2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

’மைத்திரியாலேயே தேசிய பாதுகாப்பு தளர்வடைந்தது’

Editorial   / 2020 ஜூலை 28 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில், தேசிய பாதுகாப்புத் தளர்வடைந்தமைக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்புக் கூற வேண்டும். அரசமைப்புச் சூழ்ச்சியைத் தோற்றுவித்து, 52 நாள்கள் அரசாங்கத்தை உருவாக்கிய காரணத்தாலேயே, நாட்டின் தேசிய பாதுகாப்புத் தளர்வடைந்தது. அதனால், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்பே அறிந்திருக்கவில்லை என்பதை நான் நம்பப்போவதில்லை” என முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான ருவன் விஜேவர்தன தெரிவித்தார். தமிழ் மிரருக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியின் முழு விவரம் வருமாறு.

கே: நாட்டின் தற்போதைய ஆட்சி, ஆளும் தரப்புப் பற்றிய உங்களுடைய நிலைப்பாடு என்ன? 

தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தலால் நாட்டு மக்கள் உயிர் அச்சத்தில் இருக்கும் போதும் அரசாங்கத்தின் தேவை தேர்தலை நடத்துவதாக மாத்திரமே அமைந்துள்ளது. அதனால் துரதிர்ஷ்டவசமாக நாமும் இந்தத் தேர்தலில் பங்குகொள்ள வேண்டிய அவசியம் வந்துள்ளது. இருப்பினும் நாட்டு மக்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி மீது நம்பிக்கை இருப்பதால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை ஐக்கிய தேசிய கட்சியால் வெற்றிகொள்ள முடியும். நாட்டு மக்கள் தற்போது எதிர்பார்க்கும் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டமும் ஐக்கிய தேசிய கட்சியிடம் உள்ளதால் தேர்தலை வெற்றிகொள்ள முடியுமென உறுதியான நம்பிக்கை உள்ளது.   

கே: இந்த நிலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் பயணம் எவ்வாறாக உள்ளது? 

ஐக்கிய தேசிய கட்சியின் பிளவு காரணமாக வாக்குகளும் பிளவடையும் என்ற நிலைமை காணப்படுகிறது. இருப்பினும் ஐக்கிய தேசிய கட்சியின் மீது நம்பிக்கை கொண்டுள்ள மக்களின் ஆதரவு நிச்சயமாகவே கிடைக்கும்.  

கே: ஐக்கிய தேசிய கட்சியால் இம்முறை எத்தனை ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்?

இம்முறை நாடாளுமன்றத் தேர்தல் அசாதாரணமான சூழலுக்கு மத்தியிலேயே இடம்பெறப் போகிறது, அதனால் மக்கள் தேர்தலில் வாக்களிக்கச் செல்வதற்கு அச்சப்படும் நிலைமையும் காணப்படுகிறது. அந்த நிலைமையை அண்மையில் நடைபெற்ற தபால் மூல வாக்குப் பதிவுகளின் போதும் கண்டுகொள்ள முடிந்துள்ளது. அதன்படி ​பார்க்கின்றபோது எந்தவொரு கட்சியும் தாம் பெற்றுக்கொள்ளப் போகும் ஆசனங்கள் தொடர்பான மதிப்பீடொன்றைச் செய்ய முடியாத நிலையிலேயே இருக்கின்றன.  
 
கே: ஐக்கிய தேசிய கட்சி முகம்கொடுத்துள்ள நெருக்கடியிலிருந்து எவ்வாறு மீளப் போகிறது? 

ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிளவுகள் ஏற்படுவது இது முதல் தடவை அல்ல. அவ்வாறு பிளவுகள் ஏற்பட்ட எந்தவொரு சந்தர்ப்பத்திலும், ஐக்கிய தேசிய கட்சி அழிந்துவிடவில்லை. குறிப்பாக டீ.எஸ்.சேனநாயக்க, ஜே.ஆர்.ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாஸவின் காலங்களிலும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் இவ்வாறான பிளவுகள் வந்துள்ளன. ஆனால், எந்த ஒரு சந்தர்ப்பதிலும் ஐக்கிய தேசிய கட்சி அழிந்துவிடவில்லை. காமினி திசாநாயக்க போன்றவர்கள் புதிய கட்சி ​அமைத்த போதும் ஐக்கிய தேசிய கட்சி சரிவைச் சந்திக்காமல் மீண்டு வந்ததைப் போலதே, பண்டாரநாயக்க சுதந்திரக் கட்சியைத் தோற்றுவித்த காலத்திலும் கூட ஐக்கிய தேசிய கட்சியை முடக்கிவிட முடியாமல் போனது என்பதைக் கருத்தில் கொள்ளும் போது ஐக்கிய தேசிய கட்சி என்பது மிகப்பெரிய சக்தி என்பதை உணர வேண்டும்.   

கே: ஐ.தே.கவின் தலைமைத்துவத்தை ஏற்கும் எண்ணம் உங்களுக்கும் உள்ளதா?

ஐக்கிய தேசிய கட்சிக்குள் தலைவர்களுக்குப் பஞ்சமில்லை. அதனால் சரியானதொரு தலைவரைக் கட்சிக்குத் தெரிவு செய்வோம். ஐக்கிய தேசிய கட்சி இறுதியாக நடத்திய மாநாட்டில் கட்சியின் தலைவராக அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க சஜித் பிரேமதாஸவும் இணக்கம் தெரிவித்தார். அதன்படி அடுத்த ஆறு வருடங்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவே கட்சியின் தலைமைத்துவத்தை வகிப்பார். அவருக்குப் பின்னர் புதிய தலைவர்கள் உருவாகும் போதும் உரிய சந்தர்ப்பத்தில் அந்தத் தலைமைத்துவத்திடம் கட்சியைக் கையளித்துவிடுவார்.   

கே: ஐக்கிய மக்கள் சக்தியின் தோற்றம் அரசாங்கத்துக்கு வாய்ப்பாகும் அல்லவா?

ஐக்கிய மக்கள் சக்தியின் தோற்றம் என்பதை விடவும், ஐக்கிய தேசிய கட்சியின் பிளவு தற்போதைய அரசாங்கத்துக்குப் பெரும் பலமாக அமைந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் இப்போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிஷாட் போன்றவர்களின் கட்சிகள் ஆளும் தரப்புக்குப் பெரும்பான்மை அமைப்பதற்கு அவசியப்படும் போதும் அதனுடன் சார்ந்துகொள்வர். அதனால் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து சென்றவர்கள் மீண்டும் கட்சிக்கே திரும்ப நேரிடும்.   

கே: திரும்பி வருவோரை ஐக்கிய தேசிய கட்சி ஏற்றுக்கொள்ளுமா?

திரும்பி வருவோர் ஏற்றுக்கொள்ளப்படுவர். ஆனால், ஐக்கிய தேசிய கட்சிக்கு அவசியமான​வர்களே ஏற்றுக்கொள்ளப்படுவர்.   
கே: சஜித் தொடர்பான பிரதமர் மஹிந்தவின் சர்ச்சைக்குரிய உரை தொடர்பாக ஐ.தே.க வாய்திறக்கவில்லையே?
அரசியல் களத்தில் இவ்வாறான உரைகளை நிகழ்த்துவதை அடிமட்ட அரசியல் செயற்பாடுகள் என்றுதான் கூறுவேன். ஒரு நபருடைய தனிப்பட்ட விடயங்களை அரசியலுக்குள் புகுத்திக்கொண்டு அதனை விமர்சிப்பது சரியான அரசியல் கலாசாரம் அல்ல. அதனால், மஹிந்தவின் உரையைக் கண்டிப்பதோடு, அவ்வாறான உரைகளை அரசியல் களத்தில் நிகழ்த்துகிறார்கள் என்பது கவலைக்கிடமாகவே உள்ளது. 
  
கே: அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தைத் திருத்தியமைப்​போம் என மஹிந்த அணி கூறுகிறதே?

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தில் அநாவசியமான திருத்தங்களை மேற்கொள்ளவும், அதனை நீக்கிவிடவும் ஆளும் தரப்பினரால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அதேபோல் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் நாடாளுமன்றத் தேர்தலை வெற்றிகொண்ட பின்னர் 19ஆவது திருத்தம் தொடர்பாக பேசப்போவதில்லை. அதனால் அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்கிவிடுவோம் என்பது வெறுமனே தேர்தல் குண்டாக மாத்திரமே இருக்கும் என்பதே உண்மையாகும். நாட்டின் ஜனநாயக அம்சங்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ​ஐக்கிய தேசிய கட்சியால் சமர்ப்பிக்கப்பட்டு மஹிந்த அணி உட்பட சகல அரசியல் கட்சிகளினதும் ஆதரவுடன் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட 19ஆவது திருத்தத்தை ஒழிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டால் அதற்கு ஐக்கிய தேசிய கட்சி கடுமையான எதிர்ப்பை வெளியிடும்.   

கே: 19ஐ காப்பாற்றிக்கொள்ள ஐ.தே.க முன்னெடுக்கும் முயற்சிகள் வலுவானதாக இல்லையே? 

எம்மால் கொண்டு வரப்பட்ட அரசமைப்புத் திருத்தத்தைப் பாதுகாக்கும் கடமையை நாங்கள் செய்வோம். அநாவசியமாக அந்தத் திருத்தத்தை நீக்கிவிட முடியாது. எமது வலுவான எதிர்ப்பை அவசியமான சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்துவோம்.

கே: முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் 19ஐ நீக்க வேண்டும் என்கிறாரே? 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்பவர் அவரின் நலன் பற்றி மட்டுமே சிந்திக்கின்ற ஒரு நபர். அதனால் அவருக்கு நாட்டின் நலன் பற்றிச் சிறிதும் அக்கறையில்லை. அதனால் அவர் எந்த நேரத்திலும் மாறக்கூடியவர். எந்தவோர் அணியிலும் உடனடியாகச் சார்ந்துகொள்வார். அதனால் அவரை நாட்டு மக்களும் நிராகரித்துள்ளனர்.   

கே: நல்லாட்சி அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்புச் சிதைந்து போனதெனக் கூறப்படுகிறது. அந்த அரசாங்கத்தின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நீங்கள்? 

அந்த நேரத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் என்ற பதவி எனக்கு வழங்கப்பட்டிருந்தாலும், பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகள் 4 மாத்திரமே எனக்கு வழங்கப்பட்டிருந்தன. அதனைத் தவிர ஏனைய அனைத்துத் துறைகளும் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழேயே இருந்ததுடன் தேசிய பாதுகாப்பின் வீழ்ச்சிக்கும் அவரே பொறுப்புக் கூற வேண்டும், குறிப்பாக 52 நாள்கள் அரசாங்கத்தின் காலத்தில் அவரே எவருக்கும் சொல்லாமல் மஹிந்தவைப் பிரதமராக்கியிருந்தார். அந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே தேசிய பாதுகாப்புத் தளர்வடைந்தது. ஆனால், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகக் கூறியவர்கள் இன்று மைத்திரியைத் தமது அணிக்குத் தலைவராக்கிக் கொண்டுள்ளனர். அதனால், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக மைத்திரி முன்பே அறிந்திருக்கவில்லை என்று கூறினாலும் அதனை நம்ப முடியாது. அவருக்கு அந்தத் தாக்குதல் தொடர்பில் முன்பே தெரிந்திருக்கும்.   

கே: நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஆளும் தரப்புடன் இணைந்து செயற்பட உள்ளதாகக் கூறப்படுகிறதே?

ஐக்கிய மக்கள் சக்தியினர் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் நாம் ஆளும் தரப்புடன் இணைந்துகொண்டு தேசிய அரசாங்கம் அமைக்கப் போவதாகக் குற்றம் சாட்டுகின்றனர். இருப்பினும் அவ்வாறானதோர் அவசியம் ஐக்கிய தேசிய கட்சிக்கு இல்லை. ஐ.தே.க ஆட்சியொன்றை அமைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். நாட்டு மக்களுக்கும் நெருக்கடியான நிலைமைகள் வரும்போது ஐக்கிய தேசிய கட்சியாலேயே நாட்டை மீட்டெடுக்க முடியும் என்று நம்புகின்றனர். எனவே அவசியமான சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்கள் அதிகாரத்தை வழங்குவர். அந்த நேரத்தில் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொடுக்கும்.   

கே: நாட்டிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஐ.தே.கவால் எவ்வாறான தீர்வை வழங்க முடியும்? 
எனது மாமனாரான டீ.எஸ்.சேனநாயக்கவின் காலத்திலிருந்து தமிழ், முஸ்லிம் மக்கள் ஐக்கிய தேசிய கட்சி மீதே நம்பிக்கை கொண்டிருந்தனர். அதன்படி இன்றும் அந்த நம்பிக்கையில் மாற்றமில்லை. அதனால் தமிழ், முஸ்லிம் மக்களுக்குப் பாதுகாப்பை வழங்கவும் ஐக்கிய தேசிய கட்சியினாலேயே முடியும். எனவே, சகல இனத்தவரும் இந்நாட்டு மக்கள் என்ற அந்தஸ்த்தை நாம் பெற்றுக்கொடுப்போம்.   

கே: வாக்காளர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் சகலரும் வாக்களிப்பது அவசியம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் வாக்களிக்கத் தவறும் பட்சத்தில் தற்போதைய ஆளும் தரப்பினர் மீண்டும் ஆட்சியைப் பிடித்துக்கொள்வர். அதனால், நாட்டு மக்கள் நெருக்கடிகளுக்கு ஆளாகுவர். எனவே, ஆளும் தரப்பினர் கோருகின்ற 2/3 அதிகாரத்தை அவர்களுக்குப் பெற்றுக்கொடுக்காமல் பாதுகாக்கும் பொறுப்பை உணர்ந்துகொண்டு, ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் வாக்களிக்க வேண்டியது அவசியம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே மக்கள் வாக்களிக்கச் செல்ல முடியாது என்ற அச்சம் இருந்தாலும், பாதுகாப்பான முறையில் ​வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X