Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2023 ஒக்டோபர் 06 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
காலம் ஒவ்வொருவர் மீதும் ஒவ்வொரு கடமையை விதித்திருக்கின்றது. அதனை நிறைவேற்றுதல் மிகப் பெரிய பொறுப்பாகும். பெறுகின்ற சம்பளத்திற்காக மட்டுமன்றி, தர்மத்திற்காகவும் சேவைக்காகவும் மக்கள் நலனுக்காகவும் இதனைச் செய்ய வேண்டி இருக்கின்றது.
ஆயினும், இலங்கையில் நடைபெற்ற பாரிய அரசியல் மற்றும் ஆயுத மோதல் சார்ந்த சம்பவங்களில் பொறுப்பு முறையாக நிறைவேற்றப்படாத காரணத்தினால்தான் பொறுப்புக்கூறலை நிலைநாட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றமை கண்கூடு.
இந்தப் பின்னணியில், கடந்த சில தினங்களுக்குள் இரு அரச அதிகாரிகளின் சேவை பற்றிய விவகாரங்கள் மிக அதிகமாக பேசப்படுகின்றன.
முதலாவது நபர், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 2 மாத குழந்தைக்கு சிகிச்சையளிப்பதற்காக தனது நோய்நிலையைக் கூட கருத்திற் கொள்ளாது கடமையை நிறைவேற்றச் சென்ற நிலையில், நோய் அதிகரித்து மரணத்தை தழுவிய வைத்தியர் பாஹிமா சஹாப்தீன்.
இரண்டாவது நபர், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக இருந்த தனக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தன்னால் கடமைகளை சுயாதீனமான முறையில் நிறைவேற்ற முடியாது எனக் கருதி தன்னுடைய பதவியை இராஜினாமாச் செய்து, நாட்டை விட்டு வெளியேறியுள்ள நீதிபதி ரி.சரவணராஜா ஆவார்.
இலங்கையில், தமக்கு வழங்கப்பட்ட கடமையை அதன் பொறுப்புணர்ந்து நிறைவேற்றுதல் என்பது மிக அரிதாகவே காணப்படுகின்ற ஒரு சூழலில், பொறுப்புக்கள் மற்றும் பொறுப்புக் கூறல் பற்றி பேசப்படுகின்ற நிலையில், இவ்விரு சம்பவங்களும் நாம் கற்க வேண்டிய பாடங்கள் ஆகும்.
யுத்த காலப் பகுதியில் அரசாங்கம் மற்றும் படைத்தரப்பு சில சந்தர்ப்பங்களில் பொறுப்புடன் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் சர்வதேசம் வரைச் சென்றிருக்கின்றன. இதனால் அரசாங்கம் பொறுப்புக்கூறலை மேற்கொள்ள வேண்டும் என்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.
யுத்த காலப்பகுதியை நோக்குகின்ற போது, அரச தரப்பு மட்டுமன்றி விடுதலைப்புலிகள், ஒட்டுக்குழுக்கள், ஏனைய ஆயுதக் குழுக்கள், இந்திய இராணுவம் என தொடர்புபட்ட ஒவ்வொரு தரப்புடனும் பொறுப்புடனும் செயற்பட்டனவா என்பது ஆராயப்பட வேண்டியது. குறிப்பாக விடுதலைப் புலிகள் முஸ்லிம்கள் விடயத்தில் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருக்கின்றனர் எனலாம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஏற்படுத்திய அதிர்வுகளில் இருந்து இன்னும் நாம் மீளவில்லை. அதற்கு ஒரு துளியளவு கூட நீதி நிலைநாட்டப்படவில்லை. இப்போது புதுப்புது ஆதாரங்கள் வெளிக்கிளம்பிக் கொண்டிருக்கின்ற போதிலும், கூட நீதி நிலைநாட்டப்படுமா என்பது சந்;தேகத்திற்கிடமாகவே உள்ளது.
குருந்தூர்மலை என்ற ஒரு சிறிய விவகாரத்தை கையாண்ட நீதிபதிக்கே இத்தனை அழுத்தம், அச்சுறுத்தல் விடுக்கப்படுமாக இருந்தால், அரசியல் அதிகாரத்திற்காக நிகழ்த்தப்பட்ட ஒரு பாரிய பயங்கரவாத தாக்குதல் பற்றிய விசாரணையை சுயாதீனமாகவும், நீதமாகவும் விசாரிக்க முற்படுகின்ற அதிகாரிகளின் நிலை என்னவாகும் என்பதை சிந்திக்க முடியாதுள்ளது.
சஹ்ரான் குழுவை கட்டுப்படுத்துமாறு ஏற்கனவே முஸ்லிம் மக்கள் கோரியிருந்தனர். அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னமே புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்ததாக கூறப்படுகின்றது. ஆனால் பொறுப்புவாய்ந்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் இவ்விடயத்தில் பொறுப்பில்லாமல் நடந்திருக்கின்றார்கள் என்பது நாடறிந்த ரகசியமாகும்.
ஆகவே, சம்பந்தப்பட்ட எவராலும் பொறுப்புக்கூறலை சரிவரச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்போதிருந்த ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் எனப் பலரும் இது விடயத்தில் பொறுப்பும் பொறுப்புக்கூறலும் அற்ற கதைகளையே தொடர்ச்சியாக கூறிக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
உயர் அரச கட்டமைப்பிலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களிலும் மட்டுமன்றி, சாதாரணமான அரச இயந்திரச் செயற்பாடுகளிலும் கூட கடமையுணர்ந்து, பொறுப்புணர்ந்து செயற்படாத தன்மையைக் காண முடிகின்றது. இந்தப் போக்கு எல்லா மட்டங்களிலும் வியாபித்திருக்கின்றது.
அரச சேவையில் இருக்கின்ற அதிகாரிகளும் சாதாரண உத்தியோகத்தர்களும் எந்தளவுக்கு தமது கடமை உணர்ந்து, பொறுப்புணர்ந்து பணியாற்றுகின்றார்கள்? பொறுப்புக்கூறலை மேற்கொள்ளக் கூடிய விதத்தில் அவர்கள் பணியாற்றுகின்றார்களா? என்பது கேள்விக்குரியாக உள்ளது.
அரச அலுவலகங்களில் குறிப்பிட்டளவான அதிகாரிகள் கடமையுணர்ந்து மக்களுக்குச் சேவையாற்றுகின்றார்கள் என்றாலும், கணிசமான அரச உத்தியோகத்தர்கள் அவ்வாறில்லை என்பது பொது அபிப்பிராயமாகும்.
வினைத்திறனற்ற செயற்பாடு, அலுவலக நேரத்தை சுரண்டுதல், பொறுப்பற்ற விதத்தில் பணியாற்றுதல், மக்களை மதிக்காமை, நேரத்தை இழுத்தடித்தல் என பல போக்குகளை மக்கள் அவதானிக்கின்றனர். பொதுவாக இவ்வாறானவர்களிடம் எதிர்காலத்தில் பொறுப்புக்கூற வேண்டி வரும் என்ற பயம் இருப்பதில்லை. இந்த நிலை தற்போது தனியார் துறையிலும் ஊடுருவியுள்ளது.
பொறுப்புணர்ந்து சேவையாற்றுகின்ற அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள் என்பதை மறுக்க முடியாது. நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்கள், சமூகத்திற்காக பாடுபடுபவர்கள். தமது கடமையை உணர்ந்து சேவையாற்றுகின்ற அதிகாரிகள், பொறுப்புக்கூறலை முன்னுணர்ந்து செயற்படுகின்ற தொழிலாளிகள் தொடக்கம் அதிகாரத்தில் உள்ளவர்கள் அனைவரும் தனியாக நன்றியுடன் நோக்கப்பட வேண்டியவர்கள்.
அந்த வகையிலேயே, டாக்டர் பாஹிமாவின் சேவை இன்று குறிப்பாக சிங்கள சமூகத்தினால் சிலாகித்துப் பேசப்படுகின்றது. தான் நோயுற்று வீட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும், தனது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற ஒரு பச்சிளம் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக டாக்டர் பாஹிமாi வத்தியசாலைக்கு வந்து, அக்குழந்தைக்கு சிகிச்சையளித்துள்ளார்.
இந்நிலையில், அவரது நோய்நிலை அதிகரித்து, அவசர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பல தினங்களுக்குப் பின்னர் உயிரிழந்துள்ளார். ஒரு சிங்கள குழந்தைக்காக தனது உயிரைக் கொடுத்த ஒரு தியாகியாகவே வைத்தியர் பாஹிமா நினைவுகூரப்படுகின்றார்.
‘நாட்டில் வருமானம் போதாது’, ‘பிரச்சினை’ என்று கூறிக் கொண்டு வெளிநாடுகளுக்கு வைத்தியர்கள் மட்டுமன்றி சாதாரண ஆட்களும் போய்க் கொண்டிருக்கின்ற ஒரு காலத்தில், தமது தொழிலில் பொறுப்பற்ற தனமாக நடந்து கொள்வோரும் நம்மிடையே காணப்படுகின்ற சூழலில், தனதுயிரை துச்சமென மதித்து சேவையாற்றிய வைத்தியர் பாஹிமா வரலாற்றில் மறக்க முடியாதவர்.
இந்த இடத்தில் வைத்தியர் ஷாபியும் நினைவு கூரத்தக்கவர். இந்த வைத்தியர், ஆயிரம் சிங்களப் பெண்களுக்கு கருத்தடை செய்ததாக போலியாக குற்றம்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு, பின்னர் எந்தக் குற்றமும் அற்றவர் என விடுதலை செய்யப்பட்டார். ஷாபி மீதான குற்றச்சாட்டுக்கள் நூறு வீதம் சோடிக்கப்பட்டவை என்பதை சிங்கள சமூகமும் விளங்கிக் கொண்டுள்ளது.
ஆனால், இத்தனை அழுத்தங்கள், பிரச்சினைகள் வந்த போதும் ஷாபி சஹாப்தீன் நாட்டை விட்டு வெளியேறவில்லை. இன்னும் அதேபகுதி வைத்தியசாலையில் அதே சிங்கள மக்களுக்கு சேவையாற்றிக் கொண்டிருக்கின்றார். மறுபுறத்தில், வைத்தியர்களான பாஹிமாவும் ஷாபி முஸ்லிம் சமூகம் பற்றிய தோற்றப்பாட்டை அழகுபடுத்தியுள்ளனர் எனலாம்.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே, முல்லைத்தீவு நீதிபதி ரி.சுரவணராஜா தனது பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஒரு அதிகாரி பதவியை இராஜினாமாச் செய்வது சாதாரணமானது என்றாலும், ஒரு சாதாரணமான காரணத்திற்காக இந்த முடிவை அவர் எடுக்கவில்லை என்பதே இங்கு முக்கியமானது.
குருந்தூர்மலை விவகாரம் தொடர்பான வழக்கில் தனக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல், அதனால் ஏற்பட்ட மன அழுத்தங்களின் காரணமாக பதவியை இராஜினாமாச் செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுவது உண்மையென்றால், ஒரு நீதிபதி தனக்கான கடமையை, பொறுப்பை சரிவரச் செய்வதற்கு தடங்கல் செய்த காரணத்தினால் இவ்வாறான முடிவொன்றை எடுக்க அவர் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார் எனலாம்.
இறுதி யுத்த காலத்தில் இடம்பெற்ற விவகாரங்களுக்காக தமிழர்கள் நீதியை, பொறுப்புக்கூறலை வேண்டி நிற்கின்றனர். யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் தம்மீது மேற்கொள்ளப்பட்ட மீறல்களுக்காக முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் நீதி கிடைத்தாக வேண்டும். இப்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி தேவையாகவுள்ளது.
இப்படியாக எல்லோரும் நீதி வேண்டி நிற்கின்றன ஒரு காலகட்டத்தில் ஒரு நீதிபதியே தன் கடமையைச் செய்ய விடாமல் தடுக்கப்படுவதும், தனக்கு பாதுகாப்பு இல்லை உணர்வு ஒரு நீதிபதிக்கே ஏற்பட்டு நாட்டை விட்டு வெளியேறுவதும், இலங்கையருக்கு மிகப் பெரும் கைசேதமாகும்.
ஆகவே, பொறுப்புடனும் பொறுப்புக்கூறல் உணர்ந்தும் செயற்படுகின்றவர்கள் அடையாளப்படுத்தப்பட்டு பாராட்டப்பட வேண்டும். அவ்வாறில்லாத அதிகாரிகள் தொடக்கம் ஆட்சியாளர்கள் வரை அனைவரும் தத்தமது பொறுப்புடன் பணியாற்றுவதற்கான பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.
2023.10.03
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago
7 hours ago