Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Janu / 2024 செப்டெம்பர் 17 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்ஸ்மன்
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதுதான் இப்போது அனைவருடைய சிந்தனையும் பேச்சுமாக இருக்கிறது. அத்துடன் ஒவ்வொருவருடைய சிந்தனையிலும் உள்ள கொள்கைகளுக்கும், ஏற்றுக்கொள்ளல்களுக்குமேற்ப வரவுள்ள ஜனாதிபதி தொடர்பில் கவலைகளும் இருக்கின்றன. அது தம்முடைய தீர்மானம் தோற்றுப்போனால் எப்படி இருக்கும் என்பதற்குள் அடக்கம். நடைபெற்று வருகின்ற தேர்தல் பிரச்சாரங்கள் ஆதரவுக் கூட்டங்களும், அறிவிப்புகளும் பல்வேறு வகைகளிலும் நாடு பூராகவும் தாக்கங்களைச் செலுத்தி வருகின்றன. தென்பகுதியில் உள்ள கட்சிகளின் அறிவிப்பு, தனிப்பட்ட அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை ஆளுநர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் என வெளியிடப்படும் ஆதரவுகளுக்கு இருக்கின்ற பிரதிபலிப்புகள், தென்பகுதியில் ஏற்படுத்தும் தாக்கத்தினை விடவும் சிறுபான்மைக் கட்சிகள், தமிழ்க் கட்சிகளின் ஆதரவுகள் சற்று வித்தியாசமாகவே தாக்கம் செலுத்தும். அந்த வகையில்தான் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு இலங்கை தமிழரசு கட்சி ஆதரவினை அறிவித்தமையும் பார்க்கப்பட வேண்டும். அது வடக்கு கிழக்கில் பெரும் அலையொன்றைக் கிளப்பி விட்டது என்று சொல்வதற்கில்லை. ஏனென்றால் உள்ளுராட்சித் தேர்தல் அறிவிப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்து. அக் கூட்டிலிருந்து தானாகவே வெளியேறிக் கொண்டதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போதில்லை என்பதும் தமிழ் மக்களுக்குத் தெரிந்ததே. அதனால் ஒட்டு மொத்த தமிழர்களும் அக்கட்சியின் அறிவிப்பினை கடைப்பிடிப்பார்கள் என்றில்லை. ஆனால் தென் பகுதி, சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி என்பது தெமள சந்தான - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. அந்த வகையில் தமிழர்களுக்கான உரிமைசார் விடயங்களில் இனவாதம் தலைதூக்கும். அத்துடன் சஜித்துக்கு எதிரான ஏனைய வேட்பாளர்களின் இனவாதப் பிரச்சாரங்களுக்கு வழிவகுக்கும். அந்த வகையில் அவரது வெற்றிக்கான பிரச்சாரத்திற்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை வழங்கும் என்று சொல்ல முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய அங்கத்துவக் கட்சி என்ற வகையில், தமிழர்களின் வாக்குகளை திரட்டும் திறனின் அடிப்படையில் தமிழரசுக்கட்சி கணிசமான அரசியல் பலத்தை கொண்டுள்ளது என்றே அக்கட்சியும் நம்பிக்கை கொண்டுள்ளது. அந்த நம்பிக்கை இத் தேர்தலில் சந்தேகமானதே. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு எவ்வாறிருக்கிறதோ அதுபோன்று ஏனைய தமிழ்த் தரப்புகளின் சஜித்துக்கான ஆதரவளிப்புகளும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்புகளுமாகும். குறிப்பாக, இலங்கை தமிழரசு கட்சி இல்லாத ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, மலையகத்தின் அரசியல் தரப்புகள், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி – பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன், கடந்த முறை சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் போட்டியிட்ட, தற்போது தன்னை முற்போக்கு தமிழர் அமைப்பாக காட்டிக் கொள்ளும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஏனைய முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதிநிதிகளது ஆதரவுகளை குறிப்பிட முடியும். இதற்கிடையில், மலையகப் பிரதேசங்களினைப் பொறுத்தவரையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட பிரதானமான கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவினை அறிவித்திருக்க மனோ கணேசன் தலைமையிலான அணி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குகிறது. இதுவும் முழுமையான மலையக மக்களின் வாக்குகள் எப்பக்கம் செல்லும் என்பதை சந்தேகத்துக்கு உள்ளேயே வைத்திருக்கிறது. பிள்ளையானைப் பொறுத்தவரையில் கடந்த தேர்தல் வெற்றியானது அவருடைய தனிப்பட்ட ஆதரவுகளுக்கான வாக்குகளால் மாத்திரம் கிடைக்க பெற்றதல்ல என்பதை மறந்து விடுகிறார்கள். அதே போன்று வியாழேந்திரனைப் பொறுத்தவரையில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் குறிப்பிட்டளவான ஒரு பட்டாளம் இணைந்து பெற்றுக் கொண்ட வாக்கில் ஒரு உறுப்பினர் பதவி கிடையாது என்பதே உண்மை. அதே நேரத்தில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியைப் பொறுத்தவரையில் தமிழரசு கட்சி இல்லாத கூட்டணி அவர்களுக்கு பெருமளவுக்கு ஆதரவிருக்கிறதா என்று சந்தேகிக்க வேண்டியே இருக்கிறது. முஸ்லிம் கட்சிகள் யார் வெற்றிபெறலாம் என்ற சந்தேகம் காரணமாக எல்லோர் பக்கத்திற்கும் தூண்டில் போடும் செயற்பாட்டினை செய்துகொண்டிருக்கிறார்கள். இவ்வாறான செயற்பாடு யார் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் தங்களது தரப்பினை இணைத்துக்கொள்ளும் தந்திரமாகும். அது எவ்வாறு வெற்றி பெறும் என்பது தெரியாத ஒன்று. கட்சிப் படிநிலைகளின் அங்கீகாரம் மக்களின் வாக்குகளுக்கு உத்தரவாதமாக அமைவதே வழக்கமாக இருந்தாலும் இம்முறை நடைபெறுகின்ற தேர்தலில் இது சிக்கலில் மாட்டி நிற்கிறது என்றே கூறவேண்டும். கட்சிகள் ஒரு தீர்மானத்தை எடுத்திருக்க அதன் உறுப்பினர்கள் பலர் வேறு தீர்மானத்துடன் செயற்படுகின்றமையானது துரதிர்ஷ்டவசமான நிலையையே தோற்றுவிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்த இடத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கு இன மற்றும் மத சிறுபான்மை கட்சிகளிடமிருந்து கிடைத்துள்ள அங்கீகாரம் தேர்தல் வெற்றிக்கு உத்தரவாதமாக இருக்குமா என்பது 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை அடிப்படையாக வைத்தே பார்க்கப்படுகிறது. அன்றைய தேர்தலில் பிரயோகிக்கப்பட்ட இனவாதம் இம்முறை சிங்கள மக்களிடம் செல்வாக்கு செலுத்தினால் நிலைப்பாடு வேறு விதமாக இருக்கலாம். ஒரு தேசியவாத தளத்தில் பிரச்சாரம் செய்த கோத்தபாய ராஜபக்ச, பெரும்பான்மையின சிங்கள வாக்காளர்களிடம் இருந்து வலுவான ஆதரவைப் பெற்றார். எவ்வாறாயினும், இம்முறை மூன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் தமது தேர்தல் பிரச்சாரங்களில் இன தேசியவாதத்தை நாடவில்லை. இது கடந்த காலங்களினைவிடவும் வரவேற்கத்தக்க இடைவெளியாகும், தேர்தல்கள் இனவாத தேசியவாத உணர்வை உருவாக்குவதாக இருந்தமையானது கடந்த தேர்தல்களில் இனவாதத்தைத் தூண்டுவதாக இருந்து வந்திருக்கிறது. இது களையப்படும் தேர்தலாக இது இருப்பது சிறப்பானதே. ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறுகிய இன தேசியவாத பிரச்சினைகளுக்குள் திசைதிருப்பப்படாமல் நாட்டுக்கு ஆக்கபூர்வமான நிலைப்பாடுகளை எடுத்துரைத்துள்ளமை நல்லதே. எதிர்க்கட்சித் தலைவரின் விஞ்ஞாபனத்தில், “புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் வரை அரசியலமைப்பின் 13வது திருத்தம் உட்பட தற்போதைய அரசியலமைப்பை முழுமையாக அமல்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருக்கும். மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் திரும்ப பெறாமல், அதற்கு பதிலாக மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளை வலுப்படுத்துவதன் மூலம் மாகாண சபைகளுக்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தவும். பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிப்பதாக முன்னர் கூறிய வாக்குறுதியை எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச மீள பெறவில்லை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. தனது அரசியல் போட்டியாளர்களை போலல்லாமல், அவர் அதைச் செயல்படுத்தப் போகிறார் என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார். 13வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாகாணங்களில் இருந்து மத்திய அரசு திரும்பப் பெற்ற அதிகாரங்கள் மீண்டும் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரங்களை தீர்மானிக்கும் பொறுப்பை புதிய பாராளுமன்றத்திடம் ஒப்படைப்பதில் அவர் எச்சரிக்கையுடன் செயற்பட்டு வருகின்றார். 2015 மற்றும் 2019 க்கு இடையில் யஹ பாலன எனும் நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவுக் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்படும், அனைத்து மக்களும் ஆட்சியில் பங்கு கொள்ளும் வகையில் ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனம், மாவட்டம் மற்றும் மாகாணத்துடன் அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரங்கள் பகிரப்படும் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் பிரச்சாரங்கள் சற்று இனவாதத்தினை மேம்படுத்துவதாக அமைந்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. இது தற்போதைய தேர்தலின் துரதிர்ஷ்டவசமான அம்சமாகக் கொள்ளப்பட வேண்டும். பொருளாதார நெருக்கடி மற்றும் "ஆட்சி மாற்றம்" கோரிய அரகலய எதிர்ப்பு இயக்கத்தின் போது அவரது கட்சியின் ஆதரவு சற்று அதிகரித்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக மாற்றத்தை விரும்புபவர்கள் அவருக்கு வாக்களிக்க விரும்புகிறார்கள், ஏனெனில் அவர் நாட்டை நடத்தும் வணிக மற்றும் அரசியல் உயரடுக்கினருடன் குறைந்த தொடர்புகளைக் கொண்டுள்ளார். ஆனால் இது அவரது வெற்றியின் போது என்ன நடக்கும் என்ற அச்சத்தை உருவாக்குகிறது. ஜே.வி.பி.யில் தலைமைப் பதவிகளில் இருந்த பலரின் மார்க்சிய-லெனினிச முன்னோடிகளும், கடந்த கால வன்முறைகளின் நினைவுகளும் இந்தக் கவலைகளுக்குத் தீனி போடுவதாக காணப்படுகின்றன. பொருளாதார முன்னேற்றம், நாட்டின் நிலைபேறான தன்மை, கல்வி, தொழில் வாய்ப்புகள், வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் நீண்ட கால சுய நிர்ணயத்துக்கான கோரிக்கைகள், ஊழலற்ற நாடு, வளங்களை தவறாக பகிர்ந்தளிப்பது தூய அரசியல் கலாசாரம் என பலவேறு விடயங்களுக்குள் சிக்குண்டிருக்கும் புதிய ஜனாதிபதிக்கான தெரிவு சற்று ஊகிக்க முடியாத ஒன்றே. இவ்வாறான நிலையில் புதிய ஜனாதிபதியின் வரவுடன் எவ்வாறு புத்துயிர் பெறும் என்பதனையும் சிந்தித்துக் கொள்வோம்.
2024.09.09
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago
4 hours ago
5 hours ago