2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

முஸ்லிம்கள் மீதான கண்டுகொள்ளப்படாத மீறல்கள்

Johnsan Bastiampillai   / 2022 செப்டெம்பர் 13 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், மனித உரிமைகள் மீறல்கள் மீண்டும் பேசுபொருளாகி உள்ளன. 

இம்முறை பேரவையின் அமர்வில், ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலைமாறுகால நீதியை வலியுறுத்தி உள்ளார். அத்துடன், நாட்டில் நெருக்கடி நிலையைத் தீர்ப்பதற்கும் மனித உரிமைகள் மீறல்கள் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்தவும், பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவித்தல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த வெளிப்படையான விசாரணைகளை மேற்கொள்ளுதல், வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னம் உள்ளிட்ட மேலும் பல விடயங்களையும் வலியுறுத்தி இருக்கின்றார்.

இது ஒன்றும் புதிதல்ல!

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான 12 வருடங்களில், ஜெனீவா அமர்வும் மனித உரிமைகள் விவகாரங்களும் அடிக்கடி பேசப்படுகின்ற சங்கதிகள்தான். சர்வதேச சமூகம், குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை, இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக ‘பாடம்’ போதித்து வருகின்றது. ஆயினும், ஐ.நா சொல்வதை எல்லாம், இலங்கை அரசாங்கங்கள் அப்படியே நடைமுறைப்படுத்தியதாகத் தெரியவில்லை. ஆனால், அமர்வுகள் மட்டும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்தப் பின்னணியில், இலங்கையில் இடம்பெற்றதாக சொல்லப்படுகின்ற எல்லா உரிமைகள் மீறல்களும் உண்மையில் இடம்பெற்றனவா? அதன் கனதி என்ன? என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அத்துடன், அரச தரப்பு மட்டுமே மீறல்களைச் செய்ததாகக் கொள்ளவும் முடியாது.

இவர்கள் குறிப்பிடுகின்ற அளவுக்கு மீறல்கள் இடம்பெறவில்லை என்றும், புலம்பெயர் அமைப்புகளும் வெளிநாடுகளில் தஞ்சம் கோருவதற்காக உள்நாட்டுப் பிரச்சினையை பயன்படுத்துகின்ற ஆட்களும், இவ்விவகாரத்தை ஊதிப் பெருப்பிப்பதாக அரச தரப்பில் கூறப்படுகின்றது. ஆனால்,  மறுக்கவும் மறைக்கவும் முடியாதளவுக்கு சில சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றன.

இந்த முன்னெடுப்புகளின் பெறுபேறும் விளைவும் எப்படி இருந்தாலும், தமிழ் மக்கள் தமது விவகாரத்தை, தங்கள் மீதான உரிமை மறுப்புகள், மீறல்கள் போன்றவற்றை சர்வதேசத்தின் அரங்குக்குக் கொண்டு சென்றுள்ளனர். அதற்காகத் தொடர்ந்தும் பாடுபட்டு வருகின்றனர் என்பது முக்கியமானது.
ஆனால், இந்த விடயத்தில் முஸ்லிம் சமூகம் எந்த இடத்தில் உள்ளது? இந்த நாட்டில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட உரிமை மீறல்கள், வன்முறைகள், படுகொலைகள், பயங்கரவாத வன்கொடுமைகள் போன்றவை, உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் சரியாக முன்வைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு விடை தேட வேண்டியுள்ளது.

சுதந்திர இலங்கையில், உரிமை மீறல்களை அதிகம் எதிர்கொண்டவர்கள் தமிழர்கள் என்றாலும், தமிழ் சமூகத்தின் உரிமைகள் மட்டுமே மீறப்பட்டதாகச் சொல்ல முடியாது. சிங்கள மக்களினதும் முஸ்லிம் சமூகத்தினதும் உரிமைகளும் கணிசமான அளவுக்கு மீறப்பட்டுள்ளன.

அரந்தலாவையில் படுகொலை செய்யப்பட்டவர்களும் காத்தான்குடியில் கொலை செய்யப்பட்டவர்களும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களும் வேறு வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்; இக்கொலைகளின் தன்மைகள் வேறுபடலாம். ஆனால், எல்லாம் ஒரே வகையான அநியாயங்களே என்பதை யாரும் மறுக்கவியலாது.

அதேபோல், அரச தரப்பில் அதிகமாக உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக தமிழ்த் தேசியம் கூறி வருகின்றது. அதற்கான ஆதாரங்களையும் அவர் தயார்செய்து முன்வைப்பதை காண முடிகின்றது.ஆனால், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஆயுத இயக்கங்கள் தொடக்கம், சஹ்ரான் கும்பல் போன்ற பயங்கரவாத அமைப்புகள் தொட்டு, பல இனவாத அமைப்புகள் வரை பல தரப்பினரும் உரிமை மீறல்களை நிகழ்த்தி இருக்கின்றனர் என்பதே நிதர்சனமானது.

அந்த வகையில், தமிழ் மக்கள் மீதான உரிமைகள் மீறல்களை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள், தொடர்ச்சியாக வெளியுலகுக்குச் சொல்லி வருகின்றன. புலம்பெயர் அமைப்புகளும் இவ்விடயத்தில் சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் கொடுக்கின்றன.

பெரும்பான்மை சமூகத்தின் விவகாரங்களை, ஆட்சியாளர்கள் கவனிக்கின்றார்கள். கத்தோலிக்க சமூகத்துக்கு நியாயம் தேடும் முன்முயலுகைகளை பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்னின்று மேற்கொள்கின்றார். 

ஆனால், முஸ்லிம் சமூகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட அநியாயங்கள், படுகொலைகள், இனச்சுத்திகரிப்பு, உரிமை மீறல்கள் போன்றவை,  பெரியளவில்கூட இன்னும் ஆவணப்படுத்தப்படவும் இல்லை. ஒரு முக்கிய விவகாரமாக, பேசுபொருளாக முன்னிலைப்படுத்தவும் இல்லை. 

முஸ்லிம்கள் மீதான உரிமைகள் மீறல்கள் பற்றிப் பேசுவது என்றால், நூறு வருடங்கள் பின்னோக்கி நோக்க வேண்டும். அதைவிடுத்து, சுதந்திரத்துக்குப் பின்னரான காலப்பகுதியை மட்டும் நோக்கினால், 1970களில், 1980களில் இடம்பெற்ற கலவரங்களால், முஸ்லிம்கள் இனரீதியான ஒடுக்குமுறையை எதிர்கொண்டதைக் கவனிக்க வேண்டும்.

அதன் பின்னர், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் ஆயுத இயக்கங்களாலும் படையினராலும் அவ்வப்போது உரிமைகள் மீறல்களை எதிர்கொண்டனர். இந்திய அமைதி காக்கும் படைக்கும் இதில் சிறுபங்குள்ளது.

குறிப்பாக, வடக்கில் பூர்வீகமாக வாழ்ந்த சுமார் ஒரு இலட்சம் முஸ்லிம்கள் 1990ஆம் ஆண்டு இரவோடிரவாக யாழ்ப்பாணத்திலும் அதைச் சூழவுள்ள இடங்களில் இருந்தும் விடுதலை புலிகளால் வெளியேற்றப்பட்டனர். ஆனால், விடுதலைப் புலிகள் இதை ‘ஒரு கசப்பான சம்பவம்’ என்று கூறியதோடு, தமது பிராயச்சித்தத்தை முடித்துக் கொண்டனர்.

இதே காலப்பகுதியில், காத்தான்குடி, ஏறாவூர் பிரதேசங்களில் பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள், புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர். அதேபோன்று குருக்கள்மடம், அக்கரைப்பற்று, அளிஞ்சிப்பொத்தானை, உறுகாமம் என கிழக்கில் பல இடங்களில், முஸ்லிம்களை நோக்கி ஆயுதங்கள், பலத்த குரலில் இரத்தம் சிந்தப் பேசியிருந்தன.

முஸ்லிம்கள், தமிழர்களோடு இணைந்து அரசியல் செய்து வந்த நிலையில், தனியான அரசியல் கட்சியை தொடங்கியிருந்த காலமது. ஆயினும், தொடர்ந்து பல நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள், தமிழ் இயக்கங்களுடன் இணைந்து போராடிக் கொண்டிருந்தனர்.இந்தப் பின்னணியிலேயே, இந்தப் படுகொலைகள், விரட்டியடிப்புகள், கப்பம் பறிப்புகளும் இடம்பெற்றன. எனவே, இந்த உரிமை மீறல்கள் உலகுக்கு சரிவரத் தெரியப்படுத்தப்பட வேண்டும். 

ஆயுதக் கலாசாரம் அல்லது பயங்கரவாத அமைப்புகளுக்கு மேலதிகமாக, இனவாத, கடும்போக்குவாத சிங்கள அமைப்புகளால் முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் உரிமைசார் நெருக்கடியை சந்தித்து வருகின்றது.

கடந்த பத்து வருடங்களில் மாத்திரம், அளுத்கம வன்முறை, திகன கலவரம், அம்பாறை வன்முறை, வடமேல் மாகாண வன்முறைகள் என ஏகப்பட்ட அத்துமீறல்கள், ஒடுக்குமுறைகளை முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ளனர். இவை தவிர, இஸ்லாமிய சமயத்தை மையமாகக் கொண்ட கருத்தியல் ரீதியான ஒடுக்குமுறைகளும் இடம்பெற்று வருகின்றன.

தமிழர்கள் தங்களது உரிமைகள் மீறல்களை பேசிய அளவுக்கு, அரசாங்கங்கள் தம்பக்க நியாயங்களை முன்வைத்த அளவுக்கு, முஸ்லிம் சமூகமும் தம்மீதான உரிமைகள் மீறல்களைப் பேசியிருக்க வேண்டும். ஆனால், ஓரிரு அரசியல்வாதிகள் மாத்திரம், ஆவணங்களை சமர்ப்பித்தனரே தவிர, மற்றைய 99 சதவீதமானோரும் இதைக் கண்டு கொள்ளவில்லை.

இந்த முறை, முஜிபுர் ரஹ்மான் எம்.பி, ஜெனீவா செல்லவுள்ளதாக கூறப்படுகின்றது. அது நல்ல விடயமே! ஆனால், இதை முஸ்லிம் கட்சித் தலைவர்கள், ஆயுதக் கலாசாரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் எப்போதோ செய்திருக்க வேண்டும்.

இதனது நோக்கம், அரசாங்கத்தை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குவதோ, சர்வதேசம்தான் நமக்கு நீதியைத் தரமுடியும் என்பதோ அல்ல; அல்லது, தமிழர்களின் நகர்வுகளை பலவீனப்படுத்துவதோ அல்ல.

மாறாக, இந்த நாட்டில் முஸ்லிம் சமூகமும் உரிமைகள் மீறல்களை எதிர்கொண்டுள்ளது என்பதை, உலகுக்குத் தெளிவாக எடுத்துரைப்பதும் சர்வதேச அரங்கில் பதிவு செய்வதும் ஆகும். இது மிக முக்கியமானது.

ஆயினும், அமைச்சுப் பதவிகளுக்காக, பணம் உழைக்கக் கூடிய வாய்ப்புகளுக்காக ஆலாய்ப் பறக்கின்ற கடந்தகால மற்றும் தற்கால முஸ்லிம் அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்பணியை இன்றுவரை சரிவரச் செய்யவில்லை.

ஆகவே, இந்தப் பின்னணியில் முஸ்லிம்கள் மீது, பலதரப்பாலும் உரிமைகள் மீறல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை, சர்வதேச சமூகமும் ஒரு பெரிய விவகாரமாக நோக்குவதற்கான நிர்ப்பந்தமும் கடப்பாடும் இல்லாது போயுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .