2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

வாயைக் கொடுத்து வாங்கிய வம்பு

Editorial   / 2020 மே 15 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே. சஞ்சயன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன், சிங்கள ஊடகம் ஒன்றிடம் வாயைக் கொடுக்கப் போய், வம்பை விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்.  

“விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவில்லை” என்று, சுமந்திரன் வெளிப்படுத்திய கருத்து, அவரது அரசியல் எதிர்காலம் குறித்த பலமான கேள்விகளை எழுப்பியிருக்கிறது.  

போர் முடிவுக்கு வந்த பின்னர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம், அரசியலுக்குக் கொண்டுவரப்பட்ட சுமந்திரன், இற்றை வரைக்கும், இலங்கைத் தமிழ் அரசியலில், நீக்க முடியாத ஒருவராக மாறி விட்டார்.  

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவராகச் சம்பந்தன் இருந்தாலும், அதன் பங்காளிக் கட்சிகளுக்கு மூன்று தலைவர்கள் இருந்தாலும், சுமந்திரன் தான் அதை இயக்குபவர் போலவே இருந்து வருகிறார்.  

இது, அவரது ஆளுமையால் கிடைத்த வாய்ப்பா அல்லது அவருடன் உள்ள தலைவர்களின் ஆளுமையின்மையா என்பது, முக்கியமான கேள்வியாகவே இருக்கிறது.  
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும் சுமந்திரனை, ஒரே ஒரு கேள்வியின் மூலம், எல்லோரும் நிந்திக்கும் ஒருவராக மாற்றி விட்டார், சிங்கள ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரம.  

ஆயுதப் போராட்டத்தை, சுமந்திரன் விமர்சித்திருப்பது சரியா, தவறா என்ற விவாதங்கள் ஒரு புறத்தில் இருக்க, இந்தச் சூழ்நிலை, சுமந்திரனை அவரது அரசியல் வரலாற்றில் மிக நெருக்கடியான காலகட்டத்துக்குள் தள்ளி விட்டிருக்கிறது என்பது தான் உண்மை.  
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் சுமந்திரன் நுழைந்ததும், சம்பந்தனுடனான நெருக்கமும் கூட்டமைப்புக்குள் இருந்த வெறுமை நிலையும், அவரைத் திடீரென முக்கியமானவராக மாற்றியது.  

தேசியப் பட்டியல் உறுப்பினராக இருந்தபோதே, அவருக்கு எதிரான பிரசாரங்கள் தீவிரமடைந்தன. கூட்டமைப்புக்கு வெளியே இருந்தவர்களும் கூட்டமைப்பை விட்டு வெளியேறியவர்களும், சுமந்திரனையே இலக்கு வைத்தனர்.  

2015 நாடாளுமன்றத் தேர்தலில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்ட சுமந்திரனுக்கு 50 ஆயிரத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகள் கிடைத்த போது, பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அவரைக் கடுமையான எதிரியாகக் கருதும் அரசியல் தரப்புகளுக்கு, அது அதிர்ச்சியைக் கொடுத்தது. அவரது வெற்றி, எப்படிச் சாத்தியப்பட்டது என்ற கேள்வி, இப்போதும் பலருக்கு இருக்கிறது.  

அதற்குப் பின்னர், ஐ.தே.க அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்பட்ட காலங்களில், ஐ.தே.க பிரமுகர் போலவே நடந்து கொள்கிறார், என்றொரு கருத்தும் நிலவியது.  

அதற்குக் காரணம், ஐ.தே.க அரசைக் காப்பாற்றுபவராகவும் அதற்கு முண்டு கொடுப்பவராகவுமே, சுமந்திரன் எப்போதும் காணப்பட்டார். அது, தமிழ் மக்களுக்கு அந்த விம்பத்தைக் கொடுத்து விட்டது.  

இப்போது, கூட்டமைப்புக்குள் தோற்கடிக்கப்பட வேண்டிய ஒருவரைக் கூறுங்கள் என்றால், எதிராக உள்ள கட்சிகளின் எல்லாப் பிரமுகர்களும் சுமந்திரனைத் தான் கூறுவார்கள். அந்தளவுக்கு அவர், சர்ச்சைகளை உருவாக்கி இருக்கிறார்; எதிர்ப்புகளைச் சம்பாதித்தும் வைத்திருக்கிறார்.  

இவ்வாறான நிலையில், இந்தமுறை நாடாளுமன்றத் தேர்தலில், கடந்த முறையை விட, இரண்டு மடங்கு அதிக வாக்குகள், அதாவது, ஒரு இலட்சம் வாக்குகள் கிடைக்கும் என்று, சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கூறியதாகவும் செய்திகள் வெளியாகின.  

அவரது இந்தக் கருத்து, அதீத நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகப் பார்க்கப்பட்ட நேரத்தில் தான், சமுதித்த சமரவிக்ரமவுக்கு அளித்த செவ்வி, சுமந்திரனை அதல பாதாளத்தில் தள்ளிவிட்டிருக்கிறது.  

இப்போது, சுமந்திரன் தனித்து விடப்பட்ட ஒருவராக மாறியிருக்கிறார்.  

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூட, அவரது செவ்வியை ஆதரிக்கத் தயாராக இல்லை. கூட்டமைப்பின் எல்லாப் பங்காளிக் கட்சிகளுமே, அவரை விழுந்து விழுந்து தாக்கியிருக்கின்றன.  

பங்காளிக் கட்சிகளும் தலைவர்களும் பிரமுகர்களும் சுமந்திரனை இந்தளவுக்குப் போட்டுத் தாக்குகின்ற நிலையில், அவரை எப்போதும் எதிர்த்து வந்த தரப்புகளுக்கு, இதைவிடப் பொன்னான வாய்ப்புக் கிடைக்காதல்லவா?  

இவர்களும் சேர்ந்து, இப்போது சுமந்திரனைத் தாழித்துக் கொட்டுகிறார்கள்.  

ஆக, கூட்டமைப்புக்கு வெளியிலும் உள்ளேயும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் சுமந்திரன்.  

இவ்வாறான ஒரு நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் சுமந்திரன் எவ்வாறு தாக்குப் பிடிக்கப் போகிறார் என்பதே, முக்கியமான கேள்வியாக இருக்கிறது.  

ஏனென்றால், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்தமுறை, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குக் கடுமையான போட்டி இருக்கிறது.  

விக்னேஸ்வரன் அணி, கஜேந்திரகுமார் அணி ஆகியவற்றின் கடும் போட்டியை மாத்திரமன்றி, ஐ.தே.க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஈ.பி.டி.பி போன்ற ஏனைய வழக்கமான எதிரிக்கட்சிகளையும் கூட்டமைப்பு, அங்கு சவாலாக எதிர்கொள்கிறது.  

யாழ்ப்பாணத்தில் உள்ள ஏழு ஆசனங்களை, இத்தனை கட்சிகளுடன் பங்கு போட வேண்டியுள்ள சூழலில், கூட்டமைப்புக்குக் கிடைக்கக் கூடிய ஆசனங்களின் எண்ணிக்கையைப் பற்றிய பலத்த சந்தேகங்கள் உள்ளன.  

இவ்வாறான நிலையில், கூட்டமைப்பின் முன்னாள் எம்.பிக்கள் மற்றும், புதிய வேட்பாளர்களின் போட்டிக்கு மத்தியில், சுமந்திரனால் தனது ஆசனத்தைத் தக்க வைக்க முடியுமா என்ற சந்தேகம் இப்போது அதிகரித்துள்ளது.  

ஏனென்றால், ஆயுதப் போராட்டம் தொடர்பாக, சுமந்திரன் வெளியிட்ட கருத்து, அனைத்துத் தமிழ் மக்களாலும் எதிர்க்கப்படுகிறது என்றில்லை; இந்தக் கருத்தை, வலுவாக ஆதரிப்பவர்களும் கணிசமாக இருக்கிறார்கள்.  

விடுதலைப் புலிகளின் காலத்திலேயே, புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்த போதே, இதைக் கூறியவர்கள் இருக்கிறார்கள்.  

ஆனால், அவர்களின் மத்தியில் கூட, சுமந்திரன் “ஹீரோ” ஆக முடியவில்லை என்பது தான், அவரது துரதிர்ஷ்டம். எல்லாத் தமிழ்க் கட்சிகளுக்கும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற அவா இருக்கிறது. அதைவிடக் கூடுதல் அவா, சுமந்திரன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் இருக்கிறது.  

இப்போதைய நிலையில், அவர்கள் சுமந்திரனைப் போட்டுத் தாக்குவதற்குப் பின்னால் உள்ள காரணம் அது தான். சுமந்திரன் பற்றிய கண்டனங்கள், கருத்துகள் தீவிரமாகப் பரவியுள்ள நிலையில், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தங்களின் பெயர்களும் ஊடகங்களில வந்து விட வேண்டும் என்பதற்காக, அறிக்கைகளை வெளியிட்டவர்கள் தான் அதிகம்.  

அதைவிட, சுமந்திரனோடு சேர்ந்து நின்றால், தாங்களும் தோற்கடிக்கப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில், அவருக்கு எதிராக அறிக்கை வெளியிட்டவர்களும் உள்ளனர்.  

சுமந்திரன், தனது ஆற்றல், வாதத் திறமையால் நீதிமன்றங்களில் சாதகமான தீர்ப்புகளைப் பெற்றிருக்கிறார். அதே வாயால்த் தான், இப்போது மோசமான நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கிறார்.  
இந்தமுறை, தேர்தலில் சுமந்திரன் வெற்றி பெறுவதென்பது, ‘குதிரைக் கொம்பு’ போன்ற விடயமாகத் தான் இருக்கப் போகிறது. ஏனென்றால், அவரைச் சுற்றித் தான் எல்லோரும் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சக்கர வியூகத்துக்குள் இருந்து வெளியேறும் வழி, சுமந்திரனுக்குத் தெரியுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  

அவர், இந்த வியூகத்தை உடைத்துக் கொண்டு வெளியே வந்தாலும் கூட, தேர்தலில், அவருக்குச் சாதகமான நிலை ஒன்று இருக்குமா என்பது, சந்தேகம் தான். அந்தளவுக்கு, சுமந்திரனுக்கு எதிரான கருத்தியல் வலுப்பெற்றிருக்கிறது.  

இது, எதிர்க்கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய வியூகம் அல்ல; அவரே போய், பொறிக்குள் மாட்டிக் கொண்டார் என்று தான் கூற வேண்டும்.  

தமிழ் மக்களின் உணர்வுபூர்வமான விவகாரங்களைக் கவனத்தில் கொள்ளாமல் இருக்கும் போது, அது எவ்வாறான விளைவுகளைத் தரும் என்பதை, சுமந்திரன் போன்றவர்கள் சாதாரணமாக எடைபோட்டு விட்டார்கள்.  

இந்த நிலையில், சுமந்திரன் அரசியலில் தப்பிப் பிழைப்பாரா என்பதை, நாடாளுமன்றத் தேர்தல் தான் தீர்மானிக்கப் போகிறது.  

அவர், 2015 தேர்தலுக்கு முன்னதாக, அளித்த ஒரு பேட்டியில், ‘தேர்தலில் தோல்வியடைந்தால், அரசியலை விட்டு விலகி விடுவேன்’ என்று கூறியதாக ஞாபகம். அப்போது, அவர் வெளியேறும் தேவை வரவில்லை. ஆனால், இப்போதும் அதே சபதத்தை அவர், நிறைவேற்றுவாரா என்று தெரியவில்லை.  

ஏனென்றால், புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் தோல்வியில் முடிந்தால், அரசியலை விட்டு விலகி விடுவேன் என்று முன்னர் கூறியிருந்தார்.  

ஆனால், அந்த அரசமைப்பு உருவாக்க முயற்சிகள், இப்போது முடங்கிப் போய் விட்ட நிலையிலும், சுமந்திரன் அரசியலில் நீடித்து வருகிறார்.  

எனவே, இந்த நாடாளுமன்றத் தேரதலில் தோல்வியைத் தழுவினாலும், சுமந்திரன் அரசியலை விட்டு ஒதுங்குவாரா என்பது சந்தேகம் தான்.  

அரசியலில் அவர் நிலைத்து நிற்க வேண்டுமானால், தமிழ் மக்களின் இதயத்தையும் அவர்களின் எதிர்பார்ப்புகளையும் முதலில் புரிந்து கொள்வது நல்லது.  

இல்லையேல், இப்போதையதைப் போலவே, எதிர்காலத்திலும் அவர், வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டிய பல சந்தர்ப்பங்கள் உருவாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .