Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 31, திங்கட்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 25 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு சமூகத்தின் பிரச்சினைகளுக்கு அரசாங்கமோ சம்பந்தப்பட்ட தரப்பினரோ தீர்வு தருவார்களா? இல்லையா? என்பது இரண்டாவது விடயம்தான். ஆனால், அச் சமூகத்தின் பிரச்சினைகளை, அபிலாஷைகளை, எதிர்பார்ப்புக்களை சரிவர முன்வைப்பதுதான் முதலாவது காரியமாகும்.
இலங்கை முஸ்லிம்களுக்கான அரசியலில் இந்த விடயத்தில் பாரிய குறைபாடு காணப்படுகின்றது. அதுவும் தேசிய மக்கள் சக்தி ஊடாகவும் ஏனைய கட்சிகள் ஊடாகவும் அரசியலில் குறிப்பிடத்தக்க முன் அனுபவம் அற்றவர்கள் கணிசமாளளவில் நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கின்ற.
இன்றைய சூழலில் அந்த இடைவெளி வெகுவாக உணரப்படுகின்றது.
நாட்டின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நிலைவரங்களில், ஆளும் தரப்பு எம்.பிக்களின் நகைப்பூட்டும் விளக்கங்களில், குரங்குக் கதைகளில், முன்னுக்குப் பின் முரணான அறிக்கைகளில் அல்லது நாட்டில் தொடராக நடைபெறுகின்ற கொலைகளில் நாம் கவனம் செலுத்தியுள்ளதால், முஸ்லிம் அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவைக் கவனிக்காது விட்டிருக்கலாம். ஆனால், நிஜத்தில், கடந்த மூன்று தசாப்தங்களாகவே முஸ்லிம் அரசியலில் ஏற்பட்டிருந்த பின்னடைவு இப்போது ஒருவித தேக்கநிலையை அடைந்திருப்பதை, உன்னிப்பாகக் கவனிப்போர் புரிந்து
கொள்ளக் கூடியதாக இருக்கும்
.
புதுமுகங்கள் என்ற தகுதி மட்டும் ஒரு மக்கள் பிரதிநிதிக்கு போதாது. உண்மையில், என்.பி.பி. ஊடாகவோ ஐக்கிய மக்கள் சக்தி ஊடாகவோ அல்லது முஸ்லிம் கட்சிகளின் சார்பாகவோ முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய இயலுமையைக் கொண்டவர்கள் நாடாளுமன்றத்திற்கு வந்திருக்க வேண்டும். அவ்வாறான சிலரும் எம்.பியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால், அரைவாசிக்கு கூடுதலானோர் புதுமுகங்கள். சிலர் அறிவாளிகள், படித்தவர்கள் என காட்டிக் கொள்பவர்கள். இந்த மாற்றம் ஒரு வகையில் சிறந்தது என்றாலும், வரலாற்று ரீதியான, நீண்டகால விவகாரங்களைக் கையாள்வதில் ஆழமான புரிதல் இன்மை என்பது பாதகமான நிலைமையாகும்.
இன்னும் சொல்லப் போனால் ஆளும் தரப்பு முஸ்லிம் எம்.பிக்கள் எல்லோருமே புதியவர்கள். முஸ்லிம்களுக்கான அரசியல் என்ற தளத்தில் செயற்படாமல், ஜே.வி.பி. அல்லது இலங்கையர் என்ற பொதுவான சிந்தனையோடு பணியாற்றியவர்கள். இதில் சாதகங்களும் உள்ளன.
முஸ்லிம் சமூகத்தின் நீண்டகால, குறுங்கால பிரச்சினைகளை அறியாத பலர் இன்று எம்.பிக்களாகியுள்ளனர். முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட வலியை, புலிகளாலும் ஆயுதக் குழுக்களாலும் வடக்கு, கிழக்கில் வஞ்சிக்கப்பட்ட கதைகளை பெரும்பாலும் உணர்வுபூர்மாக அறியாதவர்கள் பலர் உள்ளனர்
.
அழுத்கம, திகண, அம்பாறைக் கலவரங்கள் இடம்பெற்ற போது அல்லது உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு முஸ்லிம்கள் நசுக்கப்பட்ட போது இதனைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல் தாம் உண்டு தமது தொழில் உண்டு என்று இருந்த பலர், இன்று ஆளும், எதிர்க் கட்சிகள் ஊடாக முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளாக தியவன்ன ஓயாவுக்கு வந்துள்ளனர்.
இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட விரல் விட்டு எண்ணக்கூடிய ஓரிரு புதுமுக முஸ்லிம் எம்.பிக்களும், மீண்டும் எம்.பி.யாகியுள்ள சீனியர்கள் சிலரும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை அவ்வப்போது முன்வைக்கின்றனர் என்பது ஆறுதலான விடயம் எனலாம்.
ஆனால், கடந்த காலத்தில் பல முஸ்லிம் எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் வாழாவிருந்து காலத்தைக் கடத்தியது போல பெரும்பாலான ஆளும், எதிரணி முஸ்லிம் எம்.பிக்கள் பலர் சும்மா பெயருக்கு வந்து விட்டுப் போவதாகவே தெரிகின்றது. நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் சமூகத்தைப் பற்றிப் பேசுவது குறைவாகவுள்ளது.
நாட்டில் இப்போது முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இல்லை. என்ன நியாயம் சொன்னாலும் இது பெரிய வரலாற்று தவறாகவே அமையும். எனவே, முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள், முஸ்லிம் சமூகத்துடன் தொடர்புபபட்ட விவகாரங்கள் எடுப்பார் கைப்பிள்ளையாக மாறி விடுவதைக் காண்கின்றோம்.
ஆளும் தரப்பில் எம்.பியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள பலருக்கு இந்த வாய்ப்பு என்பது அந்தக் கட்சி கொடுத்த பெரும் வரப்பிரசாதமாகும். என்.பி.பி. இல்லையென்றால் பலர் எம்.பியாக வந்திருக்கவே முடியாது. அதற்காகவும், இலங்கையர் என்ற பொதுவான கோட்பாட்டை உடைக்கக் கூடாது என்பதற்காகவும் கட்சியின் கட்டுக்கோப்புக்காகவும் பலர் மௌனம் காப்பதாகவே கருத வேண்டியுள்ளது.
ஆளும் தரப்பில் மட்டுமல்ல, எதிரணியில் உள்ள சில முஸ்லிம் எம்.பிக்களுக்கும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றிய கடந்தகால வரலாறு, சிக்கல்கள் தெரியாது. எனவே, அவர்கள் பேசிச் சாதிப்பது எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை.
குறிப்பாக அரசாங்கம் முஸ்லிம் எம்.பி. ஒருவரை அமைச்சராக நியமிக்காவிட்டாலும் கூட, ஆளும் தரப்பு முஸ்லிம் எம்.பிக்கள், ஒரேயொரு பிரதியமைச்சர் ஆகியோர் நிழல் அமைச்சரைப் போல இருந்து முஸ்லிம்களின் விவகாரங்களைக் கையாள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு உள்ளது.
ஆனால், அண்மையில் அமைச்சர் சரோஜா, முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் இரண்டொரு தடவை கருத்துத் தெரிவித்திருக்கின்றார். முஸ்லிம்களின் விவாக விவாகரத்து சட்டத்தை மாற்றியமைப்பது பற்றிச் சொல்லியிருக்கின்றார். ஆனால், அமைச்சரவை பேச்சாளர் அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இந்தச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்பது முஸ்லிம்கள் உடன்பட்ட விடயம்தான். அதற்காக ஒரு குழுவும் நியமிக்கப்பட்டு இரண்டு அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டன
.
எனவே, இதுபற்றி சம்பந்தப்பட்ட
முஸ்லிம் அதிகார தரப்புக்களும் உரையாடல்களை மேற்கொண்டு உடன்படுவதற்கு முன்னதாக, ஊடகங்களுக்கு அறிக்கை விடுவது, முஸ்லிம்களை முகம் சுழிக்க வைப்பதாகவே உள்ளது.
இது குறித்து ஆளும் தரப்பின் முஸ்லிம் எம்.பிக்கள் ஏற்கெனவே அமைச்சருக்குத் தெளிவுபடுத்தியிருந்தால் அல்லது பகிரங்கமாக அறிக்கையொன்றை விட்டிருந்தால் இந்த குளறுபடி ஏற்பட்டிருக்காது. விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சராக இருந்தாலும்,
ஒரு சமூகத்தின் விவகாரத்தைக்
கையாள்வதில் கவனம் தேவை என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.
இவ்வாறான முஸ்லிம்களுடன் சம்பந்தப்பட்ட விடயங்களுக்கான தெளிவை ஆளும் தரப்பு எம்.பிக்கள் இரகசியமாக வழங்குகின்றார்களா? என்பது தெரியவில்லை. ஆனால், பொது வெளியில் அப்படி எந்த அபூர்வமும் நிகழவில்லை.
முஸ்லிம்களுக்கு அமைச்சு ஏன் வழங்கப்படவில்லை என்று மக்கள் கேள்வி எழுப்பிய போது, நொறுக்குத்தீனி தின்று கொண்டிருந்த எம்.பியை நாடே பார்த்தது. அத்தி பூத்தாற்போல் பேசிய முஸ்லிம்எம்.பிக்கள் சிலரின் அழகு மொழி நடையையும் (?) கனதியையும் கூட நாம் கவனிக்கத் தவறவில்லை.
கடந்த காலத்தில் முஸ்லிம் கட்சிகளின் ஊடாக தெரிவு செய்யப்பட்டவர்கள் மஹிந்தவுக்கு, கோட்டாவுக்கு, ரணிலுக்கு, மைத்திரிக்கு, சஜித்திற்கு ஆதரவளித்தனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்கள் தாம் சார்ந்திருந்த பெருந்தேசியக் கட்சிகளில் நிலைப்பாடே சரி என்று கூறினர். அவர்களது ஆதரவாளர்களும் ஜால்ரா அடித்தனர்.
அந்த நிலைமைதான் ஆளும் தரப்பிலும் எதிர்த்தரப்பிலும் இன்று வரை நீடிக்கின்றது என்பதற்கு நமக்குத் தினமும் அத்தாட்சிகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. ஆளும் தரப்பை ஜே.வி.பி., என்.பி.பி. ஆதரவாளர்கள் நியாயப்படுத்த முனைவதையும், நல்ல விடயங்களையும் எதிரணி ஆதரவாளர்கள் விமர்சிப்பதையும் பட்டவர்த்தனமாக காணலாம்.
எதிரணியில் உள்ள றவூப் ஹக்கீம்,
முஜிபுர் ரஹ்மான், றிசாட் பதியுதீன், இம்ரான் மஹ்ரூப், உதுமாலெப்பை, தாஹிர் போன்ற எம்.பி.க்கள் அவ்வப்போது பேசிக் கொண்டிருப்பது நல்ல விடயமாகும். குறிப்பாக ஜனாஸா எரிப்பு மீதான ஹக்கீமின் தனிநபர் பிரேரணை வரவேற்கத்தக்கதாகும்.
ஆனால், முன்னைய சில அரசாங்கங்களைப் போல, இந்த அரசும், ‘எங்களுக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள், அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளோம்.
எமக்கு யாரும் அறிவுரை கூறத் தேவையில்லை’ என்ற அதிகாரத் தோரணையில் செயற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
எனவே, ஆளும் தரப்பில் உள்ள முஸ்லிம் எம்.பிக்கள் ஒரு முக்கியமான வகிபாகத்தை எடுக்க வேண்டியுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள் என்னவென்பதையும், அவர்களது உரிமைகள் எவ்விதம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் மேலிடத்திற்கு; தெளிவுபடுத்த வேண்டியது தார்மீகக் கடமையாகும்.
இது விடயத்தில் முன் அனுபவமும், பின்னணி பற்றிய அறிவும் போதாது என்றால் அது பற்றி தெரிந்தவர்களிடம் அல்லது முன்னனுபவம் உள்ள எம்.பிக்களிடம் கேட்கலாம். எது எப்படியோ, முஸ்லிம்களின் உரிமைகளும் நலன்களும் வெளிப்படையாகவே பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான அழுத்தத்தை வெளியில் உள்ள ஏனைய முஸ்லிம் எம்.பிகக்ள், முன்னாள் எம்.பிக்கள்
கொடுக்க வேண்டும். இங்கே முஸ்லிம் சமூகம் என்று கூறப்படுவது இலங்கையில் எல்லா மாவட்டங்களிலும் வாழ்கின்ற,
என்.பி.பிக்கு வாக்களித்த, வாக்களிக்காத, இன்னும் வாக்குரிமை கிடைக்காத
அனைத்து முஸ்லிம்களும் ஆவர்.
எனவே, முஸ்லிம்கள் தொடர்பான விவகாரங்கள் என்று வருகின்ற போது, அவர்கள் சார்ந்து இயங்குகின்ற மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைப்புக்கள், மூத்த அரசியல்வாதிகள், மத நிறுவனங்களுடன் உரையாடல்களை மேற்கொள்ள வேண்டும்.
மாறாக, கொடி பிடிக்கின்ற சில குழுக்கள், புதுமை வாதிகள் என்ற கூட்டம் அல்லது தமது கட்சிக்கு ஆதரவானோரின் கருத்துக்களை மட்டும் வைத்துக் கொண்டு, ஒரு தனியான இன, மத குழுமத்தின் விவகாரங்களைக் கையாளக் கூடாது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago