2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

ரணிலின் வெற்றிக் கனவு

Mayu   / 2023 டிசெம்பர் 04 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஸ்மன்

இலங்கையின் பாதுகாப்புச் செலவீனம் வரவு - செலவுத் திட்டத்தில் 13 சதவீதமாகும். இது வல்லரசு நாடுகளான, அமெரிக்கா, ஐக்கிய இராட்சியம், சீனா போன்ற நாடுகளின் ஒதுக்கீடுகளுக்குச் சமமானது. பெரும் தொகையான துண்டுவிழும் தொகையுடன் இத்தனை சதவீத ஒதுக்கீடு  இலங்கைக்குத் தேவையா என்பது பலரதும் கேள்வியாகும்.

அயல்நாடு ஒன்றின் அச்சுறுத்தலில்லை. நாற்புறமும் கடல் சூழ்ந்துள்ளதான நம் நாட்டுக்கு எல்லைப்புற நாடு ஒன்றின் அச்சுறுத்தலுமில்லை. இவ்வாறிருக்க நாட்டில் யுத்தமில்லாமலிருக்கும்போது எதற்காக இவ்வளவு நிதி என்பது கடந்த பல வருடங்களாக எழுந்துவரும் கேள்வியாகும்.

2009இல் யுத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர், இக் கேள்வி எழத் தொடங்கிய வேளையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2020இல் நடத்தப்பட்டது. அது எதற்காக என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், அதன் பிறகு உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் இஸ்லாமிய இயக்கங்களின் அச்சுறுத்தல் காரணமாகச் சொல்லப்பட்டது. 
இருந்தாலும் இப்போதும் சொல்லப்படுகின்ற முக்கியமான காரணம் விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கம்.

இது உண்மையிலேயே சிங்கள மக்களிடம் கிலி கொள்ளச் செய்யும். ஆனாலும், ஒதுக்கீடு இப்போதும் அதிகமே என்பது குற்றச்சாட்டு. அதற்கு இப்போதைய நிலையில் பொருளாதார நெருக்கடியும் காரணமாகக் காட்டப்படுகிறது. இருந்தாலும் வரவு-செலவுத் திட்டம் நிறைவேறும் என்பது இரண்டாவது வாசிப்பு முடிந்த பின்னர் நடைபெற்ற வாக்களிப்பில் தெரிந்துவிட்டது. இதுவே நமது நாட்டின் மீதான மக்கள் பிரதிநிதிகளின் அக்கறையின் வெளிப்பாடு.

அரகலயவின் மூலமாக இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த இரண்டாவது வரவு- செலவுத் திட்டம் பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்கு உட்பட்டிருக்கிறது. கடந்த வருட வரவு -செலவுத் திட்டத்தின் மறுபதிப்பு, இது மக்கள் மீது சுமையையே ஏற்றும் என்றெல்லாம் அவரை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே விமர்சனம் முன்வைக்கிறது.

இருந்தாலும், ரணில் விக்ரமசிங்க தன்னுடைய பிடியிலிருந்து தளர்வைக் காண்பிக்கவேயில்லை.
உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதாக அறிவித்து பின்னர் அது கைவிடப்படாமலேயே கைவிடப்பட்டதாகிப் போன நிலையில் இருக்கிறது. இந்த நிலையில்தான், 2023ஆம் ஆண்டில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறும் என்று அறிவித்துமிருக்கிறார்.

பொருளாதார ரீதியாக ஏற்பட்ட பெரும் நெருக்கடியினால் தோற்றம் பெற்ற அரகலயவினை தன்னுடைய தந்திரமான, கொடூரமான செயற்பாடு மூலமாக அடக்கி பின்னர் அதில் சம்பந்தப்பட்ட பலரைக் கைதும் செய்து வெளிநாட்டுத் தூதுவர்களுக்குக்கூடக் காரணம் சொல்லியிருந்தார்.

1977களில் பாராளுமன்றத்துக்குள் நுழைந்த ரணில் விக்ரமசிங்க ரணில் விக்ரமசிங்க 1994ஆம் ஆண்டு காமினி திசாநாயக்கா படுகொலை செய்யப்பட்டது முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். 1993-1994, 2001-2004, 2015-2018, 2018-2019, 2022 காலப்பகுதிகளில் ஐந்து தடவைகள் பிரதமராக இருந்திருக்கிறார். 1994-2001, 2004-2015 காலப்பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

இரண்டு தடவைகள் பிரதமராக இருந்த காலங்களிலும் இடை நடுவில் இவருடைய பதவி பறிக்கப்பட்டது. ஆனால், நாட்டின் ஜனாதிபதியாக மாத்திரம் அவரால் பதவி வகிக்க முடியவில்லை. இது அவருடைய அரசியல் வரலாற்றினை பூரணப்படுத்தாது என்ற நிலையே காணப்பட்டது.

1999ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா பண்டாரநாயக்காவிடமும், 2005இல் மஹிந்த ராஜபக்‌ஷவிடமும் தோல்வியடைந்திருந்தார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் இப்போது ஜனாதிபதியாக இருந்து வருகிறார்.

எதற்கும் ஒரு தடவை தேர்தலில் வெற்றிபெற்ற ஜனாதிபதியாகப் பதவியிலிருந்தே ஆகவேண்டும் என்ற பிடிவாதத்துடன் இருக்கும் ரணில் விக்ரமசிங்க, அடுத்த வருடத்தில் ஐக்கிய தேசிய மக்கள் கூட்டணி என்ற பொதுக்கூட்டணியில் யானைச் சின்னத்தில் தேர்தலை எதிர் கொள்ளவிருப்பதாகவே அறிய முடிகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் இலங்கையின் ஜனாதிபதிகளாக 1982ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தன பதவிக்கு வந்தார்.

இதனையடுத்து, ரணசிங்க பிரேமதாச 1988ஆம் ஆண்டு ஜனாதிபதியானார். 1993இல் அவர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து  டி.பி.விஜேயதுங்க தற்காலிக ஜனாதிபதியாக இருந்தார்.

அதன் பின்னர் இதுவரையில் 1994 முதல் 11 வருடங்கள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு ஜனாதிபதியாக இருந்தார். 2005 முதல் 2015 வரையில் மஹிந்த ராஜபக்‌ஷ பதவியிலிருந்தார்.

2015 முதல் 2019 வரை மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியின் பின்புலத்துடன் வெற்றிபெற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பானவராக பதவியிலிருந்தார். பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜனாதிபதியாக கோட்டாபய ஜனாதிபதியானார்.

இந்த ஒழுங்கில் பார்த்தால் ரணசிங்க பிரேமதாசவுக்கு பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட யாரும் ஜனாதிபதியாகத் தெரிவாகவில்லை.

கடந்த சில பொதுத் தேர்தல்களைப் பார்த்தால் ஐக்கிய தேசியக் கட்சி - நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியாகப் போட்டியிட்ட 2015 பாராளுமன்றத் தேர்தலில் 106 இடங்களைக் கைப்பற்றியது. கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியைத் தழுவிக் கொண்டது.

ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைத்து நீண்ட இழுபறிக்குப் பின்னர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்கு வந்தார். அவரது அதிர்ஷ்டம் ஜனாதிபதி பரிசு கிடைத்தது. இன்னுமொருவர் அக்கட்சியிலிருந்து பாராளுமன்றத்திற்குள் வந்தார். அதாவது பாராளுமன்றத்துக்குள் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் இருவர் உள்ளனர்.

அதிர்ஷ்டம் அடித்து ஜனாதிபதியாகினால் கூட அவருடைய தந்திரம், முரட்டுத்தனம், பிடிவாதம் போன்ற குணங்களை விட்டுக் கொடுக்காது கிடுக்குப்பிடியுடனேயே ஆட்சியை நடத்திவருகிறார்.

ஆட்சியிலிருக்கும் ஒருவர் வழங்கும் வாக்குறுதியை அவருடைய காலத்தில் செய்ய முடியாது போகும் இலங்கையில் 2030, 2040 என்றெல்லாம் எதிர்வு கூறல்களை அடுக்கிக் கொண்டு போகும் ஒருவராக ரணில் விக்ரமசிங்க இருந்து வருகிறார். இதனாலேயே அவருக்கான எதிர்ப்பலைகள் வலுத்தவண்ணமேயிருக்கின்றன. அத்துடன் அவை சரிசெய்யப்படாமலேயே இருந்து வருகிறது.

அரசியலமைப்புப் பேரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பரிந்துரைகளை நிராகரிக்கிறது. அதற்கு அண்மைய உதாரணம் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கிய சேவை நீடிப்பு.  அதே நேரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திலிருந்த ஒரு பகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்தரப்பாக மாறியிருக்கின்றனர்.

அதேபோன்று அக் கட்சியின் மற்றொரு பகுதியினர் அவருடைய செயற்பாடுகளுக்கும் முயற்சிகளுக்கும், திட்டங்களுக்கும் எதிராகக் கருத்துக்களை முன்வைப்பதுடன் செயற்பட்டும் வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், எவ்வாறு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலை நம்பிக்கையுடன் ரணில் எதிர் கொள்ளவுள்ளார் என்பதுவே பலரிடமும் உள்ள சந்தேகம். ஆனாலும், பல தோல்விகளைச் சந்தித்தவர் பல வெற்றிகளைக் கண்டவர் என்ற வகையில் அவரது துணிச்சல் பாராட்டப்படுகிறது.

இந்த நிலையில்தான்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2024இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தனது வேட்பாளராகக் களமிறக்காது என்பதும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும், தேசிய மக்கள் சக்தியின் சார்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவும் களமிறங்குவார்கள் என்று தெரிகிறது. அவ்வாறானால் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் மும்முனைப் போட்டியாக அமையும்.

ஒரு தேசியக் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் அக்கட்சியைக் கட்டிக் காத்து வளர்ச்சியடைந்த கட்சியாக நிலை நிறுத்தியிருந்தாலும், கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சஜித் பிரேமதாச அணி பிரிந்து செல்வதற்குரிய சூழல் உருவானது.

இச் சூழல் ரணில் விக்ரமசிங்கவே காரணம் என்று பேசப்பட்டது. ஆனாலும், அது மறுதலிக்கப்படுகிறது.

விமர்சனக் கருத்துக்கள் பல இருந்தாலும் பெரும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்ற இலங்கை நாடானது பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்து வருவதற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கமே காரணம் என்ற ஒரே காரணம் அவரை மீண்டும் ஜனாதிபதியாக்கும் என்றே நம்பப்படுகிறது. இது நம்பிக்கையாக மாத்திரமில்லாமல் போகட்டும்.

எது எப்படியிருந்தாலும், நிதிநெருக்கடியே வாழ்க்கையாகிப் போன இலங்கை மக்களுக்கு நிம்மதி கிடைப்பது மாத்திரமே எதிர்பார்ப்பு.

2023.11.27


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X