2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

வீரம்மிக்க யாழ்ப்பாண கோட்டை

A.P.Mathan   / 2010 நவம்பர் 27 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கோட்டை என்பது ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் ஆண்டவர்களின் பலத்தினை நிரூபிக்கும் கண்ணாடியாக திகழ்வதென்ற பிரதிபலிப்பு இருக்கிறது. உண்மையிலே தொழில்நுட்ப வளர்ச்சிகள் குன்றிய காலத்திலேயே எப்பேர்ப்பட்ட கோட்டைகளை அன்றைய ஆட்சியாளர்கள் கட்டிவைத்திருக்கிறார்கள் என்னும்போது வியப்பு நம்மை தொற்றிக்கொள்கிறது.

அந்தவகையில் யாழ்ப்பாண கோட்டை ஆசியாவிலேயே சிறந்ததொரு கோட்டை என ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அன்றை காலத்திலேயே இன்றைய அமெரிக்க 'பென்டகன்' போன்ற அமைப்பில் இந்த கோட்டையை உருவாக்கியிருக்கிறார்கள். இது மிகவும் வலிமைமிக்க கம்பீரமான கோட்டையாக திகழ்கிறது.

இன்றைய சூழ்நிலையில் இந்த சிதைந்த கோட்டை பொதுமக்களின் சுற்றுலா தலமாக மாறியிருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த யாழ். கோட்டையினை கண்டு பிரமித்து வருகிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் இன்று காணப்படுகின்ற கோட்டை ஒல்லாந்தரினால் மீளமைப்பு செய்யப்பட்டதாகும்.

முஸ்லிம் வியாபாரிகளின் பண்டகசாலையாக இக்கோட்டை ஆரம்பத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் போர்த்துக்கேயர் இந்த பண்டகசாலையை நாற்சதுரக் கோட்டையாக்கியுள்ளனர். 1658இல் போத்துக்கேயர்கள் இந்த கோட்டையை அமைத்து 'யாழ்ப்பாணப் பட்டணம்' என்று பெயர் சூட்டியுள்ளனர். அதன்பின்னர் டச்சுக்காரர்கள் இந்த கோட்டையை சுற்றிவளைத்து போத்துகேயரிடமிருந்து கைப்பற்றி 1680ஆம் ஆண்டளவில் புதியவடிவில் யாழ்ப்பாண கோட்டையை அமைத்து 1795ஆம் ஆண்டுவரை அதாவது ஆங்கிலேயரின் வருகை வரை பாதுகாத்தனர். ஆங்கிலேயேர் இக்கோட்டையை கைப்பற்றியதன் பின்னர் 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடையும்வரை யாழ். கோட்டை ஆங்கிலேயரின் கைகளிலேயே இருந்துள்ளது. அதன் பின்னர் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலும் சிலகாலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலும் மாறிமாறி இக்கோட்டை இருந்தமையால் இன்று சிதைவடைந்த நிலையில் காணப்படுகிறது.

ஆரம்பத்தில் ஒல்லாந்தரால் புனரமைக்கப்பட்ட யாழ். கோட்டை, ஐங்கோண வடிவில் அமைக்கப்பட்டது. இதனை அவர்கள் 1680மே; ஆண்டில் கட்டி முடித்தனர். கோட்டையின் சுற்றுப்புறக் கட்டமைப்பு 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கப்பட்டு 1792ஆம் ஆண்டில் நிறைவுற்றது.

யாழ். கோட்டை ஐந்து கொத்தளங்களைக் கொண்டுள்ளது. கடற்புறமாக இரண்டு கொத்தளங்களையும் நிலப்பக்கமாக மூன்றையும் கொண்டுள்ளது. இந்த கோட்டை 22 ஏக்கர் நிலப்பரப்பினைக் கொண்டதாகும். உள்கோட்டையின் சுற்றளவு 6,300 அடிகளாகும். கொத்தளத்தின் ஒரு பக்க நீளம் சராசரியாக 340 அடிகளாகும். யாழ்ப்பாணக் கோட்டை மதிலின் உச்சி 20 அடி அகலமானது. அடித்தளத்தில் 40 அடி அகலமானது. கோட்டைச் சுவர் 30 அடி உயரமானது. கோட்டையைச் சுற்நி 132 அடி அகலமான அகழியுள்ளது. அகழிச் சுவரோடு சின்னக்கோட்டைகள் அமைந்துள்ளன. இவை முருகைக் கற்களினால் மூடப்பட்ட கூரைகளைக் கொண்டுள்ளன. ஒல்லாந்தரினால் அமைக்கப்பட்ட கோட்டைகள் யாவும் முருகைக் கற்களினால் அமைக்கப்பட்டவை என்பது சிறப்பானதாகும்.

கோட்டைக்குள் கவர்னர் பங்களாஇ ராணி மாளிகைஇ சிறைச்சாலை என்பன கட்டப்பட்டன. பிற்காலத்தில் ராணி மாளிகையில் சிறைக் கைதிகள் விசாரிக்கப்பட்டார்கள்.

நீர்ப்பாதைஇ நிலப்பாதை என யாழ். கோட்டைக்கு இரண்டு வாயில்கள் உள்ளன. நீர்ப்பாதை கடலோரமாக அமைந்திருந்தது. நிலவழிப்பாதை தொங்கு பாலத்தினால் இணைக்கப்பட்ட பிரதான வாயிற்புறமாகும்.

அன்றைய கட்டடகலை வல்லுனர்களின் கைவண்ணத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் யாழ். கோட்டையின் இன்றைய சிதைவுகள்கூட பொதுமக்களின் பார்வைக்கு அதிசயமாகவே திகழ்கின்றது. இது வரலாற்று பொக்கிஷம். கண்டிப்பாக ஒவ்வொரு குடிமகனும் இந்த யாழ். கோட்டையின் கம்பீரத்தினை கண்டு உளம் மகிழ்வதோடு அன்றைய வீரர்களின் சாகசங்களையும் மனதில் நிறுத்த வேண்டும். Pix: Kushan Pathiraja


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .