Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Johnsan Bastiampillai / 2023 ஜனவரி 17 , பி.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
சமீபத்திய ஆண்டுகளில், பல தனிநபர் பயங்கரவாதிகள், வன்முறைக்கான அவர்களின் உந்துதலின் ஒரு பகுதியாக, சுற்றுச்சூழல் பாசிசத்தை மேற்கோள் காட்டியுள்ளனர். இத்தகைய சூழல்பாசிஸ்டுகள், இயற்கையைப் பற்றிய கற்பனையான கருத்துகளைக் கொண்டுள்ளனர். மேலும், அதனுடன் ஒரு புனிதமானதும் பிரத்தியேகமானமான பிணைப்பைக் கோருகின்றனர், அவர்கள் சக குடிமக்களுக்கு எதிரான தீங்குகளை நியாயப்படுத்த, ஒரே நேரத்தில் ஆயுதம் ஏந்துகின்றனர்.
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பெரும்பாலும் அரசியல் இடதுசாரிகளால் பிரத்தியேகமாக ஆதரிக்கப்படுகின்றன. உதாரணமாக, மார்ச் 2019இல் கிறிஸ்ட் தேவாலயத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு சுய-உறுதியான சுற்றுச்சூழல் பாசிஸ்ட், சில அரசியல் பண்டிதர்களால் ‘இடதுசாரி’ என்று முத்திரை குத்தப்பட்டார்.
சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் வலதுசாரிக் கூறுகளால் அணிதிரட்டப்படுவது, அரசியல் ரீதியாகவோ அல்லது கருத்தியல் ரீதியாகவோ முரண்பாடாக இல்லாவிட்டாலும், ஓர் ஒழுங்கின்மையாகவே பார்க்கப்படுகிறது. இது ‘வெள்ளை மேலாதிக்கத்தை பச்சையாக கழுவுதல்’ (green washing of white supremacy) என்று விவரிக்கப்படுகிறது. இருப்பினும், சுற்றுச்சூழல் பிரச்சினைகள், அரசியல் இடதுசாரிகளின் ஏகபோக உரிமை என்ற இந்தக் கருத்து, சுற்றுச்சூழல் உந்துதல்களைக் கூறி, வலதுசாரி பயங்கரவாதிகளால் சவாலுக்குட்பட்டுள்ளது.
தீவிர வன்முறைச் செயல்களுக்கு அதன் தொடர்பால், சுற்றுச்சூழலை எப்படி தீவிரவலதுசாரி சித்தாந்தங்களுக்கு காரணியாக மாற்ற முடியும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
பல போராட்டங்கள், பேரணிகள், கீழ்ப்படியாமை செயல்கள் மூலம், காலநிலை நெருக்கடியை உணர்ந்து அரசாங்கங்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரின; அதற்காக மக்களை அணிதிரட்ட முயன்றன. பேரழிவு தரும் காட்டுத்தீ, கடுமையான வறட்சி, வெள்ளம், அதிகரித்து வரும் உலக வெப்பநிலை ஆகியவற்றால் ஏற்படும் தாக்கத்தை, உலகெங்கிலும் வாழும் மக்கள் உணரத் தொடங்குவதால், காலநிலை நெருக்கடி ஒரு முக்கியமான பிரச்சினையாக மாறியுள்ளது.
காலநிலை நெருக்கடியுடன் தொடர்புடைய பல சுற்றுச்சூழல் ஆர்வலர் குழுக்கள், தங்களை அரசியல் ரீதியாக கட்சி சார்பற்றவையாக கருதுகின்றன. மேலும் அரசியல் இடதுசாரி - வலதுசாரிகளுடன் தொடர்பை நிராகரிக்கின்றன. மாறாக, அவர்கள் அரசியல் கூட்டமைப்பைப் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களுக்கும் ஓர் அடிப்படைப் பிரச்சினையாக காலநிலை நடவடிக்கையை ஆதரிக்கின்றனர்.
இத்தகைய அமைப்புகளுக்கு, சுற்றுச்சூழல் கவலைகள் மீதான ஏகபோகம் இல்லை. முக்கிய நீரோட்டத்துக்கு அப்பால், வன்முறை அமைப்புகளும், சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ள தனிநபர்களும் உள்ளனர். இவற்றில் சில தீவிர வலதுசாரிகளில் இருந்து வெளிவருகின்றன.
தீவிர வலதுசாரிகளுக்குள், சுற்றுச்சூழல் என்பது ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினை. சிலர் காலநிலை சந்தேகம் கொண்டவர்கள்; அதேசமயம் மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் சுற்றுச்சூழல் பாசிஸ்டுகளாக அடையாளம் காணப்படுகிறார்கள். இந்த அமைப்புகளும் தனிநபர்களும் சுற்றுச்சூழலின் நிலையில் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறார்கள், பாசிச உலகக் கண்ணோட்டங்களுடன் பசுமைப் பிரச்சினைகளை ஒன்றிணைக்கின்றனர். இவர்களில் ஒரு சிலர் சூழலியல் உந்துதல்களைக் கூறி, வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு மூன்று அண்மைய உதாரணங்களைக் காட்டவியலும்.
2019இல் நியூசிலாந்தின் கிறிஸ்ட் தேவாலயத்தில் படுகொலைகளை நிகழ்த்திய வலதுசாரி பயங்கரவாதி பிரெண்டன் டாரன்ட், ஒரு சுற்றுச்சூழல் பாசிஸ்ட் ஆவார். இந்நிகழ்வால் உந்தப்பட்ட வெளிப்படையான சுற்றுச்சூழல்வாதியாக அறிவித்துக் கொண்ட பேட்ரிக் குரூசியஸ், 2020இல் டெக்சாஸ் நகரில் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தினார். சமீபத்தில் நியூயோர்க்கில் ஜென்ட்ரான் பெய்டன் நடத்திய துப்பாக்கிச் சூடு, பசுமைப் பயங்கரவாத்துக்கான இன்னொரு சான்று!
பெய்டன் அவரது அறிக்கையில், சுற்றுச்சூழலானது ‘தொழில்மயமாக்கப்பட்ட, தூள்தூளாக்கப்பட்ட மற்றும் பண்டமாக்கப்பட்ட ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகிறார். இந்நிகழ்வுகள் தெளிவாக, தீவிர வலதுசாரிகளுக்குள் ஒரு பச்சை நரம்பு உள்ளது என்பதைக் கோடுகாட்டுகிறது, மேலும் அது பாசிசம் தோன்றியதிலிருந்து உள்ளது என்ற உண்மையையும் சேர்த்துச் சொல்கிறது.
தீவிர வலதுசாரி நம்பிக்கைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே ஒரு முழுமையான பிரிப்பு இருந்ததில்லை. உதாரணமாக, நாஜி ஜெர்மனி மூன்றாம் ரைச் ஆட்சியின் போது, சுற்றுச்சூழலுக்கு உகந்த கொள்கைகளை நிறுவியது, இது ‘ரீச் சூழல்பாதுகாப்புச் சட்டம்’ என அழைக்கப்பட்டது.
அதேநேரத்தில், அதே மூன்றாம் ரைச் ஐரோப்பா முழுவதும் மற்றும் அதற்கு அப்பால் பரந்த நிலப்பரப்புகளை அழித்தது முரண்நகை. ஜேர்மனியர்களுக்கும் இயற்கைக்கும் இடையே ஒரு புனிதமான பிணைப்பு இருப்பதாக முக்கிய நாஜி தலைவர்கள் வாதிட்டனர், இது அவர்களது ‘இரத்தமும் மண்ணும்’ என்ற கருத்துருவாக்கத்துக்கு வழிவகுத்தது.
இத்தாலிய பாசிஸ்டுகள் தேசிய பூங்காக்களை உருவாக்கி, பெனிட்டோ முசோலினியின் கீழ், மீண்டும் காடு வளர்ப்பு நடைமுறைகளில் ஈடுபட்டனர். பூர்வீக மக்கள் இயற்கையை மேம்படுத்தி, இயற்கையால் மேம்படுத்தப்பட்டதால், மக்களுக்கும் இடத்துக்கும் இடையே புனிதமான பிணைப்பு இருப்பதாக அவர்களும் வாதிட்டனர்.
எனவே, சுற்றுச்சூழலில் பாசிச ஆர்வம் ஒரு புதிய நிகழ்வு அல்ல. ‘சூழல்பாசிசம்’ என்ற போர்வையின் கீழ், தீவிர வலதுசாரிகளிடையே மனித நேயத்துக்கும் இயற்கைக்கும் இடையேயான உறவு உருவான விதம் குறிப்பாக கவனிக்கத்தக்கது.
பாசிஸ்டுகள் பொதுவாக இயற்கையைப் பற்றிய மனிதனை மையமாகக் கொண்ட பார்வையைக் கொண்டுள்ளனர். இதில், இயற்கையும் அதன் வளங்களும் மாயமாக கற்பனை செய்யப்பட்ட சமூகத்தைத் தக்கவைக்க அவசியமானவை. மற்றவர்களை ஒதுக்கிவைத்து, கொடுக்கப்பட்ட இடத்தின் வளங்களுக்கு இந்தச் சமூகம், இயற்கையான சலுகையும் உரிமையும் கொண்டதாக உள்ளது. பாசிஸ்டுகள் உலகை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை, இந்தச் சலுகை உணர்வு வியாபித்திருக்கிறது.
‘வலுவானதே சரியானது’ என்ற நம்பிக்கை மேலோங்கியுள்ள ஓர் அமைப்பில், உரிமை என்பது இயலுகின்றவர்களுக்கானது. அங்கு இயற்கையான போட்டி, பலவீனமானவர்களை வலிமையானவர்கள் இடமிருந்து பிரிக்கிறது. இன்று பெரும்பாலானோர் அறிந்திருக்கும் சூழல் அரசியலில் இருந்து இது வேறுபட்டது.
சூழலரசியல் பூமியை மையமாகக் கொண்ட பார்வையை ஊக்குவிக்கிறது, இதில் மனிதகுலம் ஒரு சிக்கலான உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாகும். மற்ற உயிரினங்களை விட, மனிதன் பெரியவனோ அல்லது முக்கியமானவனோ அல்ல. ஆனால், இதற்கு மாறாக இயற்கையின் மீதான பாசிச அக்கறை இரண்டாம் பட்சமானது; மக்கள் மீதான அக்கறையே முதன்மையானது. ஆனால் அடிப்படையான சூழலியல் சிந்தனைகளில், சுற்றுச்சூழலுக்கே முதலிடம்; மக்கள் இரண்டாம் பட்சமே.
‘சூழலியல் பாசிசம்’ என்பது பாசிசம் மற்றும் அரசியல் சூழலியல் ஆகியவற்றின் இணைப்பு அல்ல! மாறாக, பாசிசத்தின் துணை வகையாகும். இதன் விளைவாக, சூழல்பாசிஸ்டுகள், பொதுவாக இயற்கையின் அல்லது பூமியின் சுற்றுச்சூழல் நல்வாழ்வில் அரிதாகவே அக்கறை கொண்டுள்ளனர், மாறாக, அவர்களின் ‘இனம்’ மற்றும் குறிப்பாக அவர்களின் நிலத்தில் கவனம் செலுத்துகிறார்கள்.
சூழலியல் பாசிசம் மிகவும் பிற்போக்குத்தனமானது. அதன் பிற்போக்கான தன்மை யாதெனில், சுற்றுச்சூழல் அழிவு, தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல், பொருள்முதல்வாதம் மற்றும் அதிக மக்கள்தொகை ஆகியவற்றைக் கொண்டு வந்த நவீனத்துவத்தின் ஊழல் சக்திகளை நிராகரிக்க அது சுற்றுச்சூழல் நெருக்கடிகளைப் பயன்படுத்துகிறது.
மேலும், குடியேற்றவாசிகள் சுற்றுச்சூழலின் மீது ஆக்கிரமிப்பு நிகழ்த்துவதாகவும் தீங்கு விளைவிக்கும் தாக்கங்களை ஏற்படுத்துவதாகவும் நிராகரிக்கப்படுகிறார்கள். எனவே சுற்றுச்சூழல் அழிவுக்கு மக்கள்தொகையின் ஒரு பகுதியே காரணம் என்று சுற்றுச்சூழல் பாசிஸ்டுகள் பெரும்பாலும் வாதிடுவர்.
நவீனத்துவமானது பாஸிட்டுகள் கட்டமைக்கின்ற கற்பனையான சமூகத்துக்கும் இயற்கைக்குமான தொடர்பை சீர்குலைத்துள்ளது என்பர். இதனால் ஒரு பலவீனமான, நலிந்த சமூகம் தோற்றம்பெற்றுள்ளது. இது அதிகப்படியான நுகர்வு, அதிக மக்கள்தொகை ஆகியவற்றால் இயற்கையை சேதப்படுத்துகிறது என்று சூழலியல் பாசிசம் கருதுகிறது.
சூழலியல் பாசிசம் பல்வேறு வடிவங்களில் உள்ளது. அதன் இயற்கை மீதான அக்கறையின் அளவுகோல் ஆளாளுக்கு வேறுபடுகிறது. ஆனாலும் பொதுவானது யாதெனில், பூவுலகின் ஆரோக்கியத்தை விட அவர்களின் குறிப்பிட்ட நிலத்தைப் பற்றிய அக்கறையே முக்கியமானது.
இயற்கையைப் பாதுகாக்கவும் நிர்வகிக்கவும் பூர்வீக மக்களால் மட்டுமே முடியும் என்று சில சுற்றுச்சூழல்வாதிகள் அடிக்கடி வாதிடுகின்றனர். இது இயற்கையின் பிரத்தியேக பாதுகாவலர்களாகவும் வரையறுக்கப்பட்ட இடத்தின் சுற்றுச்சூழல் தேவைகளாகவும் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும், மற்றவர்களின் தொடர்ச்சியான இருப்பை நீக்கவும், சுற்றுச்சூழல் பாசிஸ்டுகளை அனுமதிக்கிறது என்பதை நாம் மறக்கவியலாது.
இந்தப் பாசிஸ்டுகள் இருத்தலியல் அச்சுறுத்தல் பற்றிய கதைகளைப் பயன்படுத்தி, குடியேற்றவாசிகள், இடதுசாரிகள் ஆகியோர் மீது இயற்கையின் பேரால் வன்முறையை மேற்கொள்ள வழியமைக்கிறார்கள். சூழலியல் பாசிசம் கருத்தியல் எதிரிகளுக்கு எதிரான பயங்கரவாதம் உட்பட கொடிய வன்முறையை நியாயப்படுத்துகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
24 Nov 2024
24 Nov 2024