Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Johnsan Bastiampillai / 2023 ஜனவரி 27 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
அதிவலதுசாரி தீவிரவாதம் என்பது, பொதுப்புத்தி மனநிலையில் மேற்கத்தைய உதாரணங்களுடனேயே நோக்கப்படுவதுண்டு.
குறிப்பாக, முஸ்லிம்களுக்கும் குடியேற்றவாசிகளுக்கும் கறுப்பினத்தவர்களுக்கும் எதிரான அதிவலதுசாரி செயற்பாடுகள், அதிக ஊடகக் கவனத்தைப் பெறுகின்றன. ஆனால், அதிவலதுசாரி தீவிரவாதத்துக்கு ஆசியாவும் விலக்கல்ல; ஆனால், அவை கவனம் பெறுவது குறைவு.
இந்தியாவில் மோடியின் இந்து தேசியவாதம், பிலிப்பைன்ஸில் டுடெர்ட்டின் போதைப்பொருள் போரும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளும், தாய்லாந்து அரசியலில் இராணுவம் மற்றும் முடியாட்சியின் மறுபிரவேசம், ஜப்பானில் ஷின்சோ அபேயின் பழைமைவாதம் நோக்கிய திருப்பம், ஜைனிச்சி கொரியர்கள் (பின்கொலனித்துவ ஜப்பானில் வசிக்கும் கொரிய சிறுபான்மையினர்) மீதான வெறுப்பரசியல் - எதிர்ப்புப் போராட்டங்கள், தென் கொரியாவில் மத்திய இடது அரசாங்கத்துக்கு எதிராக அதிவலதுசாரி டேகியூக்கி (தென் கொரிய தேசிய கொடி) அமைப்பால் அணிதிரட்டப்பட்ட பேரணிகள் போன்றவை, தீவிர வலதுசாரிகளின் அரசியல் செயற்பாட்டிலிருந்து, ஆசியா விடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
மேற்சொன்ன இவ்வரசியல் முன்னேற்றங்கள் உதாரணங்கள் மட்டுமே! ஆசிய ஜனநாயக நாடுகளின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் வகையில், அதிவலதுசாரிகளின் எழுச்சி, புதிய அரசியலை நோக்கி நகர்த்துகிறது. இது தீவிரவாதத்தை நியாயப்படுத்தி, ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிராகரிக்கின்றது.
இந்தப் பிராந்தியத்தின் எதேச்சதிகாரப் போக்கின் மையப் பங்குதாரர்கள் யார்? அவர்கள் எந்த வகையான அரசியல் நிகழ்ச்சி நிரல் மற்றும் கதையாடல்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்? ஜனநாயக அரசியலில் அவற்றின் தாக்கங்கள் என்ன ஆகியவற்றைப் புரிந்துகொள்வதில், எங்களின் அறிவு கணிசமாக வரையறுக்கப்பட்டுள்ளது.
அதிவலதுசாரி அரசியலை ஆதரிக்கும் நிறுவன உயரடுக்குகள், தமக்கான அடிமட்ட அமைப்புகளை ஆதரிக்கின்றன. அவை பெரும்பாலும் கீழ்மட்ட சிவில் சங்கங்கள் போல அணிதிரட்டுகின்றன. இந்த இயக்க வகை குழுக்கள், ஜனநாயகச் சீரழிவுடன் தொடர்புடையவை. இவ்வகைப்பட்ட அதிவலதுசாரி குழுக்களின் எழுச்சிக்கு, ஜனநாயகச் செயற்பாட்டில் அக்கறையற்ற மக்கள் திரளும் பங்களிக்கிறது.
உலகெங்கிலும் தீவிரவாதம் மற்றும் ஜனநாயக பலவீனத்தின் தொந்தரவான அரசியலைப் பற்றி பேசும்போது, ஆசிய சூழலில் தீவிர வலதுசாரி என்பதன் அர்த்தம், விளக்கத்தை வேண்டி நிற்கிறது.
மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் உள்ள அதிவலதை, ஜனரஞ்சக, தேசியவாத, இனவெறி என விவரிக்கின்றனர். இந்தியாவின் வலதுசாரி அரங்காடிகள் பற்றிய ஆய்வுகளில், இதே போன்ற விளக்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தக் கருத்தியல் கட்டமைப்புகள், ஆசியா முழுவதும் உள்ள தாராளவாத சக்திகளுக்கு சமமாகப் பொருந்துமா? ஆசியா முழுவதிலும் உள்ள தீவிர அதிவலதுசாரி குழுக்கள் மற்றும் அவர்களின் அரசியல் உரிமைகோரல்கள், மற்ற நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள அவர்களது சகாக்களுக்கு ஒத்ததா அல்லது வேறுபட்டதா? அவர்களின் கூற்றுகள், சித்தாந்தங்கள் வேறுபட்டால், அவை எங்கிருந்து பெறப்படுகின்றன?
இந்த வரலாற்று தருணத்தில், கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் தீவிர வலதுசாரி அணிதிரட்டலை ஏற்படுத்தும் செயல்முறைகள் மற்றும் காரணங்கள் என்ன? தென்னாசியா எவ்வாறு ஏனைய ஆசியப் பிராந்தியங்களில் இருந்து வேறுபடுகிறது? மேற்கத்திய ஜனநாயக நாடுகளின் தற்போதைய ஆய்வுகள், நவீன தாராளமய உலகமயமாக்கல் மற்றும் மக்கள்தொகை மாற்றத்தால் உருவாக்கப்பட்ட பொருளாதார நெருக்கடிகள் மற்றும் இன வெறுப்பு ஆகியவையே அதிவலதின் எழுச்சியின் பின்னணியில் இருப்பதாக வாதிடுகின்றன.
அடிப்படையில் இவை அனைத்தும், ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா, பிரேஸில் ஆகிய நாடுகளின் பகுப்பாய்வுகளை உள்ளடக்கிய பிற ஆய்வுகள், அரசியல் கட்சிகளின் உத்திகள், இடதுசாரி-முற்போக்குக் கட்சிகளின் தோல்விகள், கவர்ச்சியான தலைவர்களின் பங்கு போன்ற மேல்-கீழ் செயல்முறைகளில் கவனம் செலுத்துகின்றன.
கேள்வி யாதெனில், ஆசியாவில் தீவிர அரசியலை செயற்படுத்துவதற்குப் பின்னால், இதே போன்ற காரண காரியங்களும் சக்திகளும் செயற்படுகின்றனவா அல்லது தாராளவாத சித்தாந்தத்தின் ஒரு குறிப்பிட்ட பாதிப்பைத் தூண்டும் தனித்துவமான நிலைமைகள் உள்ளதா? இந்தப் பிராந்தியத்தின் அதிவலதை ஒரு பரந்த ஒப்பீட்டு அளவுகோலில் எவ்வாறு வைக்கலாம்?
இந்த வினாக்கள் முக்கியமானவை. இவற்றை விளங்க, ஆசியா என்ற பெருங்கண்டத்தின் பிராந்தியப் பிரிவுகளை மனங்கொண்டு, அதனடிப்படையில் வலதுசாரி தீவிரவாதத்தின் இயங்குதிசைகளை இனங்காணவியலும்.
ஒருதளத்தில் ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்தில் தீவிர தாராளவாத அரசியலின் வெளிப்பாடு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த மூன்று ஆசிய நாடுகளும், தீவிர வலதுசாரி அணிதிரட்டலின் வடிவங்களைப் புரிந்துகொள்வதற்கான முக்கியமான நிகழ்வுகளை முன்வைக்கின்றன.
ஏனெனில் அவற்றின் புவிசார் அரசியல் வரலாறுகள், அதற்கான பொதுவான தளத்தை வழங்குகின்றன, அதேநேரத்தில், நிறுவன வேறுபாடுகள் தனித்துவமான நிலைமைகளை அமைக்கின்றன. மிக முக்கியமாக, அவை அனைத்தும் பிராந்தியத்தில் கெடுபிடிப்போரின் குறிப்பாக கடுமையான மோதல்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கெடுபிடிப்போர் காலத்தில், ஆசியாவில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளிகளாக, மூன்று நாடுகளும் ஓர் அரசியல் நிலப்பரப்பைக் கொண்டுள்ளன. அவை, கெடுபிடிப்போர் கூட்டணி உறவுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன. பிராந்தியத்தில் கம்யூனிசத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அமெரிக்காவின் விருப்பத்திலிருந்து, இந்நாடுகளில் அரசியல் நிறுவனங்களை உருவாக்குவதிலும், உலகளாவிய கம்யூனிச எதிர்ப்பு திட்டத்துடன் இணைந்த அரசியல் உயரடுக்குகளை வளர்ப்பதிலும் ஆழ்ந்த ஈடுபாடு காணப்பட்டது.
ஜப்பான், தாய்லாந்தில் பழைமைவாத தாராளவாத அரசியலுக்கான முடியாட்சி மரபுகள், சித்தாந்தத்தின் மையத்தன்மையை கெடுபிடிப்போர் புவிசார் அரசியல் ஏற்பாடுகள் இல்லாமல் புரிந்து கொள்ள முடியாது. கொலனித்துவ மற்றும் போர்க் குற்றங்களின் பொறுப்புக்கூறலில் இருந்து, ஜப்பானின் ஹிரோஹிட்டோ பேரரசரை அமெரிக்கா காப்பாற்றியது, மேலும், ஜப்பானில் உள்ள தீவிர வலதுசாரிகளின் மைய அரசியல் சின்னமாக, பேரரசர் பணியாற்றினார்.
தாய்லாந்தில், இராணுவ ஜெனரல்களுடனும் முடியாட்சியுடனும் அமெரிக்கா கூட்டுச் சேர்ந்தது. 1932இல் முழுமையான முடியாட்சியைத் தூக்கியெறிந்த பிரிடி பானோமியோங்கின் நாடுகடத்தலுக்கு உதவியதோடு, அவரது ஆதரவாளர்களின் அடக்குமுறைக்கும் ஒத்துழைத்தது. தாய்லாந்தில் ஓர் அரசியலமைப்பு முடியாட்சி, இராணுவத்துடன் தனது கூட்டாண்மை மூலம் மாநில விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது.
சமகால ஆசியாவில் தீவிர தாராளவாத அரங்காடிகளை அடிபணிய வைக்க, அமெரிக்கா இராணுவத்தைப் பயன்படுத்துவது கெடுபிடிப்போர் அரசியலின் மற்றொரு மரபு. ஜப்பானிய ஏகாதிபத்தியங்களுடன் ஒத்துழைத்த இராணுவத் தலைவர்களின் கறைபடிந்த சாதனைகளை மீறி, தாய்லாந்திலும் தென் கொரியாவிலும் இராணுவத்துடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா எப்போதும் தயாராக இருந்தது.
எனவே, அமெரிக்கா இந்த எதேச்சதிகார நிறுவனங்களை பலப்படுத்தியது. அவை அரசியலில் அடிக்கடி தலையிட்டு, அரசாங்க அதிகாரத்தை ஏற்றுக்கொண்டன. போருக்குப் பிந்தைய தாய்லாந்தில் அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் இராணுவ சதிப்புரட்சிகளுக்கு இடையே நீண்ட கால ஊசலாட்டம் தொடர்ச்சியாக இருந்தது.
இராணுவம் சமீபத்தில் மீண்டுமொருமுறை அதிகாரத்துக்குத் திரும்பியது. இவையனைத்தும் கெடுபிடிப்போரின் விளைவிலான புவிசார் அரசியலின் உறுதியான தன்மையை நிரூபிக்கின்றன. இருந்தாலும், 1980களின் பிற்பகுதியில் தென்கொரியா, பல தசாப்தங்களாக நீடித்த இராணுவ சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு மாறியது. 21ஆம் நூற்றாண்டின் வலதுசாரி அரங்காடிகள், 1960களில் தென்கொரியாவை ஆண்ட பார்க் சுங் ஹீ போன்ற எதேச்சதிகார இராணுவத் தலைவர்கள் மீது, தங்கள் அரசியல் பார்வையை மையப்படுத்தினர். 1970களில் அவரது மகள் பார்க் கியூன்-ஹே இதன் நீட்டிப்பாகக் கருதப்பட்டார்.
அமெரிக்காவின் வலுவான தலையீட்டின் கீழ், இந்த மூன்று நாடுகளிலும் கெடுபிடிப்போர் ஒழுங்கு வெளிப்பட்டது. பாகுபாடான விவாதங்கள், அரசியல் ‘மற்றவர்களை’ உருவாக்கும் தீவிர வலதுசாரி நிகழ்ச்சிநிரல் ஊக்குவிக்கப்பட்டது. மேற்குலகில் உள்ள தீவிர வலதுசாரி சக்திகளைப் போல், பெரும்பாலும் மக்கள் என்ற பெயரில் அணிதிரளும் ஜனரஞ்சக சொல்லாட்சியுடனான அரசியலில், ஆசியாவில் உள்ள தீவிர வலதுசாரிக் குழுக்கள் இயங்கவில்லை.
மாறாக, ஜப்பானில் உள்ள தீவிர வலதுசாரிகள், கொலனித்துவ காலத்தில் ஜப்பானுக்கு முதன்முதலில் குடிபெயர்ந்த இன சிறுபான்மையினரின் உடல் ரீதியாக வேறுபடுத்த முடியாத ஜைனிச்சி கொரியர்களைத் தாக்குகிறார்கள். தென் கொரிய தீவிர வலதுசாரிகள், கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராணுவக் கூட்டணியின் தீவிர ஆதரவாளர்களாக, பல தசாப்தங்களாக ‘மக்கள்’ என்ற பெயரில் ஜனநாயகத்துக்காகப் போராடிய மத்திய-இடது முற்போக்காளர்களை சட்டபூர்வமற்றதாக மாற்றுவதற்கு கம்யூனிச எதிர்ப்பு கட்டமைப்பைப் பயன்படுத்துகின்றனர்.
தாய்லாந்தில், முடியாட்சி மற்றும் இராணுவத்தின் கூட்டணி மன்னராட்சிக்கு விசுவாசமற்றவர்கள் என, இராணுவ அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் அனைவரையும் தண்டிக்கிறது. இவ்வாறு ஆசியாவில் அதிவலது, ஆழமான விசாரணையை வேண்டி நிற்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago