின்றன. இவற்றில் தங்குவதற்கு 8000 ரூபாய் அறவிடப்படுகிறது.

'தல் செவன'வில் தங்குகின்றவர்களுக்கு சுகாதாரமான முறையில் சமைக்கப்பட்ட உணவுகள் - உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் வழங்கப்படுகின்றமை சிறப்பானதாகும். விசேடமாக கடலுணவுகள் வழங்கப்படுகின்றன. பாதுகாப்பான முறையில் தமது விடுமுறையினை களிப்பதற்கு 'தல் செவன' சிறந்ததொடு இடமாக இருக்கின்றமை சிறப்புக்குரியது.

இந்த சுற்றுலா விடுதியில் நீங்களும் விடுமுறையினை களிக்க விரும்பினால் 021-3219777 என்ற தொலைபேசியில் தொடர்புகொண்டு விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .