2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

​விளையாட்டாக மாறிய தேர்தல் சட்ட திருத்தம்

Editorial   / 2023 ஒக்டோபர் 28 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஐயூப்

முன்னைய அரசாங்கங்களைப் போலவே இந்த அரசாங்கமும் அரசியலமைப்பை திருத்தவும் தேர்தல் சட்டங்களைத் திருத்தவும் முயன்று வருகிறது. இந்த இரண்டு விடயங்களும் சிறுபான்மை மக்களுக்கு மிகவும் முக்கியமானவையாகும். ஏனெனில் இந்த இரண்டின் மூலமும் சிறுபான்மையினரின் அரசியல் பலத்தை குறைக்கலாம். 

ஜனாதிபதி கோட்டாபய 2020இல் புதிய அரசியலமைப்பொன்றை வரைவதற்கான ஆலோசனைகளை பரிந்துரைப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவின் தலைமையில் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர்கள் குழுவொன்றை நியமித்தார். அக்குழு தமது அறிக்கையை கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபயவிடம் கையளித்தது. 

அந்த அறிக்கையில் சில விடயங்கள் சிறுபான்மை மக்களை மோசமாகப் பாதிப்பதால் தாம் அவ்விடயங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்று அக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான கலாநிதி ஏ.சர்வேஸ்வரன் அண்மையில் தமிழ் ஊடகங்களிடம் கூறியிருந்தார். 

அதேவேளை, தற்போது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள கலப்பு தேர்தல் முறையானது 2001இல் தினேஷ் குணவர்தன தலைமையில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றினால் பரிந்துரைக்கப்பட்டதாகும். சிறுபான்மை மக்களும் பொதுவாகக் கலப்புத் தேர்தல் முறையை ஏற்றுக் கொண்ட போதிலும் அதன் நடைமுறையைப் பற்றி சிறுபான்மையினரிடம் அச்சம் இருப்பதும் பொதுவாக அறியப்பட்ட விடயமாகும்.

ஜனாதிபதி ரணிலும் தேர்தல் சட்டங்களில் கொண்டுவரப்பட வேண்டிய மாற்றங்களைப் பரிந்துரைப்பதற்காக முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில் கடந்த 16ஆம் திகதி ஒன்பது பேர் கொண்ட ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார். 

சுந்தரம் அருமைநாயகம், சேனாநாயக்க அலிசந்தரலாகே, நலின் ஜயந்த அபேசேகர, கிறிஸ்டோபர் சேனாரத்ன பெரேரா, அஹ்மத் லெப்பை முஹம்மத் சலீம், சாகரிக்கா தெல்கொட, எஸ்தர் சிறியானி நிமல்கா பெர்னாண்டோ மற்றும் தீபானி சமந்தா ரொட்ரிகோ ஆகியோர் அக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர். 

வழமையாக இது போன்ற குழுக்கள் நியமிக்கப்படும் போது ஒரு விடயத்தைக் குறிப்பிட்டு அது தொடர்பாக ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்யுங்கள் என்றே அவற்றை நியமிப்பவர் அக்குழுக்களின் நியமனத்தைக் குறிக்கும் வர்த்தமானியில் குறிப்பிடுவார். ஆனால் இக்குழுவை நியமித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் பரிந்துரைக்கப்பட வேண்டிய விடயங்களையும் ஜனாதிபதியே குறிப்பிட்டுள்ளார். 

உதாரணமாக, ஒருவர் பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் ஆகிய மக்கள் பிரதிநிதிகள் சபைகளில் இரண்டு சபைகளில் ஒரே காலத்தில் அங்கம் வகிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தொகுதிவாரி மற்றும் விகிதாசார தேர்தல் முறைகளின் கலப்பு முறையொன்றுக்கான பொருத்தமான பொறிமுறையொன்றை தயாரிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருவர் ஒரே காலத்தில் இரண்டு மக்கள் பிரதிநிதிகள் சபைகளில் அங்கம் வகிப்பது சரியா இல்லையா என்பதை முடிவு செய்து சிபாரிசு செய்வது அந்த வாணைக் குழுவின் பொறுப்பாகும். ஆனால் அது பிழையாக இருந்தாலும் அதற்கு செயலுருவம் கொடுக்க ஆணைக்குழு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றே ஜனாதிபதி அக்குழுவுக்குக் கட்டளையிட்டு இருக்கிறார். அதாவது ஜனாதிபதியின் கருத்துக்கள் இதில் திணிக்கப்பட்டுள்ளன. 

ஜனாதிபதி இந்த வர்த்தமானியை வெளியிட்டு இரண்டு நாட்களில், அதாவது கடந்த புதன்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்ற தேர்தல் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காகவென பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் கூட்டமொன்றைக் கூட்டியிருந்தார்.

அரசாங்கம் பாராளுமன்ற தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கிலேயே இத்தருணத்தில் இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறது என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் புதன்கிழமையே பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது குற்றஞ்சாட்டி தமது கட்சி அக்கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்று கூறினார். ஆனால், அவரது கட்டி அன்று அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டது. 

மனோ தலைமை தாங்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணி, ரிஷாத் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, டலஸ் அலகப்பெருமவின் குழு ஆகியனவும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டன. எனினும் இவ்வித இணக்கப்பாடுமின்றியே கூட்டம் முடிவடைந்தது. 

அரசாங்கம் தேர்தல்களை நடத்த விருப்பம் இல்லை என்பது தெளிவாகத் தெரியும் இந்தத் தருணத்தில் அரசாங்கம் ஏன் தேர்தல் சட்டங்களைத் திருத்த முற்படுகிறது என்பது சிறு பிள்ளைக்கும் விளங்கும் விடயமாகும். ஆயினும் அதற்காக ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு இருக்கும் நிலையில், பிரதமர் ஏன் இந்தக் கூட்டத்தைக் கூட்டினார் என்பது விளங்காத விடயமாகவே இருக்கிறது. 

அந்தக் கூட்டத்தின்போது, பாராளுமன்ற தேர்தல் சட்டம் தொடர்பாக ஏதாவது இணக்கம் ஏற்பட்டு இருந்தால் அதனை ஆணைக்குழுவுக்கு அறிவிக்க அரசாங்கத்திடம் ஏதாவது ஏற்பாடு இருந்ததாகவும் தெரியவில்லை.

அவ்வாறு அறிவித்தால் ஆணைக்குழு பாராளுமன்ற தேர்தலைக் கைவிட்டு மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் சட்டங்களைத் திருத்த நடவடிக்கை எடுக்க முடியும்.

அவ்வாறு அறிவிக்காமல் இருந்து ஆணைக்குழு பாராளுமன்ற தேர்தல் சட்டங்கள் தொடர்பாக வேறு முடிவை எடுத்தால் நடைமுறைப்படுத்துவது ஆணைக்குழுவின் முடிவையா அல்லது மேற்படி கூட்டத்தில் எட்டிய இணக்கப்பாட்டையா? பிரதமரின் கூட்டத்தில் எவ்வித இணக்கமும் ஏற்படாததால் இப்போதைக்கு அவ்வாறான சிக்கல் எதுவும் ஏற்படாது. 

பிரதமர் இந்தக் கூட்டத்தைக் கூட்டப் போவதை ஜனாதிபதிக்குத் தெரியாதா? அவ்வாறு ஜனாதிபதிக்குத் தெரியாமல் இது போன்ற பாரதூரமானதோர் விடயத்தைப் பற்றி கூட்டமொன்றைக் கூட்டும் அளவுக்கு தினேஷ் குணவர்தனவிடம் தைரியம் இருக்கும் என்று நம்ப முடியாது. உண்மையிலேயே ஜனாதிபதி பணித்தாலன்றி அவர் இது போன்றதோர் கூட்டத்தைக் கூட்டியிருக்கவே மாட்டார்.

எனவே ஆணைக்குழுவுக்கு புறம்பாகப் பிரதமரும் தேர்தல் சட்டத்தை மாற்றக் கூட்டம் கூட்டியதன் அர்த்தத்தை ஜனாதிபதிக்கு மட்டுமே தான் தெரிந்திருக்க முடியும். 
தேர்தல் சட்டங்களின், குறிப்பாகப் பாராளுமன்ற தேர்தல் சட்டங்களின் அடிப்படை அரசியலமைப்பிலேயே இருக்கிறது.

விகிதாசார தேர்தல் முறை, விருப்ப வாக்கு முறை மற்றும் தேசிய பட்டியல் ஆகியன அரசியலமைப்பின் பிரமானங்களாகும். எனவே தற்போதைய நிலையில் அரசியலமைப்பையும் தேர்தல் சட்டங்களையும் பிரிக்க முடியாது.

அவ்வாறு  இருக்க, கோட்டாபய மற்றும் ரணில் ஆகிய இரண்டு ஜனாதிபதிகளினது அரசாங்கங்களும் இவ்விரண்டு விடயத்தைப் பிரித்தே சட்ட மாற்றங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளன. 

கோட்டா பதிய அரசியலமைப்பொன்றை வரைவதற்கான பூர்வாங்க ஆலோசனைகளைப் பரிந்துரை செய்வதற்காக 2020 செப்டெம்பர் 3இல் ஜனாதிபதி சட்டத்தரணி ரெமேஷ் டி சில்வாவின் தலைமையில் நிபுணர்கள் குழுலொகன்றை நியமித்தார்.

அதனையடுத்து, தேர்தல் சட்டங்களைத் திருத்துவதற்கென 2021 ஏப்ரல் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றின்படி அப்போது அமைச்சராக இருந்த தினேஷ் குணவர்தனவின் தலைமையில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. 

ரணிலும் கடந்த வருடம் ஓகஸ்ட் 3ஆம் திகதி புதிய பாராளுமன்ற அமர்வைத் திறந்து வைத்து முன்வைத்த கொள்கை அறிக்கையில் புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பது அராங்கததின் முதன்மையான கடமைகளில் ஒன்றாகும் என்று குறிப்பிட்டார்.

அவரே தான் இப்போது தேர்தல் சட்டங்களைத் திருத்துவதற்காக ஆணைக்குழுலொன்றை நியமித்து இருக்கிறார். புதிய தேர்தல் சட்டங்கள் உள்ளிட்ட அரசியலமைப்பொன்றைத் தயாரிக்கத் தாம் 2016இல் நியமித்த குழுக்களின் பிரதான குழுவின் அறிக்கை இன்னமும் செல்லுபடியாகும் என்றும் அவர் அண்மையில் குறிப்பிட்டு இருந்தார்.

பிரச்சினைகளின் பின்புலத்தை ஆராயாமல் அந்தந்த நேரத்துக்கு நினைத்ததைச் செய்கிறார்கள் என்பதே இதன் மூலம் தெரிகிறது. 

கடந்த வருடம் ஜனாதிபதி ரணிலின் அரசியல் பலமானது ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியேயாகும். அம்முன்னணி தலைமையிலான அரசாங்கமே 2020 ஓகஸ்ட் மாதம் முதல் நாட்டில் இருக்கிறது. 

2023.10.25

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X