Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Johnsan Bastiampillai / 2022 மார்ச் 20 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை - 11
ஈழத்தமிழரின் அறிவுக் களஞ்சியமாகப் போற்றப்படுவது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் குறித்த விமர்சனங்களுக்கு அப்பால், அந்தப் பல்கலைக்கழகத்தின் தேவையும் அது கடந்த நான்கு தசாப்தகால ஈழத்தமிழர் வாழ்வியலில் ஆற்றிய பங்கும், மறுக்கப்பட முடியாதன.
இன்றும் பெருமையோடு பலர், “எங்கள் பல்கலைக்கழகம்” என வாஞ்சையோடு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை அழைப்பதைக் கேட்கலாம். இந்தப் பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்தின் கதை முக்கியமானது.
ஈழத்தமிழர் வரலாற்றையும் வாழ்வியலையும் அதனிலும் முக்கியமாக, எமது அரசியலையும் அதன் செல்லரித்த சீழ்பிடித்த பக்கங்களையும் அலசுவதற்கு, நல்லதொரு நேர் ஆய்வாக யாழ். பல்கலைக்கழகம் உருவான கதையைப் பயன்படுத்தவியலும். இந்தப் பல்கலைக்கழகம் உருவாகக் கூடாது என்று கங்கணம் கட்டியவர்கள், குண்டெறிந்தவர்கள் அன்றைய தமிழ்த் தேசியவாதிகளே என்பதைக் கோடிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது.
இலங்கையின் முதலாவது பல்கலைக்கழகம், 1942ஆம் ஆண்டு இலங்கை பல்கலைக் கழகமாகத் தோற்றுவிக்கப்பட்டு, முதலாவதாக கொழும்பு வளாகமும் அதைத் தொடர்ந்து 1949இல் பேராதனை வளாகமும் உருவாகின. பிரித்தானியாவின் ஓக்ஸ்பிரிஜ் முறையிலேயே, ‘ஒரு பல்கலைக்கழகம்; பல வளாகங்கள்’ என்ற வரையறையின் கீழ், இவற்றின் தோற்றம் அமைந்தன. வித்தியாலங்கார, வித்தியோதய, கட்டுபத்த வளாகங்கள் பின்னர் சேர்க்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, 1974இல் யாழ்ப்பாண வளாகம் உருவானது.
1950களிலேயே தமிழருக்கான பல்கலைக்கழகம் என்று தமிழ்த் தேசியவாதிகள் பேசத் தொடங்கினார்கள். இதன் தோற்றத்தின் வேர்களைத் தேடினால், தமிழ் மக்களை பொதுத்தளத்தில் இனரீதியாகப் ஒன்றுதிரட்டக்கூடிய ஒன்றாக, ‘தமிழருக்கான பல்கலைக்கழகம்’ இருந்தது.
1948இல் நிறைவேறிய பிரஜாவுரிமைச் சட்டத்தைக் காரணங்காட்டி, இலங்கை தமிழ்க் காங்கிரஸில் இருந்து பிரிந்தவர்களால், 1949இல் தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்றபோது, காங்கிரஸில் இருந்து வேறுபட்ட அடையாளமொன்று தேவைப்பட்டது. அந்த அடையாளமாகத் தமிழ் இனவாதம் முன்னிறுத்தப்பட்டது. அதன் ஒரு கோரிக்கையே, தமிழ்ப் பல்கலைக்கழகம். தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த எஸ்.ஜே.வி செல்வநாயகத்தால் நடத்தப்பட்ட ‘சுதந்திரன்’ பத்திரிகையே இந்தத் திட்டத்தின் பிரதான பிரசாரக் கருவியானது.
1950களில் இருந்து 1970 வரையான ‘சுதந்திரன்’ பத்திரிகைகளைப் படித்தால், இந்தக் கோரிக்கையின் வரலாற்று வளர்ச்சியையும் அரசியல் பார்வையையும் தரிசிக்கலாம். குறிப்பாக, 1960ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஒன்பதாம் திகதி ‘சுதந்திரன்’ பத்திரிகையில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தை முன்னெடுக்கத் தெரியப்பட்ட பேராசிரியர் அ. சின்னத்தம்பி, நீண்ட கட்டுரையொன்றை எழுதியிருந்தார்.
அதன்படி, 1950ஆம் முதல் பேசப்பட்டு வந்த தமிழ்ப் பல்கலைக்கழகம் என்ற சிந்தனைக்கு வடிவம் கொடுக்கும் வண்ணம், 1956ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆறாம் திகதி, தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கம் தோற்றம் பெற்றது. இதே தினத்தில் தான், தனிச் சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
உருவாக்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கம், அரசாங்கத்தின் ஆதரவுடன் இப்பல்கலைக்கழகத்தை உருவாக்க முடிவு செய்து, அப்போது பிரதமராக இருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவை, 1957 ஜனவரியில் சந்திக்கிறார்கள்.
பிரதமர், இனஅடிப்படையிலான பல்கலைக்கழகத்துக்கு அனுமதியளிக்க முடியாதெனவும் பண்பாடு, மொழி அடிப்படையிலான கற்கைகளை அனுமதிக்கவியலும் என்றும் அதற்காகக் தனியான கல்லூரிகளை அமைப்பதற்கு உடன்படுவதாகவும் தெரிவிக்கின்றார்.
பிரதமரின் ஆலோசனைகள், இந்தக் குழுவுக்கு நெருக்கடியை உருவாக்குகின்றன. ஏனெனில், அவ்வாலோசனைகள் இன அடிப்படையில் ஒரு பல்கலைக்கழகத்தை முன்மொழிந்து, அரசியல் நடத்தும் தலைமைகளுக்கு சிக்கலானவை. “பிரதமர் மறுத்துவிட்டார்” என்று இனவாதப் பிரசாரத்தை அவர்களால் மேற்கொள்ள இயலவில்லை. இதனால், உருவாக்கிய தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கத்தை விட்டுவிட்டு, 1957 ஜூலையில் ‘நாவலர் சபை’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அது, தமிழருக்கான பல்கலைக்கழகம் என்றவொன்றை, தமிழ் மக்களிடம் பிரசாரம் செய்தது.
மறுமுனையில், பிரதமருடனான இன்னொரு சந்திப்பு 1957 செப்டெம்பரில் நடைபெறுகிறது. பிரதமர், குறித்த விடயங்களை ஆராய்வதற்கு தனியான ஆணைக்குழுவை அமைக்க உறுதியளிக்கிறார். அதன்படி, 1958 மார்ச் மாதம் ‘நீத்ஹாம் ஆணைக்குழு’ என அறியப்பட்ட இலங்கை பல்கலைக்கழக ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவும் இனரீதியான பல்கலைக்கழக உருவாக்கத்தை மறுத்தது.
1959 பெப்ரவரியில், சிங்கள பௌத்த கற்கைநெறிகளுக்காக உருவாக்கப்பட்ட இலங்கை பல்கலைக்கழகத்தின் வித்தியோதய, வித்தியாலங்கர வளாகங்களைத் திறந்துவைத்து உரையாற்றிய பண்டாரநாயக்க, “இதேபோல தமிழ், இந்து, முஸ்லிம் கற்கைநெறிகளையும் அதுசார் வளாகங்களையும் உருவாக்கலாம்” என்றார்.
1959 ஏப்ரலில் திருகோணமலையில் உள்ள துறைமுக உள்வீதியில், தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்குக் காணி வாங்கப்பட்டு, மே மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு, நிதி திரட்டல் தொடங்கியது. இவ்வாறு தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டி, நிதி சேகரிக்கத் தொடங்கிய நிலையில், பிரதமரைச் சந்தித்த அதேகுழு, யாழ்ப்பாணத்தில் மருத்துவக் கல்லூரி ஒன்றை நிறுவும்படி கேட்டுக்கொண்டது.
இக்காலப் பகுதியில், யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்விகற்ற இயலவில்லை. சாதிய அடையாளம் காட்டப்பட்டு, அவர்கள் பெரிய பாடசாலைகளில் அனுமதிக்கப்படவில்லை. இந்தச் சாதிய வேறுபாடுகளைத் தூக்கி நிறுத்திய ஒருவராக நாவலர் இருந்தார் என்பதும், அவரது பெயரால் அமைக்கப்பட்ட குழுவே, தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு நிதி திரட்டியது என்பதும் கவனிப்புக்குரியன.
1959இல் தமிழரசுக் கட்சிக்குப் போட்டியாக, இந்துப் பல்கலைக்கழகம் என்ற கோரிக்கையை இலங்கை தமிழ்க் காங்கிரஸ் முன்வைத்தது. இதையடுத்து தமிழரசுக் கட்சியினர், “திருகோணமலையில் 40 ஏக்கர் காணி வாங்கப்பட்டு விட்டது. இன்னும் 40 ஏக்கர் வாங்கப்பட உள்ளது” என்று தெரிவித்தனர்.
திருகோணமலையில் உள்ள பல்கலைக்கழகம் பற்றிய செய்திகள் தவறாமல் வந்த வண்ணமிருந்தன. 1962ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் திகதி வெளியான ‘சுதந்திரன்’ பத்திரிகையில், திருமலைப் பட்டின எல்லைக்குள் 5.5 ஏக்கர் நிலமும் உப்புவெளியில் 70 ஏக்கர் நிலமும் வாங்கப்பட்டு, கட்டட அலுவல்கள் தொடக்க ஆயத்தங்கள் நடைபெறுவதாகவும் விவசாய கல்லூரியின் ஒரு பகுதிக்கான கட்டடம் முடிவடைந்த நிலையில் உள்ளது என்றும் செய்தி வெளியாகியிருந்தது.
அதேயாண்டு ஓகஸ்ட் ஐந்தாம் திகதி சுதந்திரனில், திருமலையில் தோற்றம்பெறும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இளைப்பாறும் விடுதி வேலைகள், தண்ணீர் வசதி உட்பட சகல வேலைகளும் முடிவடைந்துவிட்டன. விவசாயப் பாடசாலை வேலைத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது; 1963 சித்திரையில் அதன் எல்லாக் கட்டடப் பணிகளும் முடிவடையும் என்று செய்தி வெளியானது. இவ்வாறு தொடர்ந்து செய்திகள் வெளியாகிய வண்ணமிருந்தன.
1965இல் தமிழரசுக்கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவளித்து, அமைச்சுப் பதவியைப் பெற்றதோடு, பல்கலைக்கழகம் பற்றிய பேச்செதுவும் இல்லை. 1968இல் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய பின்னர், மீண்டும் தமிழ்ப் பல்கலைக்கழகம் என்ற கோரிக்கையை தமிழரசுக்கட்சி கையில் எடுத்தது.
அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியுடன் இருந்த காலத்தில், இந்தப் பல்கலைக்கழகம் குறித்த எந்தவொரு நடவடிக்கையையும் தமிழரசுக்கட்சி மேற்கொள்ளவில்லை. இன்றுவரை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பெயரால் சேகரிக்கப்பட்ட நிதிக்கோ, வாங்கப்பட்ட நிலங்களுக்கோ என்ன நடந்தது என்பது தெரியாது. அங்கு கட்டடங்கள் கட்டப்பட்டதா என்பது ஐயத்துக்குரியது. இதுகுறித்து, இன்றுவரை தமிழ்த் தேசியவாதிகள் யாரும் வாய் திறப்பதில்லை.
இந்தப் பின்புலத்திலேயே 1974இல் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது வளாகமாக, யாழ்ப்பாண வளாகத்தை உருவாக்குவது என்று ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க முடிவெடுத்தார். இதைத் தமிழரசுக்கட்சி எதிர்த்தது. பல்கலைக்கழகத்துக்காக பரமேஸ்வரா கல்லூரியினதும், இராமநாதன் மகளிர் கல்லூரியினதும் கட்டடங்கள் பெறப்பட்டபோது, அரசாங்கம் சொத்துகளைப் பறிப்பதாகத் தமிழரசுக்கட்சி ஓலமிட்டது.
இராமநாதனின் அன்றைய வாரிசாகக் கருதப்பட்ட முன்னாள் செனட்டர் எஸ்.ஆர். கனகநாயகம், இந்தக் கட்டடங்களில் பல்கலைக்கழகம் அமைவதை முழுமனதுடன் ஆதரித்ததுடன், பின்னர் முற்போக்கு சக்திகளால் உருவான யாழ். பல்கலைக்கழக வளாக விஸ்தரிப்பு இயக்கத்துக்குத் தலைமையேற்றார்.
தமிழரசுக் கட்சியினர் இப்பல்கலைக்கழகத்தால் தமிழர்களின் கலாசாரம் சீரழிந்துவிடும் என்றும் சிங்களவர்கள் எங்கள் இடங்களை பறிக்கப்போகிறார்கள் என்றும் பிரசாரம் செய்தனர். ஆனால், யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைவதற்கு, மக்களின் முழுமையான ஆதரவு இருந்தது. இதைத் திறப்பு விழாவிலும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளிலும் திரண்ட மக்கள் வெள்ளம் காட்டிநின்றது.
யாழ்ப்பாண வளாகத்துக்கு தலைவராகப் பேராசிரியர் க. கைலாசபதி நியமிக்கப்பட்டார். பல்கலைக்கழகத் திறப்புக்கு முதல்நாள் இரவு, கைலாசபதி தங்கியிருந்த வீட்டின்மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. பிரதமர் ஸ்ரீமாவோவைப் புறக்கணிக்குமாறு பூரண ஹர்த்தாலுக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. எதனாலும் பல்கலைக்கழகம் திறக்கப்படுவதைத் தடுக்கமுடியவில்லை.
உருவான பல்கலைக்கழகத்தை முடக்க, பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், பேராசிரியர் கைலாசபதியின் அயராத உழைப்பும் மக்களின் ஆதரவும் அனைத்தையும் தவிடுபொடியாக்கின.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
24 Nov 2024
24 Nov 2024