2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களுக்கான நீதி?

Mayu   / 2024 ஓகஸ்ட் 26 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற அநியாயங்களுக்கான, மனித உரிமை மீறல்களுக்கான நீதி நிலைநாட்டுதல் பற்றியே வருடக் கணக்காகப் பேசிக் கொண்டிருக்கின்றோம். இவ்வாறான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே இனப் பிரச்சினை தீர்வு கோரிக்கைகளும் அரசியல் முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆனால், 33 வருடங்களுக்கு முன்னர் தமது சொந்தப் பூர்வீக மண்ணான யாழ்ப்பாணத்தில் இருந்து விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு நடந்த அநியாயங்கள் பற்றியும், அவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது பற்றியும் பெரிதாக யாரும் பேசுகின்ற மாதிரி தெரியவில்லை. இது ஒருவகை பாரபட்சம் இல்லையா?

1990ஆம் ஆண்டுதான் தமிழ் ஆயுதக் குழுக்களின் அட்டகாசம் உச்சக் கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியது எனலாம். 

குறிப்பாக, முஸ்லிம்கள் தார்மீக ரீதியாக மட்டுமன்றி, பௌதீக (ஆளணி) அடிப்படையிலும் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளித்துக் கொண்டிருந்த போதிலும் கூட, முஸ்லிம்களை நோக்கி ஆயுதங்கள் இக்காலப் பகுதியில் திருப்பப்பட்டன.

‘தமிழ் ஈழம்’ என்று இன்று வரை அடையாளப்படுத்தப்படுகின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்கள் தமிழ் ஆயுதக் குழுக்களிடம் இருந்து இக் காலப்பகுதியில் சொல்லொண்ணா துன்பங்களை அனுபவித்தனர். அதற்காக முஸ்லிம்கள் தரப்பிலிருந்து சண்டியர்களால் அங்கொன்றும் இங்கொன்றுமாக அப்பாவி தமிழர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களை சரி என்று இப்பத்தி வாதிடவில்லை.

புலிகள்,  ஏனைய ஆயுதக்குழுக்கள்,  இந்திய அமைதி காக்கும் படைகள், அரச படைகளுக்கு இடையில் முஸ்லிம்கள் இருதலைக் கொள்ளியாக மாறிய காலம் என அதனைக் குறிப்பிடலாம். குறிப்பாக,  கிழக்கில் விடுதலைப் புலிகளால் பள்ளிவாசல் படுகொலைகள், கப்பம், கடத்தல், கொலை எனப் பல அநியாயங்கள் நடந்தேறின.

இதற்கு சமாந்திரமாக, 1990ஆம்  ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி  வட மாகாணத்தில் வாழ்ந்த  90 ஆயிரத்திற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் ஒரே நாளில் வெளியேற்றப்பட்டனர்.  புலிகள் ஒரு சாதனையாக நினைத்த இந்த நகர்வு மிகப் பெரும் வரலாற்றுத் துயராக, கறையாக அமைந்தது என்பதே உண்மையாகும்.

ஒரு நிலப்பரப்பில், வாழையடி வாழையாக வாழ்ந்து வருகின்ற இனக் குழுமத்தை அல்லது மக்கள் கூட்டத்தை தமது தேவைக்காக அங்கிருந்து முற்றாக வெளியேற்றுதல் என்பது நேரிடையாக கூறின் ஒரு இனச் சுத்திகரிப்பு ஆகும்.

அப்பாவி தமிழ் சகோதரர்கள் மனம் கோணக் கூடாது என்பதற்காக அதைப்  பூசி மொழுக முடியாது.

வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம்களை உடனடியாக வெளியேறுமாறும், கையில் சொத்துக்கள் எதனையும் கொண்டு செல்லக் கூடாது என்றும் புலிகள் அறிவித்தனர்.
முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படலாம் என்பதாலும் முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காகவுமே அவ்வாறு புலிகள் இவ்வாறு செய்ததாக அப்போது சொல்லப்பட்டது.

ஆனால், தமிழீழ எல்லைக்குள் கணிசமாக முஸ்லிம்கள் இருப்பது ஆபத்து என்பதும், புலிகள் 90களில் பலம்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் முஸ்லிம்கள் அங்கிருப்பது ஆட்புலத்தை கட்டமைக்கத் தடையாக அமையலாம் எனவும் புலிகள் கருதியிருக்கலாம் என்றே இந்தச் சம்பவத்தை ஆய்வு செய்த சர்ஜூன் ஜமால்டீன் போன்ற முஸ்லிம் ஆய்வாளர்களும் ஒருசில தமிழ் நோக்கர்களும் கருதுகின்றார்கள்.

இப்படி வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள், நகைகளையோ, வாகனங்களையோ பணம் போன்ற சொத்துக்களையோ எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஏன் அதிகமான ஆடைகளையோ மருந்துப் பொருட்களையோ கூடக்கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
அவ்வாறு கொண்டு செல்ல முயன்றவர்களிடமிருந்த நகைகள், பணம் போன்றவை புலிகளால் பறிமுதல் செய்யப்பட்ட கதைகளை இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் இன்றும் கூறுகின்றனர்.
இந்த வெளியேற்றமும், அது நடந்தேறிய விதமும் மிக மோசமான முன்னுதாரணமாக அமைந்தது. 

ஒரு சிறுபான்மைச் சமூகத்திற்காகப் போராடும் குழு, இன்னுமொரு சிறுபான்மை இனத்திற்கு அநியாயமிழைப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது.
ஆகவேதான், அவர்கள் சொன்ன காரணங்களைத் தவிர, ஆட்புலத்தைப் பலப்படுத்துவதற்காகவும் முஸ்லிம்களின் நகைகள், சொத்துக்களைச் சூறையாடுதல் போன்றவற்றுக்காகவும் இந்த வெளியேற்றம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்ற அபிப்பிராயங்கள் முன்வைக்கப்படுகின்றன.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட கிட்டத்தட்ட ஒரு இலட்சம் முஸ்லிம்கள் தமது பிள்ளைக் குட்டிகளோடு கையில் பணமோ, நகையோ எங்குப் போகின்றோம் என்ற திசையோ தெரியாமல் தாய் மண்ணிலிருந்து புறப்பட்டார்கள்.

வள்ளங்களிலும் உழவு இயந்திரங்களிலும் கால்நடையாகவும் அந்த வடக்கிற்குக் கீழுள்ள நிலப் பரப்புகளுக்கும் புத்தளம் போன்ற இடங்களுக்கும் வந்தனர்.
முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காக இப்படிச் செய்ததாகவும் புலிகள் தரப்பில் கூறப்பட்டது. அப்படியென்றால், அவர்களது சொத்துக்களை,  நகைகளைக் கொடுத்து அனுப்பியிருக்க வேண்டும் அல்லது அவற்றைப் பத்திரமாகப் பாதுகாத்து மீள ஒப்படைத்திருக்க வேண்டும். அப்படியும் நடக்கவில்லையே!

ஒரு குறிப்பிட்ட நிலத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்கின்ற மக்கள் அங்கிருந்து இரவோடிரவாக துரத்தியடிக்கப்படுவோம் என்று நினைத்திருப்பார்களா? கையில் பணமோ, பொருளோ இல்லாமல் எங்குச் செல்கின்றோம் என்று தெரியாமல் அந்த ரணங்களை எப்படிக் கடந்திருப்பார்கள்? என்று இன்றும் கூட நினைக்க முடியாதுள்ளது.

இப்படியான இனச் சுத்திகரிப்பு  ஒன்று சிங்கள ஆட்சியாளர்களால் கூட தமிழ் மக்களுக்கோ முஸ்லிம்  மக்களுக்கோ இடம்பெறவில்லை 
என்பது கவனிப்பிற்குரியது.

ஆகவேதான், இது விடுதலைப் போராட்டத்தில் மிகப் பெரிய கறையாக, சாபமாக அமைந்தது என்று கூறலாம். ஆனால், ஒரு விடயம் இங்கு முக்கியமானது.

அதாவது, விடுதலைப் புலிகள் தமது நிகழ்ச்சி நிரலுக்காக இப்படிச் செய்த போதும், இதனை சில தீவிர தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் அரசியல்வாதிகளும் ஆதரித்த போதும், சில முற்போக்கு தமிழ் எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்களும் இதனை எதிர்த்தார்கள்.
மிக முக்கியமாக அப்பாவித் தமிழ் மக்கள் இதனை விரும்பவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை என்பதே உண்மையாகும்.

இரண்டறக் கலந்து வாழ்ந்த சகோதர முஸ்லிம்கள் துரத்தியடிக்கப்படுவதை சகோதர வாஞ்சையுள்ள எந்த தமிழ் மகனும் ஏற்கவில்லை. அதேபோன்று அதற்கு எதிராகப் போராடும் திறனில்லை.

ஆனால், முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவதை எண்ணி அழுது புலம்பி, முஸ்லிம்களுக்குக் கூடவே நீண்டதூரம் ஓடிவந்து, ‘கவலைப்பட வேண்டாம்’ என ஆறுதல் கூறி, தம்மால் முடியுமான உதவிகளைச் செய்த வடபுல தமிழ் மக்களை மறந்து விட முடியாது. இதனை இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் நன்றியுடன் இன்றும் நோக்குகின்றனர்.

இது நடந்து மூன்று தசாப்தங்கள் கடந்து விட்டது. புத்தளத்திலும் மன்னார் மற்றும் அதனையண்டிய பிரதேசங்களிலும் இந்த முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் என சனத்தொகை பல இலட்சமாகப் பெருகி விட்டது. அந்தந்த இடங்களிலேயே அவர்கள் நிலை கொண்டு விட்டனர்.

இருப்பினும், இந்தச் செயலுக்காகக் குறிப்பிட்ட விடுதலை இயக்கத்திற்கு எதிராக ஒரு விசாரணை நடத்தப்படவும் இல்லை. முஸ்லிம்களுக்கு நீதி வழங்கப்படவும் இல்லை. இன்று ஜனநாயகம்,  மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றம் பற்றிப் பேசுகின்ற உள்நாட்டு, வெளிநாட்டுத் தரப்புக்கள் இதனைக் கிட்டத்தட்ட மறந்து விட்டனர்.

அடுத்த விடயம், இந்த மக்களுக்கு பிராயச்சித்தம் அல்லது இழப்பை ஈடுசெய்யும் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. குறிப்பாக, அவர்களில் பலர் புத்தளம் போன்ற இடங்களில் நிரந்தர வாசிகளாக மாறி விட்டனர். அவர்களில் சிலருக்கு மீளவும் வடக்கிற்கு என்று ஆரம்பத்திலிருந்து வாழ்க்கையை தொடங்குவது  சிரமமாக இருக்கலாம். ஆனால், அது அவர்களின் தாய்நிலம் என்பதை மறுக்க முடியாது.

அந்த வகையில், இதுவரை அவர்களில் சொற்பளவானோரே மீளக் குடியேற்றப்பட்டுள்ளனர். மீதமுள்ளோரைக் குடியேற்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொண்ட முயற்சிகள் கைகூடவில்லை. 

இதற்குப் பிரதானமாகக் கூறப்படுவது வடக்கு தமிழ் அரசியலும், சிலரது மனப்பாங்கும் ஆகும்.
இந்த நிலைமைகள் மாற வேண்டும். வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி வழங்கப்படுவதுடன், அவர்களின் பூர்வீக நிலத்தை வழங்குவதற்கு, இன்று நீதி நியாயம் என்று பேசுகின்ற தமிழ் அரசியல்வாதிகள் முன்னிற்க வேண்டும்.

07.23.2024


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X