Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 31, திங்கட்கிழமை
Editorial / 2025 மார்ச் 05 , மு.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை நினைவுகூரும் தவக்காலம் புதன்கிழமை (04) ஆரம்பமாகிறது. மண்ணால் படைக்கப்பட்ட மனிதன் மீண்டும் மண்ணுக்குத் திரும்புவான் என்பதை நினைவுபடுத்தும் விதமாக விபூதிப் புதனன்று கத்தோலிக்கர்கள் நெற்றியில் விபூதி பூசப்படுகின்றது.
விபூதிப்புதன் முதல் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு வரையில் இந்த தவக்காலம் அனுஷ்டிக்கப்படுகின்றது. மனமாற்றத்தின் காலமான தவக்காலத்தில் நோன்பு இருத்தல், ஒறுத்தல்கள், ஜெபகங்கள் தவங்கள் போன்ற நல்ல காரியங்களில் ஈடுபடுவர்.
விபூதிப் புதன் அல்லது சாம்பல் புதன், கத்தோலிக்க மக்கள் தேவாலயம் சென்று வழிபட வேண்டிய முக்கியமானதும் கட்டாயமானதுமான கடன் திருநாளாகும். இதைச் சகோதரத்துவத்தின் நாள் என்றும் கூறுவார்கள்.
எல்லா மதங்களின் தத்துவத்திலும் இருக்கும் நிலையாமையை உணர்ந்து, இறைவனுடன் இணைய அழைப்பதை விபூதிப் புதன், கிறிஸ்தவ மதத்திலும் வலியுறுத்துகிறது.
கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கும் 40 நாட்கள் தவக்காலம் என்பது இந்த விபூதிப்புதன் தினத்திலிருந்தே தொடங்குகிறது. இயேசு சிலுவையில் மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழும் உயிர்த்த ஞாயிறு பெருவிழாவுக்கு முந்தைய நாற்பது நாள்களையும் தவக்காலமாகப் பின்பற்றப்படுகிறது.
தவக்காலம் என்பது கடந்தகாலத்தில் செய்த தவறுகளை உணர்ந்து திருந்தவும் மீண்டும் தவறுகளைச் செய்யாமல் உறுதியெடுத்துக்கொள்ளவும் மனம் வருந்தி, ஒறுத்தல் மூலமும் உண்ணா நோன்பு இருந்து நம்மை நாமே தூய மனிதர்களாகத் தயார் செய்துகொள்ளக் கடவுளால் தரப்பட்டிருக்கும் காலம் எனக் கொள்ளலாம்.
இந்தத் தவக்காலத்தில் மூன்று முக்கிய அம்சங்களை அதாவது, நோன்பிருத்தல், இறை வேண்டல், அறச் செயல்கள் (செபம், தபம், தர்மம்) புரிதல் போன்றவற்றை விசேசமாகக் கத்தோலிக்கர்கள் கடைப் பிடிப்பர்.
நோன்பிருந்து உணவைத் தள்ளிவைத்து உடலை வருத்துவ தோடல்லாமல் செபத்தின்வழி, இறைவனோடு உறவாடி தம் குற்றம் குறைகளையும் பலவீனங்களையும் தவறுகளையும் உணர்ந்து மனமாற்றம் பெறும் தருணம் ஆகும். பிறருக்கு உதவவும் இருப்பதைப் பிறருக்குக் கொடுத்து, பிறரோடு பகிர்ந்து கொண்டு, தர்ம காரியங்களில் ஈடுபடுவதற்குக் கட்டாயப்படுத்தப்பட்ட ஒப்பற்ற காலமாகும்.
நோயாளிகளைப் பார்த்து அவர்களது மனக்குறைகளைக் கேட்டறிந்து மனிதநேயத்துடன் வாழும் காலமாகும். ‘தன்னைப் போல் பிறனையும் நேசி’ என்ற இயேசு பெருமானின் கருத்தை உள்ளத்தில் கொண்டு உலகிலுள்ள மானிடர் அனைவரும் என் சகோதரர்கள்; என் சகோதரிகள் என்ற உறவோடும், உணர்வோடும் வாழத் தூண்டுவதும் இத்தவக் காலத்தின் நோக்கமாகும்.
குருத்தோலை ஞாயிறன்று வழங்கப்படும் ஓலைகளைச் சிலுவை செய்து, வீடுகளில் ஒரு வருடம் வரையில் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் மக்கள், அதனை விபூதி தினத்துக்கு முன் ஆலயத்தில் கையளிப்பார்கள். அந்த ஓலைகளை எரித்துப் பெறப்படும் சாம்பலே ‘சாம்பல் புதன்’ தினத்தில் நெற்றியில் பூசப் பயன்படுகிறது.
விபூதி புதனன்று தேவாலயத்துக்கு வரும் ஒவ்வொரு பக்தரின் நெற்றியிலும் “மகனே/மகளே நீ மண்ணாக இருக்கின்றாய், மீண்டும் மண்ணுக்கே திரும்புவாய் என்பதை மறவாதே” என்று கூறி, குருவானவர் சாம்பலினால் நெற்றியில் சிலுவை அடையாளம் வரைகிறார்.
உலக மீட்பர் இஜேசு கிறிஸ்து, சிலுவை மரணத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் நிகழ்வுக்கு முன்பு, தனது மரணத்தை அறிந்து, ஒரு மனிதனாக வேதனை கொண்டு, நாற்பது நாள்கள் இரவும் பகலும் உண்ணாமல் வனாந்தரத்தில் நோன்பு இருந்தார். அந்த நோன்பின்போது, தனக்கு வரப்போகும் பாடுகளை எதிர்கொள்ள மனத்திடம் தரும்படி தனது தந்தையை நோக்கி இரந்து கேட்பதை வேதாகமத்தில் காணலாம். கிறிஸ்துவின் இந்தத் துயர அனுபவத்தில் இணையும் நோக்கத்தோடும் தவக்காலத்தைக் கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்கள்.
தவக்காலத்தில் ஆடம்பர அணிகலன்கள், மாமிச உணவு, கேளிக்கை, பொழுதுபோக்கு இவற்றை வெறுத்து ஒதுக்கி, அதன் மூலம் மிச்சப்படுத்தப்படும் பணத்தை ஏழைகளுக்கு வழங்குவதைக் கிறிஸ்தவர்கள் வழக்கமாக கடைபிடித்து வருகிறார்கள்.
இத்தவக்காலம் பொருளுள்ள காலமாக அமைந்திட, அநீதிகளையும் தீயவற்றையும் இனம்காணும் மனமாற்றம் பெற்று, கிறித்துவை அடையாளம் காணும் அருளைப் பெற, ஆண்டவன் அருளை இறைஞ்சி மன்றாடுவோம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago