Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 21 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
அர்ச்சுணனின் நாகாசுரத்திலிருந்து பாயும் சரங்களாய்... உடலை பொசுக்கிக்கொண்டிருந்தது கதிரவனின் வெம்மை. மல்லாக்காக சரிந்து கிடந்த ஆறுமுகம் மெல்ல எழுந்துகொண்டார்.
'கனகு.... கனகு.....!'
கனகுவிடமிருந்து பதிலெதுவுமில்லை. பாயருகில் கிடந்தது வாய்த்துண்டை எடுத்து முகத்தை துடைத்துக்கொள்கிறார். இதுவரை மின்குமிழாய் ஒளிர்ந்து கொண்டிருந்த வியர்வைத் துளிகள் அத்தனையும் துவாயில் ஒட்டிக்கொண்டன. மீண்டும் ஒருதடவைகுரல் கொடுக்கிறார்....
'கனகு, இஞ்சரப்பா கனகு எங்கையப்பா நிக்கிறாய்?'
நான் இந்த மனிசியை கூப்பிடுற சத்தத்திற்கு பக்கத்து வீட்டுக்காறர்தான் 'ஓய்' எண்ணப்போகுதுகள். தனக்குள்ளே புறுபுறுத்துக்கொண்டார் ஆறுமுகம்.
'ஓமப்பாவாறன்...'
கனகுவின் குரல் கேட்டது.
'என்னப்பாஇ என்னத்துக்கு இப்பஓலம் வைக்கிறியள்?'
சினந்து கொண்டாள் கனகு.
அனலாய் எரிந்து கொண்டிருக்கும் வெயிலினையும் ஊடறுத்து வந்த கனகுவின் சினப்பு ஆறுமுகத்திற்கு கோபத்தையூட்டினாலும் சமாளித்துக்கொண்டார். கனகுவில் அவருக்கு அளவுகடந்த பாசமுமிருந்தது.
'இந்த மனிசன் இப்பிடித்தான். அங்கால இஞ்சால அரக்க விடாது. ஏதோ காதல் ஜோடிகள் தானே..!'
மௌனமாகவே இருந்தார் ஆறுமுகம்.
'எங்கையப்பா இப்பபோய் வாறாய்?'
'ஒருடமுமில்ல. இவ பாக்கியம் மாமியிடவீட்டடில இருந்தனான். அவவோட கதைச்சுக்கொண்டு இருந்ததால நீங்கள் கூப்பிட்டது கேக்கல்லையப்பா.'
'நான் அப்பவும் நினைச்சன். பாக்கியம் மாமியோடதான் அரசியல் வைக்கப்போட்டாயென்று. ம்ம்..ம்;'
'இல்லையப்பா. இந்ததறப்பாள் கொட்டிலுக்குள்ள எவ்வளவுக்கெண்டு தான் இருக்கிறது. அதிலை கொஞ்சம் மரங்களாவது நிக்குது. அதுதான்.......'
'ம்..ஏதோ சொல்லிக்கில்லி சமாளிச்சுப்போடுவாய்...'
சில சமயங்களில் ஆறுமுகம் கண்டிப்புடன் நடந்து கொண்டாலும் அதிலும் ஒருவித அன்பையும் தன் மீதான கரிசனையைம் உணர்நதாள்.
'அது சரி சமையலறையில சாப்பாடு குடுக்க வெளிக்கிட்டாச்சோ..?'
பசியின் ஆற்றாமையால் வினவினார் ஆறுமுகம்.
'இல்லையப்பா. மரக்கறிவர பிந்திப்போச்சுதாம.; கொஞ்சம் செல்லுமாம்.'
என்றாள் கனகு.
'ம்.. என்னசெய்யிறது.? அவங்கள் தரேக்கதானே சாப்பாடு. அதுவரை என்ன பசியென்றாலும்........'
சொந்த மண்ணில்.. சொந்தவீட்டில் நினைத்தநேரம் உண்டு குடித்து சந்தோசமாய் இருந்தவர்களுக்கு இவற்றையெல்லாம் சமாளிப்பதென்பது பாவற்காயாக கசத்தது. மூலையில் கிடக்கும் மகளைநினைத்தால்..அதொருபுறம் வேதனை.
நாட்கள் எத்தனை தான் ஓடிமறைந்தாலும் அவர்களது வாழ்வில் ஒட்டிப்போன இருள் மட்டும்.... ஏனோ.....??
'எங்கட மண்ணுக்கு எங்களைவிட்டால் ஏன் இந்தப்பாடு;;? இவையளை சாப்பாடு தண்ணி நாங்கள் கேக்கவாபோறம்.'
தன் மனதிலிருந்த எண்ணக்குமுறலை கொஞ்சம் கொஞ்சமாக கட்டவிழ்த்து விட்டார் ஆறுமுகம்.
'என்னப்பாசெய்யிறது.ஏதோஉயிரைபாதுகாக்கவெண்டு இஞ்சவந்தா..இஞ்சஅணுவணுவாய் உயிரைகுடிக்கிறாங்கள்'
கனகுவும் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினாள்.
'இஞ்சரப்பா, வாளியை வரிசையில அடிக்கீட்டுவாறன். இருங்கோ.'
கூடாரத்தின் அருகில் கிடந்தவாளிகள் இரண்டையும் எடுத்துக்கொண்டு குழாய்க்கிணறு நோக்கி நடந்தாள். மதியம் வாளி வைத்தால் கடைசி மறுநாள் மதியமாவது கொஞ்சதண்ணீர் எடுக்கலாம்.
'கிணத்தில தண்ணியள்ளி என்ன சௌந்தர்யமாய் குளிச்சம். இது இப்ப பத்து லீற்றர் தண்ணியில தொட்டு துடைக்க வேண்டியதாய் போய்ச்சு.. எல்லாம் எங்கட விதியாய் போய்ச்சு.. ம்..'அவளது உள்ளக் குமுறல்கள் அவளை சுனாமி அலைகளாய் சுருட்டிப்போட்டது.
வன்னி நிலப்பரப்பை போர் ஆட்கொண்டதன் விளைவால் மழைக்கு முழைக்கும் காளான்களாய் உதயமான முகாம்களில் 'மெனிக்பாம்' முகாமும் ஒன்று. இங்குதான் ஆறுமுகமும் கனகுவும் சாதனாவும் ஒரு பாதி கூடாரத்துக்குள்ளே முடங்கிய நிலையில்..
காடுகளாய் கிடந்த நிலங்களை'புல்டோசர்' மூலமாக இடித்து தரைமட்டமாக்கி அதிலே அடுக்கடுக்காய் முளைத்துப்போன பல்லாயிரம் குடிசைகள்.... அவையாவும் சனக்கூட்டத்தால் நிறைந்து வழிந்து போயிருந்தன. சில கூடாரங்களுக்கு அருகில் சின்னச்சின்ன மரங்கள் நின்றிருந்தன. ஆனாலும்இ அனேக வீடுகளுக்கருகில் நெருஞ்சிமுட்செடி கூட இல்லை.
ஆறுமுகத்திற்கு இரண்டு பிள்ளைகள். போரின் பிடியில் மூத்தவன் மறைந்து போக.. இளையவளுடன் முகாம் வந்துசேர்ந்தார். மகள் 'சாதனா' விற்கும் வயது இருபத்தைந்து ஆகிவிட்டது. போரின் வடுவை அவளும் தாங்கியிருந்தாள். கால் ஒன்று இயங்க மறுத்துவிட்டது.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சாதனா போனவாரம் தான் முகாம் வந்திருந்தாள். எல்லா வேலையுமே கனகுதான். என்ன செய்வது? அவளும் வருத்தக்காறியாகிவிட்டாள். யாரை யார் நோக?
'ம்.. சாப்பாடு குடுபடுது போல. போய் எடுத்துவருவம். பிந்தினால் அடிச்சோறுதான் கிடைக்கும். போவம்..'
சுமையலறை நோக்கி நடந்தாள் கனகு.
தண்ணீர் எடுக்க வரிசை... சாப்பாடு எடுக்க வரிசை... சாமான்கள் ஏதும் கொடுத்தால் அதற்கும் வரிசை...ஏன்இ மலசலகூடம் போகக்கூட வரிசையில் தான். வரிசையில் நின்று நின்றே வலியேறிப்போய்விட்ட கால்களுக்கும் இன்னும் தான் விடுதலை இல்லை.
வீட்டிலிருக்கையில் ஞாயிற்றுக்கிழமைகளில் அநேகமாக கனகு 'கூழ்' வைப்பாள். பனம் பனுவலால்; கூழ் அருந்தும்போது மூக்கினால் நீர் சிந்தும். உறைப்பு உச்சமாகவேயிருக்கும். கூழையும் குடித்துவிட்டு மாமர நிழலில் சோபாகட்டிலில் கிடந்து ஒரு குட்டித்தூக்கம் போட்டால்.... ஆதைவிட வேறொருசு;கமும் ஆறுமுகத்திற்கு இல்லை.
காலையிலே எழுந்தவுடன் ஆறுமுகத்திற்கு தேநீர் கொடுப்பதுதான் கனகுவின் முதல் வேலையாகவிருக்கும். அதன் பிறகுதான் அடுத்த வேலை. சாதனாவும் வேளையாகவே எழுந்து தாயுடன் கூடியாடிவேலை செய்வாள்.
ஆனால்இ இன்று அவள் தன் வேலைகளை செய்யக்கூட யாரையம் நம்பியிருக்க வேண்டிய காலமாக போயிற்று.
எடுத்து வந்த உணவை மூன்று கோப்பைகளில் போட்டு மூவரும் உண்டனர்.
'அம்மா, எங்களை இவங்கள் எப்ப எங்கட ஊருக்கு விடப்போறாங்கள்?. எத்தினை நாளைக்குத்தான் இந்த பருப்பையும் லீக்ஸையும் சாப்பிடுறது?'
சாதனாவும் தன்னுள் அடங்கிக்கிடந்த எண்ணக்குமுறல்களை சிறகடிக்கவிட்டாள்.
'பிள்ளையார்தான் இதுகளை கேட்கிறதுக்கு இருக்கிறது? விடுறநேரம் கண்டுகொள்ள வேண்டியது தான்'
முகளை சற்று ஆறுதல்படுத்துவதாய் இருந்தனகனகுவின் வார்த்தைகள்.
அன்றொருநாள்..
முகாமிலிருந்த பல இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டனர். சந்தேகத்தின்பேரில் கைதாம் .இவர்களில் சாதனாவும் ஒருத்தி.
'விசாரிச்சுப்போட்டுவிடுவம்' என்று கொண்டு செல்லப்பட்டவர்கள் ஒன்றரை மாதமாகியும் விட்டபாடில்லை.
மகளை யோசித்துயோசித்து கனகுவும்இ ஆறுமுகமும் இன்னும் வருத்தக்காறராகிவிட்டனர்.
நாட்கள் வேகமாக ஓடிமறைந்தன.
'இஞ்சரப்பா, நாளையான் பேப்பரில பிடிச்சபிள்ளையளிட பேர் விபரம் வருதாம். எங்கையெங்க பிள்ளையள் இருக்கென்று அதிலை போடுப்படுமாம்.'
'ஆரப்பா உனக்கு சொன்னது?'
ஆவலுடன் கேட்டார் ஆறுமுகம்
'பரஞ்சோதி அண்ணர்தான சொன்னவர்.'
என்றாள் கனகு.
ஆறுமுகத்தாருக்கு போன உயிர் மீண்டது போலிருந்தது.
'பொத்திப்பொத்தி வளர்த்தன் ஒரேயொரு பொம்பிளைப்பிள்ளையென்று. அதுக்கும் ஏதுமொன்று என்றால்........... பிறகேன் நான்? கடவுளே என்ர பிள்ளைக்கு ஒன்றுமே நடக்க கூடாது.'
'நீங்களொண்டுக்கும் யோசிக்காதேங்கோ. அவளக்கொண்டும் நடக்காது. ஆறுமுகத்தாரின் கண்கள் குளமாகின. உதடுகள் இன்னுமின்னும் ஏதோ பேச உன்னியது. ஆனாலும் வார்த்தைகள் வெளிவர மறுத்தன.
மௌனமாகிவிட்டாள் கனகு.
அவளுக்கும் கண்கள் கலங்கிவிட்டது. ஆனாலும் அதை அடக்கிக்கொண்டாள்.
மறுநாள் விடிந்தது-
அதிகாலையிலேயே எழுந்துவிட்ட ஆறுமுகம் பரபரப்புடனிருந்தார்
எத்தனை எத்தனை பெற்றோர்கள். ஆவலுடனிருந்தனர். பத்திரிகையை புரட்டுவதற்காய்.....
அவர்களில் ஒருவராய் ஆறுமுகமும் நின்றிருந்தார்.
ஆறுமுகத்தாரின் கைகளில் பத்திரிகை கிட்டியது. விபரம் வந்திருந்த பக்கத்தை ஆவலுடன் புரட்டினார். நீண்டு விரிந்து கிடந்த அந்த பட்டியலில் கிடந்த ஒவ்வொரு பெயர்களையும் ஆறுமுகத்தின் கண்கள் தேடிக்கொண்டிருந்தது.
சாதனாவின் பெயர் அதிலே இடம்பெற்றிருக்கவில்லை. ஆறுமுகத்திற்கு என்ன செய்வதென்றே தெரியாமல் போனது. கண்கள் இருட்டிக்கொண்டுவந்தது .உடல் பதறியது. பத்திரிகையைமீண்டும் மீண்டும் புரட்டினார்.
அவளதுபெயர் இல்லையென்பது உறுதியாகிவிட்டது போலும். ஆறுமுகத்தின் பார்வைபத்திரிகையில் நிலைக்குத்திநின்றது.
'அப்ப என்ர பிள்ளை..??'
கதறினார். புலம்பினார்....... மௌனித்துபோனார். கடைசிவரியிலே 'குறிப்பு' என்று போடப்பட்டிருந்தது.
'குறிப்பிடப்பட்ட பெயர் விபரங்களை தவிர வேறு எவரும் எம்மால் கைது செய்யப்படவில்லை'
'அப்ப என்ர பிள்ளை..? கடவுளே, என்ர பிள்ளைக்கு என்ன நடந்தது?'
நிற்க முடியாமல் கீழே விழுந்தார் ஆறுமுகம்.
கனகுவுக்கும் விடயம் தெரிந்தது. கதறியவாறு அவ்விடத்தை நோக்கி ஓடிவந்துகொண்டிருந்தாள் அவள்.
பிள்ளை மீளவில்லை. அனால் அம்புலன்ஸ் வண்டி மட்டும் வேகமாக வந்து பிறேக் போட்டு நின்றது. அந்த அநாதைகளை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்வதற்காக....
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago