Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Johnsan Bastiampillai / 2023 பெப்ரவரி 11 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
தென் கொரிய சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு புத்தகம், 2019ஆம் ஆண்டு கோடைகாலத்தில் வெளியாகியிருந்து. ‘ஜப்பான் எதிர்ப்பு பழங்குடிவாதம்’ (பனில் சோங்ஜோக்சுசி) என்ற தலைப்பில் பல வலதுசாரி எழுத்தாளர்களால் எழுதப்பட்ட இப்புத்தகம், ஜப்பானிய கொலனித்துவம் பற்றி பல ஆத்திரமூட்டும் பொய்களைக் கட்டமைத்தது.
கொலனித்துவத்தின் அம்சங்களான கட்டாய உழைப்பு, அரிசியைக் கொள்ளையடித்தல், பெண்களைச் சுரண்டுதல் போன்ற அம்சங்களைப் பற்றிய தற்போதுள்ள கொரிய வரலாறானது, இடதுசாரி மற்றும் இடது தேசியவாத தென்கொரிய வரலாற்றாசிரியர்களின் கட்டுக்கதைகளை அடிப்படையாகக் கொண்டது என்று இந்நூலின் ஆசிரியர்கள் வாதிட்டுள்ளனர்.
ஜப்பானிய சுரண்டலை விமர்சிக்கும் தென்கொரிய கல்வியாளர்களும் குடிமக்களும், ஜப்பான் எதிர்ப்பு பழங்குடிவாத - வலிமையான ஜப்பானிய எதிர்ப்பு உணர்வுகளாலும் தேசியவாத அரசியல் பிரசாரத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இப்புத்தகம் குற்றம் சாட்டியுள்ளது.
தென்கொரியாவில் அதிவலதுசாரித்துவத்தின் எழுச்சியின் புதிய அத்தியாயமாக, இந்தப் புத்தகத்தின் வரவு பார்க்கப்படுகிறது. வரலாற்றாசிரியர்கள், அறிவுஜீவிகள், ஊடகங்கள் எனப் பலரும் இப்புத்தகம் வரலாற்று உண்மைகளைத் திரித்து, ஜப்பானில் தீவிர வலதுசாரிகளால் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆதரிப்பதாக விமர்சித்தனர். ஆனால், இது 2019இல் தென்கொரியாவில் அதிகம் விற்பனையான புத்தகங்களில் ஒன்றாக மாறியது.
தென்கொரியாவில் தீர்க்கப்படாத வரலாற்று விடயங்கள் இன்றளவும் இடதுசாரி - வலதுசாரி மோதலின் முக்கிய களமாக இருந்து வருகிறது. சமகால அரசியல் உரையாடல்களில், வரலாற்று நிகழ்வுகள் தொடர்ந்து பேசப்படுகின்றன. இது அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் மத்தியில் கடுமையான விவாதங்களை அடிக்கடி தூண்டுகின்றன.
புதிய வரலாற்றைக் கட்டமைக்கும் முயற்சியினூடு, தென்கொரியாவில் தீவிர அதிவலதுசாரி, தனது செல்வாக்கைச் செலுத்த முனைகிறது. இடதுசாரிகளால் எழுதப்பட்ட ‘பொய்யான வரலாறு’ என்ற பொய்யை இவர்கள் மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள்.
பழைமைவாத அறிவுஜீவிகள், கல்வியியலாளர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள் என்போர் பழைமைவாத வரலாற்றுக் கதைகளை உருவாக்குவதிலும் அதிவலதுசாரி இயக்கங்களுக்கான அடையாளத்தை உருவாக்குவதிலும், முக்கிய பங்கு வகிக்கிறார்கள். தேசிய பெருமையை ஊக்குவித்து, சிதைந்த இடதுசாரிக் கருத்துகள் என்று அவர்கள் கருதுவதை எதிர்த்து, தென்கொரிய அறிவுசார் வலதுசாரிகள் ‘தாராளவாத ஜனநாயகத்தின்’ பாதுகாவலராக தம்மை நிலைநிறுத்திக் கொள்வதனூடு, அதிவலதுசாரித்துவத்துக்குக் களமமைத்துக் கொடுக்கிறார்கள்.
கம்யூனிச நாட்டில், ‘சுதந்திரம்’ அடைய முடியாதது என்று வலதுசாரிகள் நம்புவதால், தென்கொரியாவில் ‘தாராளவாத ஜனநாயகம்’ என்பது கம்யூனிசத்துக்கு எதிரானது என்று புரிந்து கொள்ளப்பட்டது. வட கொரியாவுடனான மோதல், அந்நாட்டின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கம்யூனிசத்தையும் வடகொரியாவையும் எதிர்ப்பது, தென்கொரியாவில் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு அடிப்படையில் ஒத்ததாக இருக்கிறது என்று வலதுசாரிகள் வாதிடுகின்றனர்.
தேசிய பிரிவினை மற்றும் கொரியப் போரின் அனுபவங்கள், தென்கொரியாவின் அரசியல் கதையாடலை ஆழமாகப் பாதித்துள்ளன. வடகொரியாவுடனான மோதல், தென்கொரிய அரசுக்கு மகத்தான சக்தியைக் கொடுத்தது. கம்யூனிச எதிர்ப்பு என்பது அதிகாரபூர்வ அரச சித்தாந்தமாக மாறியது. வடகொரியா ‘முழுமையான தீமை’ என்று அடையாளம் காணப்பட்டது. கம்யூனிசத்தை தோற்கடிப்பது, தேசிய முன்னுரிமையாகக் கருதப்பட்டது.
தென்கொரிய அரசு ‘தேசிய பாதுகாப்பு’ என்ற பெயரில் மக்களின் நடத்தைகளை எளிதில் ஒழுங்குபடுத்தலாம். எதிர்க்கட்சி நடவடிக்கைகளை அடக்கலாம். தென்கொரிய அரசாங்கத்தை விமர்சிக்கும் எவரையும் தென்கொரிய சமூகத்தை அழிக்கும் ‘கம்யூனிஸ்டுகள்’ மற்றும் ‘வடகொரிய உளவாளிகள்’ என்று முத்திரை குத்துவதற்கு தேசிய பாதுகாப்பு சட்டம் ஒரு சக்திவாய்ந்த வழிமுறையாக மாறியது. இதனால், பேச்சு சுதந்திரம் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது.
இதன் பின்புலத்தில் தோற்றம்பெற்ற சர்வாதிகார அரசு, வரலாற்று நினைவுகளின் உற்பத்தியை ஏகபோகமாக்கியது. சில நிகழ்வுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. மேலும் வரலாற்றின் குறிப்பிட்ட பதிப்புகளை மக்கள் நினைவில் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிரான அரச வன்முறையானது, தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்பை உறுதி செய்யும் அவசியமான ஒடுக்குமுறையாக அடிக்கடி சட்டப்பூர்வமாக்கப்பட்டது.
உயிர் பிழைத்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டனர். இருப்பினும் அவர்கள் தாங்களும் குற்றம் சாட்டப்படுவோம் என்ற பயத்தில் அமைதியாக இருக்க வேண்டியிருந்தது, இழப்பீடு அல்லது மன்னிப்புக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. இதுதான் தென்கொரிய யதார்த்தமாக இருந்தது.
பல வரலாற்று சம்பவங்கள், பொதுமக்களுக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை; அல்லது, தேச விரோதம் மற்றும் கம்யூனிசச் சார்பானது என்று தவறாக குறிப்பிடப்பட்டன. 1948ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் திகதி நிகழ்ந்த ஜெஜு எழுச்சியும் 1980 ஆம் ஆண்டு தோன்றிய குவாங்ஜு ஜனநாயக இயக்கம் ஆகியவை இங்கு குறிப்பிடத்தகுந்தவை.
ஏனெனில், சர்வாதிகார அரசு சாதாரண மக்களின் எதிர்ப்பை எவ்வாறு சட்டவிரோதமானதாகவும் முற்றிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் நினைவிலுள்ளதாகவும் அடையாளம் கண்டது என்பதை அவை எடுத்துக்காட்டுகின்றன. இவை இன்னொரு வகையில் அதிவலதுசாரித்துவத்தின் கதையாடல்கள் மைய அரசியல் நீரோட்டத்தில் செல்வாக்குச் செலுத்த வழிவகுத்தது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
அதிவலதுசாரித்துவத்தின் முக்கிய எதிரிகளாக கம்யூனிஸ்டுகள் இருந்தார்கள். இதனால் அதிவலதுசாரிக்கான தார்மீக ஆதரவு தென்கொரியாவைக் கட்டுப்படுத்திய அமெரிக்காவால் மறைமுகமாக வழங்கப்பட்டது. இதன்வழி இடதுசாரிகளையும் அவர்தம் சிந்தனைகளையும் ஒழித்துக்கட்டவியலும் என்று அமெரிக்க உளவுத்துறை நம்பியது.
2004ஆம் ஆண்டில் புதிய அதிவலதுசாரித்துவத்தின் தோற்றமும் தென்கொரிய வரலாற்றை மீண்டும் எழுதுவதற்கான அதன் முயற்சியானது ஒரு கருத்தியல் போரை நடத்துவதற்கும் பழைமைவாத குடிமக்களை பெரிய அளவில் அணிதிரட்டுவதற்குமான ஒரு பழைமைவாத திட்டமாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். இது உண்மையில் தீவிர அதிவலதுகளின் முதல் தீவிர அறிவுசார் இயக்கமாகக் கருதப்படலாம்.
கடந்த காலத்தில், அரசு அல்லது பழைமைவாதக் கட்சியால் மேல்-கீழ் கருத்தியல் பிரசாரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், புதிய வலதுசாரி இயக்கம் அரசு சாரா அரங்காடிகளால் தன்னிச்சையாகத் தொடங்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டது. பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கிறிஸ்தவ போதகர்கள் ஆகியோருடன் பழைமைவாத அரசியலுக்கு உள்ளீர்க்ப்பட்ட முன்னாள் மாணவர் ஆர்வலர்கள் தலைமையில், புதிய வலதுசாரி பழைமைவாதத்தின் புதிய, புத்துணர்ச்சியூட்டும் மற்றும் சர்வதேச அளவில் மரியாதைக்குரிய ஒரு தனித்துவமான அடையாளத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டது.
பழைமைவாத எண்ணம் கொண்ட பதிப்பகங்களை நிறுவுதல், புதிய பத்திரிகைகளை உருவாக்குதல், சிவில் அமைப்புகள், வலையமைப்புகளை உருவாக்குதல் மற்றும் ஏற்கெனவே உள்ள பழைமைவாத ஊடகங்களைப் பயன்படுத்தி, புதிய வலதுசாரி அறிவுஜீவிகள் பழைமைவாத மதிப்புகளை ஊக்குவிக்கவும் பழைமைவாத அரசியலைப் புதுப்பித்தல் போன்றன மேற்கொள்ளப்பட்டன.
புதிய வலதுசாரி அமைப்புகளின் சில நிறுவன உறுப்பினர்கள், 1980களில் மாணவர் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர். அவர்களின் முந்தைய அனுபவங்கள், பொதுக் கருத்தை வடிவமைப்பதில் மற்றும் அணிதிரட்டுவதில், கலாசார மேலாதிக்கத்தை ஒழுங்கமைத்து கட்டியெழுப்புவதில் அடிமட்ட மக்கள் முக்கியமானவர்கள் என்ற பாடத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தன.
கருத்தியல் ரீதியாக, புதிய அதிவலதுசாரியானது, கம்யூனிச எதிர்ப்பு பழைய வலதுசாரி மற்றும் பிடிவாதமான தேசியவாத பழைய இடதுசாரி இரண்டிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டக்கூடிய ஒரு மாற்று அரசியல் சக்தியாக தன்னை முன்வைத்தது. ஒருபுறம், புதிய அதிவலதுசாரித்துவத்தின் தீவிர பழைய வலதுசாரிகளிடமிருந்து தன்னைத் தூர விலக்கிக் கொண்டது. அது கம்யூனிச எதிர்ப்பு, வடகொரியா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றில் தெளிவான அரசியல் அல்லது பொருளாதாரப் பார்வை இல்லாமல் இருந்தது.
மறுபுறம், மறுபகிர்வு மற்றும் சமத்துவத்தை வலியுறுத்தும் பழைய மற்றும் நம்பத்தகாத சோசலிச கொள்கைகளை பின்பற்றுவதற்காக இடதுசாரிகளை புதிய அதிவலதுசாரித்துவம் விமர்சித்தது. வடகொரியாவுடன் சீர்திருத்தவாத அரசாங்கங்களின் கொள்கை, ஊக்குவிப்பு குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருந்தனர். கொரிய தீபகற்பத்தில் அமைதி, வடகொரிய ஆட்சியின் முடிவுடனேயே சாத்தியம் என்ற அமெரிக்க கொள்கைளையே அதிவலதுசாரித்துவம் பின்பற்றுகிறது.
தென்கொரிய அதிவலதுசாரித்துவத்தின் செயற்பாடுகள், பல ஆசிய நாடுகளில் புத்தெழுச்சி பெற்றுள்ள அதிவலதுசாரி சக்திகளின் செயற்பாடுகளுக்கு இணையானவை. தென்கொரிய அதிவலதுசாரித்துவம் சொல்கின்ற முக்கிய செய்தி, இன்று அதிவலதுசாரி தன்னைப் புதிதாகத் தகவமைத்து, மைய அரசியல் நீரோட்டத்தில் தன்னை முக்கியத்துவப்படுத்துகிறது. இதற்கு ஜனநாயக முகமூடி உதவுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago