2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

‘வேறு கோணத்தில் பார்க்க மாட்டோம்’

அதிரதன்   / 2020 ஜூலை 30 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அபிவிருத்தி என்பதை, அரசாங்கக் கட்சியோடு சேர்ந்திருப்பவர்கள் பார்க்கின்ற அதேகோணத்தில், நாங்கள் பார்க்க மாட்டோம். மக்களும் அந்தக் கோணத்தில் பார்த்து மயக்கம் அடைந்துவிடக் கூடாது. ஆக, அரசியல் தீர்வுத் திட்டத்தையும் அபிவிருத்தியையும் உரிமை சார்ந்த அபிவிருத்தி அல்லது, அபிவிருத்தியோடு கூடிய உரிமை அல்லது, பொருளாதார உரிமை என்ற அடிப்படையில், இந்த இரண்டு விடயங்களையும் சமாந்தரமாகக் கொண்டு செல்வோம் என்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத் தலைமை வேட்பாளரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளருமான கி. துரைராஜசிங்கம் தெரிவித்தார்.   
அவர் ‘தமிழ்மிரர்” பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் முழுவிவரம் வருமாறு:   

கே: வாக்களிப்பில் மக்கள் அக்கறையற்று இருப்பதாகக் கருத்துகள் வெளியிடப்படுகின்றன. வாக்களிப்பை அதிகரிப்பதற்குரிய செயற்பாடு எப்படியிருக்கிறது? 

இந்த விடயம், எங்களை அதிகம் பாதிக்கின்றதும் குழப்புகின்றதுமான விடயமாகத்தான் இருக்கின்றது. தமிழ் மக்கள், வாக்களிப்பில் கட்டாயம் அக்கறை செலுத்தவேண்டியவர்களாக இருக்கிறார்கள். இந்த வகையிலான தூண்டுதல்களை, பொது நோக்கத்தோடு செயற்படுகின்ற எல்லா நிறுவனங்களும் அக்கறையுடன் செய்ய வேண்டும். குறிப்பாக, மக்களோடு நெருங்கிய தொடர்பை வைத்திருக்கின்ற கோவில்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள் போன்றவையெல்லாம் இதில் கட்டாயம் அக்கறை செலுத்த வேண்டும்.  

ஏனென்றால், இப்போதிருக்கின்ற சூழ்நிலையில் வாக்குப்பலத்தை, எங்களுடைய சகோதர இனம் எவ்வளவு பெறுமதியுள்ளதாக ஆக்கி, அதன் வழி தங்களுடைய இலக்குகளை அடைந்து கொள்கின்றார்கள் என்பதை உணர்ந்து, எங்களுடைய மக்களும் மிகவும் உத்வேகத்தோடு வாக்களிப்பில் பங்குபற்ற வேண்டும் என்கின்ற செய்தியை, பல முனைகளிலிருந்தும் ஊட்ட வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கின்றது.   

கே: உங்களது வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரச் செயற்பாட்டில், ஒற்றுமையின்மை காணப்படுவதாகக் குறையிருக்கிறதே?

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், எல்லாக் கட்சிகளிலும் இந்த விடயம் காணப்படுகின்றது. இது விகிதாசாரத் தேர்தல் முறைக்கே உள்ள இயல்பு. சொல்லப்போனால், ஜே.வி.பி இன்னார் இன்னாரைத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்ய வேண்டும். எனவே, அவர்களை முன்நிலைப்படுத்தக் கூடியதாக மற்றையவர்கள் செயற்பட வேண்டும் என்ற கட்டளையின் அடிப்படையில், தேர்தலை அவர்கள் சந்திக்கின்ற பொழுது, அவர்களுக்குள்ளே இந்தப் பிரச்சினைகள் இருக்காது.   

ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெறுமதியுண்டு. அவர்கள், இந்தத் தேர்தல் களத்தில், தாங்கள் கையாளக்கூடிய உத்திகளைக் கையாண்டு, விருப்பு வாக்குகளை அவர்கள் பெறுவதற்கு, எந்தவிதத் தடைகளையும் விதிப்பது கிடையாது. ஆனால், ஓர் ஒற்றுமையின் அடிப்படையில் அந்தச் செயற்பாடுகள் இருக்க வேண்டும் என்பதில், எல்லோருக்கும் அக்கறை இருக்கின்றது.   

தேசிய கட்சிகளைப் பொறுத்தவரையில், ஒருவரையொருவர் சுட்டுக் கொன்றமை, சிறையில் இருப்பது என்கின்ற விடயங்கள் எல்லாம் எதைக்காட்டுகின்றது என்றால், இந்த விகிதாசாரத் தேர்தலில் உள்ள போட்டித்தன்மையையே ஆகும். ஆக, எங்களுடைய கட்சியைப் பொறுத்தவரையில், எங்கள் வேட்பாளர்கள் அனைவரும், வாக்குகளைக் கவர்ந்து எடுக்கக்கூடிய விதத்திலான ஆதரவுத்தளத்தைக் கொண்டவர்கள் என்ற விதத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வேட்பாளர்களோடு, அவர்களுடைய ஆதரவாளர்கள், அதிதீவிர அக்கறை கொண்டவர்களாகச் செயற்படுகின்றார்கள்.   

கே: தற்போதைய அரசியல் நிலையில் இருந்து, எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கான எதிர்காலத்திட்டம் குறித்து விளக்க முடியுமா?

எதிர்காலத்திட்டத்தில், எங்களது நிகழ்ச்சி நிரலில் முதலாவது இடத்தைப் பெற்றுக் கொள்வது அரசியல் தீர்வைக்காண்பது ஆகும். இப்போது இருக்கின்ற ஜனாதிபதி, அவருடைய கட்சி என்பன, கடும் போக்கைக் கையாளுகின்ற இந்தச் சூழ்நிலையில், எங்களுடைய எதிர்காலத்திட்டம் ஆரம்பத்திலேயே மிகக்கடினமாக இருக்கும். எது, எவ்வாறிருப்பினும் எங்களுடைய அடைவுகளை, பேச்சுவார்த்தை, சாத்விகம், புரிந்துணர்வு என்ற அடிப்படையில் தொடரவேண்டி இருக்கின்றது.   

அதேநேரத்தில், எங்களுடைய மக்கள், அபிவிருத்தி தொடர்பில், அதிக அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் அலட்சியப்படுத்தவில்லை. ஆனால், அபிவிருத்தி என்பதை, அரசாங்கக் கட்சியோடு சேர்ந்திருப்பவர்கள் பார்க்கின்ற அதேகோணத்தில், நாங்கள் பார்க்க மாட்டோம். மக்களும் அந்தக் கோணத்தில் பார்த்து மயக்கமடைந்துவிடக் கூடாது என்பதில் அக்கறையுடன் இருக்கிறோம்.   

ஆக, அரசியல் தீர்வுத்திட்டத்தையும் அபிவிருத்தியையும் உரிமை சார்ந்த அபிவிருத்தி அல்லது, அபிவிருத்தியோடு கூடிய பொருளாதார உரிமை என்ற அடிப்படையில், இரண்டு விடயங்களையும் சமாந்தரமாகக் கொண்டு செல்லும் வகையில், எங்களுடைய எதிர்காலத்திட்டங்கள் அமையும். 

கே: வடக்கு, கிழக்குப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில், த.தே.கூட்டமைப்பு, தனது எதிர்கால நடவடிக்கைகளில் மிக முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில், முன்வைக்கும் செயற்றிட்டம் யாது

இளைஞர்களை அறிவூட்டிக் கொண்டு, எங்களுடைய சமுதாயத்தின் அங்கத்தவர்களாகவும் தமிழ்த் தேசிய நீரோட்டத்தில் அவர்களையும் இணைந்துக் கொள்ளக்கூடிய விதத்திலும் இளைஞர்களை வழிநடத்திச் செல்வதுதான் முக்கியமான விடயமாக அமையும்.   

கே: மக்களுக்குத் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் கூறவருவது என்ன? 

தற்போதைய நிலையில், சிங்களப் பெருந்தேசியவாதம் விஸ்வரூபம் எடுக்கின்ற ஒரு நிலைமையுண்டு. எனவே, தமிழ் மக்கள், தமிழ்த் தேசியத்தைப் பற்றிக் கொண்டவர்களாக, தங்களுடைய அரசியலைக் கொண்டு செல்லவேண்டியவர்களாக இருக்கின்றார்கள். இந்த அடிப்படையில், எங்களுடைய மூலோபாயங்கள், மக்களுடன் நெருக்கமாக விடயங்களைக் கொண்டு செல்கின்ற வகையில், எங்களுடைய கட்சிக் கிளைகளின் ஊடாக, மக்களை விழிப்புணர்வு ஊட்டக்கூடிய செயற்பாடுகளைச் செய்து, தமிழ்த் தேசியத்தில் பற்றுறுதி கொண்டவர்களாக மக்களை வழிநடத்திக் கொண்டு செல்கின்றது.   

அதேவேளை, 90களுக்குப்பிற்பட்ட காலங்களில், தங்களுடைய வாழ்க்கையைத் தொடங்கிய இளம் சந்ததியினர், தங்களுடைய வரலாற்றுத் தொடர்ச்சியை அறியாமல் இருக்கின்ற நிலைமையை மாற்றி, அந்த வரலாற்றுத் தொடர்ச்சி தொடர்பில், அறிவூட்டுவதன் மூலம், நாங்கள் தற்கால சூழ்நிலைகளை எவ்வாறு கடந்து செல்லாம் என்பது தொடர்பில், அவர்களையும் எங்களோடு அழைத்துக் கொண்டும் அணைத்துக் கொண்டும் செல்கின்ற செயற்பாடுகளை இனிவரும் காலங்களில் செய்ய இருக்கின்றோம்.   

கே: அம்பாறை மாவட்டத்திலும் சரி, மட்டக்களப்பு மாவட்டத்திலும் சரி இனத்துவப் பிரச்சினைகளைத் தூண்டி, பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறானவைகள் பற்றி உங்களது கருத்தென்ன?

இன முரண்பாடு ஒன்றுதான், கட்சிகளின் மூலதனமாகிவிட்டது. உண்மையில், எங்களுடைய கட்சி, பாரம்பரியமான கட்சி. பல்வேறு வரலாற்றுத் தடயங்களைப்பதித்து வந்து கொண்டிருக்கின்ற கட்சி. இனம் தொடர்பான இந்த விடயங்களை, உணர்ச்சியூட்டி, ஒருவித மாயைக்குள், மக்களைக் கொண்டு செல்லாமல், கருத்தாளம் மிக்கதாக மக்களை வழிநடத்திக் கொண்டு செல்லும் பொழுதுதான், நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய தீர்வை, நாங்கள் பெறமுடியும்.   
கே: தேசிய பட்டியல் விவகாரத்தில், அம்பாறையில் ஆசனம் இழக்க நேரிட்டால் வழங்கப்படுமா? அதேநேரத்தில் ஏனைய மாவட்டங்களில் தோற்றவர்களுக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறதா?

தேசிய பட்டியல் விடயம் குறித்து, இப்போது ஆருடம் கூறவேண்டிய தேவை கிடையாது. இருந்தாலும், அம்பாறை மாவட்டத்தில் ஆசனத்தை நாங்கள் வென்றெடுப்போம்.   

கே: மட்டக்களப்பைப் பொறுத்த வரையில், மேய்ச்சல் தரைப் பிரச்சினை மிக முக்கியமானது. இதில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

மேய்ச்சல் தரை யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதைக் கண்டறிவதற்கே, நிர்வாகத்தால் முடியாமலிருந்தது. ஆனால், நாங்கள் தான் அது மகாவலி அதிகார சபையின் கீழே வருகிற பிரதேசம் என்று கண்டறிந்து, அதனுடைய செயற்றிட்டங்களை ஆராய்ந்து, அதனடிப்படையில் அங்கு அத்துமீறிக் குடியேறியவர்களை வெளியேற்றி, அதிகார சபையின் ஏற்பாடுகளுக்கமைய மேய்ச்சல்தரையை, அதிகாரபூர்வமுள்ளதாகப் பெற்றுக் கொள்வதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டோம். உண்மையில் மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பில், ஒரு தீர்வைக்கண்ட கட்சி என்ற வகையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்புதான் அந்தப் பெயரைப் பெறும் என்று, இந்த இடத்தில் கூறிக் கொள்ள வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X