Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Johnsan Bastiampillai / 2022 செப்டெம்பர் 15 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். எஸ். எம் ஐயூப்
இலங்கையின் தலைவர்களின் ஊழல்களும் மோசடிகளும் அடக்குமுறைகளும் என அனைத்தும், சர்வதேச அரங்குகளிலும் இன்று பேசுபொருளாக மாறியுள்ளன. ஆனால், ஆச்சரியமான விடயம் என்னவென்றால், உலகத் தலைவர்கள் இவற்றைப் பற்றிப் பேசுவதை, இலங்கையின் தலைவர்கள் கேட்காததைப் போல் இருப்பதேயாகும்.
இந்தப் பிரச்சினையை, உலகத் தலைவர்கள் எந்தளவு பாரதூரமாகக் கருத்தில் கொண்டு இருக்கிறார்கள் என்றால், இலங்கையின் தலைவர்கள் பொருளாதாரத்தை கையாளும் விதத்தை, ஒரு மனித உரிமை சார்ந்த பிரச்சினையாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவை கருதுகிறது.
பொருளாதார பிரச்சினையால் தலைதூக்க முடியாமல் இருக்கும் இலங்கையின் விவசாயம், உரத்தட்டுப்பாட்டால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் சிறுபோகம், பெரும் போகம் ஆகிய இரண்டும் உரத்தட்டுப்பாட்டால் வெகுவாக பாதிக்கப்பட்டன. இந்த வருடமும் சிறுபோகம் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், அரசாங்கம் செய்வதறியாது தவிப்பதைக் கண்ட உலக வங்கி, உரம் கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு 70 மில்லியன் டொலர் (சுமார் 250 கோடி ரூபாய்) வழங்கியது. ஆனால், உலக வங்கி வழங்கிய பணத்தில் 120 கோடி ரூபாய், அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக ‘கோப்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் அரச நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் முன்னாள் தவிசாளர் கலாநிதி சரித்த ஹேரத் திங்கட்கிழமை (12) கூறினார்.
அரசியல்வாதிகளினதும் அரச அதிகாரிகளினதும் ஊழல் காரணமாக, தற்போது உலக வங்கி தாம் உரம் கொள்வனவு செய்வதற்காக வழங்கும் பணம், கடுமையான கண்காணிப்பின் கீழ் கையாளப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது. அதன்படி, அந்தப் பணம் தொடர்பான கணக்குகளை தாம் குறிப்படும் நிறுவனமொன்றின் மூலம் கணக்காய்வு செய்ய வேண்டும் என்றும் அவ்வங்கி கூறியிருக்கிறது. இது நாட்டுக்கு பெரும் அவமானம் என்பதை எவரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தம்மால் தீர்வு காண முடியாத நிலையிலேயே, கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், கடந்த மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியது. ஆனால், நாணய நிதியம் இது போன்ற நிலைமைகளில் எந்தவொரு நாட்டுக்கும் பெரிதாக நிதி உதவி வழங்குவதில்லை.
அரச செலவை குறைத்து, வருமானத்தை அதிகரித்து, கடன்காரர்களிடமும் சில சலுகைகளைப் பெற்றுக் கொடுத்து, மீண்டும் தலைதூக்க உரிய ஆலோசனைகளையும் அவகாசத்தையும் பெற்றுக் கொடுப்பது மட்டுமே நாணய நிதியத்தின் நடவடிக்கைகளாகும். இதற்கிடையே, நீண்ட கால கடன் தொகையையும் மிகக்குறைந்த வட்டிக்கு அது சம்பந்தப்பட்ட நாட்டுக்கு வழங்கும்.
அதன்படி, தற்போது இலங்கைக்கு நான்கு ஆண்டுகளுக்கு 2.9 பில்லியன் டொலர் வழங்கவும் அத்தோடு இலங்கையின் வருமானத்தை அதிகரிப்பது எவ்வாறு என்பதைப் பற்றியும் அரச செலவை குறைப்பது எவ்வாறு என்பதைப் பற்றியும், நீண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் நாணய நிதியத்தின் அதிகாரிகளும் இலங்கை அதிகாரிகளும் இணக்கத்துககு வந்துள்ளனர்.
இந்தியா, இலங்கைக்கு இந்த வருடத்துக்குள் நான்கு பில்லியன் டொலர் உதவியாக வழங்கி இருக்கிறது. இலங்கை ஒரு வருடத்துக்கு ஆறு பில்லியன் டொலருக்கு மேல், வெளிநாடுகளில் இருந்து பெற்ற கடனை அடைப்பதற்காக செலுத்த வேண்டும். இலங்கை ஒரு வருடத்துக்கு எரிபொருளுக்காக மட்டும், ஐந்தரை பில்லியன் டொலர் செலவிடுகிறது. இவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, நாணய நிதியம் நான்கு வருடங்களுக்கு வழங்கும் 2.9 பில்லியன் டொலரால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி எழுகிறது.
நாணய நிதியம், இலங்கையின் அரசியல்வாதிகளினதும் அதிகாரிகளினதும் ஊழல்கள், மோசடிகள் என்பவற்றை நன்றாக அறிந்துள்ளமை, பேச்சுவார்த்தைகளின் போது நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கைகளில் தெளிவாக அறிய முடிகிறது.
கடந்த ஏப்ரல், மே, ஜூன், ஓகஸ்ட் மாதங்களில் நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இலங்கையின் அரச அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவாரத்தைகள் இடம்பெற்றன. அந்தப் பேச்சுவார்த்தைகளின் இறுதியில் நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கைகளில், 'ஊழலுக்கான வாய்ப்புகளைக் குறைத்தல்' தொடர்பாக விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைதூக்க முடியாமல் இருக்கும் இலங்கைக்கு, தலைதூக்க உதவி செய்தால் அதிலும் மோசடி செய்யும் நிலையில், இலங்கையின் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இருப்பதாலேயே, நாணய நிதியம் இந்த விடயத்தை அடிக்கடி குறிப்படுகிறது.
வெளிநாடுகளிடமிருந்தும் சர்வதேச நிறுவனங்களிடமிருந்தும் நன்கொடையாகவோ கடனாகவோ வருமானமாகவோ கிடைக்கும் பணத்தில் பெரும்பகுதியை, நுகர்வுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக பாவித்தால், எந்தவொரு நாடும் இறுதியில் பெரும் வெளிநாட்டுச் செலாவணிப் பிரச்சினையை எதிர்நோக்கியே ஆக வேண்டும். கிடைக்கும் வெளிநாட்டுப் பணத்தைப் பாவித்து, ஏற்றுமதிகளையும் மறுஏற்றுமதி, உல்லாசப் பிரயாணத்துறை, துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்ற சேவைப் பொருளாதாரத்தையும் வளர்த்துக் கொண்டால், செலாவணிப் பிரச்சினையை சமாளிக்க முடியும்.
இது பெரியதொரு பொருளியல் கொள்கை அல்ல. சாதாரண தர வகுப்பில் பொருளியல் படிக்கும் மாணவர்களுக்கும் இது தெரியும். இதனை நடைமுறையில் செய்ய வேண்டியவர்கள் ஆட்சியாளர்களேயாவர். ஆனால், இலங்கையின் அரச தலைவர்கள், இவ்வாறு பொருளாதாரத்தை வழிநடத்தவில்லை. இவ்வளவு பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி இருக்கும் நிலையிலும், அவர்கள் அதைப் பற்றிச் சிந்திக்கவில்லை. இலங்கைக்கு உதவி வழங்கும் சர்வதேச நிதி நிறுவனங்களுக்கும், இவர்களைப் பற்றித் தெரியும்.
அதனால் தான், சர்வதேச நாணய நிதியம் தமது உதவியோடு, சில கடும் நிபந்தனைகளை விதிக்கிறது. வரி வருமானத்தை அதிகரிக்க வேண்டும்; நலன்புரிச் செலவுகளை குறைக்க வேண்டும்; அரசியல் நோக்கங்களுக்காக, அரச நிறுவனங்களை தமது ஆதரவாளர்களால் நிறைத்துள்ளதால், அவற்றின் ஆளணியைக் குறைக்க வேண்டும்; நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மூடிவிட வேண்டும் அல்லது தனியார் துறையிடம் கையளிக்க வேண்டும் என்பதைப் போன்றவை, இந்த ஆலோசனைகளில் அடங்குகின்றன. உண்மையில் இந்த நிபந்தனைகள், அரச தலைவர்களுக்கு எதிரான குற்றப் பத்திரம் போன்றதாகும்.
“இலங்கையின் தற்போதைய நெருக்கடியானது, மோசமான நிதி முகாமைத்துவத்தின் விளைவாகும்” என, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, மே மாதம் 26ஆம் திகதி என்.டி.ரி.வி தொலைக்காட்சிக்கு கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அரசாங்கத்தின் திறனற்ற தன்மை காரணமாக உலக வங்கியும், ‘இலங்கை அரசாங்கம் வளர்ச்சித் திட்டம் ஒன்றை வகுத்துக் கொள்ளும் வரை, இலங்கைக்கு புதிதாக நிதி உதவி எதுவும் வழங்குவதில்லை’ என, மே மாதம் 24ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதே கருத்தை அவ்வங்கி, ஜூலை 28ஆம் திகதி வெளியிட்ட மற்றுமோர் அறிக்கையிலும் மீண்டும் வலியுறுத்தி இருந்தது. ஏற்கெனவே, இலங்கையில் பல்வேறு திட்டங்களுக்காக அவ்வங்கி ஒதுக்கியிருக்கும் நிதியைத்தான், அத்தியாவசிய தேவைகளுக்காக உபயோகிக்க அவ்வங்கி இப்போது அனுமதி வழங்கியிருக்கிறது.
இந்தப் பின்னணியில் தான், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் திங்கட்கிழமை (12) ஆரம்பமாகியுள்ளது. இலங்கையில் போர் மற்றும் அடக்குமுறைகளின் போது, மனித உரிமைகள் மீறப்பட்டு இருப்பதற்குப் புறம்பாக, மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதையும் அப்பேரவை, மனித உரிமைகள் மீறல்களாகவே இப்போது கருதுகிறது.
இயற்கை அனர்த்தங்கள் காரணமாகவோ கொவிட்-19 பெருந்தொற்று நோயின் காரணமாகவோ அன்றி, ஆட்சியாளர்களின் நிர்வாக முறைகேடு, ஊழல், மோசடி ஆகியவற்றின் பிரதான காரணமாகவே, இந்த நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நெருக்கடியை தோற்றுவித்த ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளை, மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா உயர்ஸ்தானிகர் மிச்சல் பச்சலே, ‘பொருளாதார குற்றங்கள்’ என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார். பொருளாதார பாதிப்புகள், மனித உரிமைகள் மீறலாகக் குறிப்பிடப்படும் முதலாவது முறை இதுவாகும்.
இலங்கைக்கு உதவி வழங்கும் அனைத்து சர்வதேச நிறுவனங்களும், தற்போது ஓர் இக்கட்டான நிலைமையை எதிர்நோக்கி இருக்கின்றன. மக்கள் பொருளாதார பிரச்சினைகளால் பாதிக்கப்படும் போது, அவற்றால் உதவி செய்யாதிருக்கவும் முடியாது. தாம் வழங்கும் உதவிப் பணத்தை, அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கொள்ளையடித்துக் கொள்கிறார்கள். எனவேதான், முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு, அவர்கள் இந்த ஊழல் விடயத்தை, இலங்கையின் தலைவர்களின் முகத்துக்கே கூறி வருகிறார்கள்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சனிக்கிழமை (10) இலங்கை வந்த சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் (யூஎஸ்எயிட்) நிர்வாகி சமந்தா பவர், ஊடகங்களைச் சந்தித்த போது, இலங்கையில் இடம்பெறம் ஊழல்களை மிக மோசமாகச் சாடினார்.
இவை அவமானத்துக்கான காரணங்களாயினும், இலங்கையில் எவரும் இவற்றைப் பற்றி வெட்கப்படுவதாகத் தெரியவில்லை; அதேபோல், இந்தப் பகற்கொள்ளைகளை நிறுத்தவும் தயாராக இல்லை.
இவ்வளவு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருந்தும், ஆட்சியாளர்கள் தமது சகாக்களுக்கும் பொதுச் சொத்தை கொள்ளையடிக்க வாய்ப்பு அளிக்கும் வகையில், மேன்மேலும் அமைச்சர் பதவிகளையும் .இராஜாங்க அமைச்சர் பதவிகளையும் வழங்கி வருகிறார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
3 hours ago
5 hours ago
7 hours ago