2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

முஸ்லிம் தரப்புடனும் பேசுவது கட்டாயம்

Johnsan Bastiampillai   / 2023 மே 18 , பி.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மொஹமட் பாதுஷா

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டோர், நாட்டின் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஆர்வம் கொண்டுள்ளதான தோற்றப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், அரசாங்கத்தின் இன்னுமொரு தரப்பினர் அதைச் சீர்குலைக்கும் விதத்தில் செயற்பட்டு வருகின்றனர். இதற்கு நல்ல உதாரணமாக, சரத் வீரசேகர போன்ற அரசியல்வாதிகளைச் சுட்டிக்காட்டலாம். 

இந்தப் பின்னணியிலேயே, அரசாங்கத்துக்கும் தமிழ்த் தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் பல தடவை இதுபோன்ற பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று, தீர்க்கமான முடிவொன்றை எட்டாமலேயே நின்றுபோன விவகாரங்களைத்தான் மீண்டும் புதிய கோணத்தில், புதிய மேசையில் பேசத் தொடங்கி இருக்கின்றார்கள். 

இந்தப் பேச்சுவார்த்தையில் பங்குபற்றுவதற்கு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே ஆரம்பத்தில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் எம்.பிக்களையும் உள்ளடக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்த் தரப்பு வலுவாக முன்வைத்தது. 

இதற்கு அடிப்படைக் காரணம், இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடங்கலாக இப்பேச்சுவார்த்தையில் பேசப்படுகின்ற விடயதானங்கள் வடக்கு, கிழக்கு என்ற இரு மாகாணங்களையும் உள்ளடக்கியது என்பதாகும். எனவே, இதையடுத்து கிழக்கு மாகாண தமிழ் எம்.பிக்களும் சந்திப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில், வடக்கு, கிழக்கு மாகாணங்களை தாயகமாகக் கொண்ட இன்னுமோர் இனக் குழுமமும் இனப்பிரச்சினை மற்றும் இன்று பேசப்படுகின்ற அனைத்து விடயங்களுடனும் தொடர்புபட்ட தனிச் சமூகமுமான முஸ்லிம்களின் பிரதிநிதிகள் இக்கூட்டத்துக்கு அழைக்கப்படவில்லை என்பதாகும். 

போர் நிறுத்தப் பேச்சுகள், சமாதானப் பேச்சுகள், நல்லிணக்க உரையாடல்கள், தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள், ஆணைக்குழுக்கள், விசாரணைக்குழுக்கள் என்று இதுவரை எத்தனையோ விடயங்கள் நடந்தேறிவிட்டன. ஆனால், அநேக பேச்சுகளால், விசாரணைக் குழுக்களால் கிடைத்த பலன் என்று ஒன்றுமில்லை.

அரசாங்கங்களும் சர்வதேசமும் இதனால் ஏதோ ஓர் அனுகூலத்தை அடைந்து கொண்டன. தமிழ் அரசியல்வாதிகள், தாங்கள் சமூகத்துக்காகப் போராடுவதாக காண்பித்ததன் மூலம், அரசியல் ரீதியான இலாபத்தை, தேர்தல் வெற்றிகளைப் பெற்றுக் கொண்டனர். 

ஆனால், தமிழ் மக்களுக்கு நேரமும் காலமும் வீணடிக்கப்பட்ட அளவுக்கு, அவர்களது அபிலாஷைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும். 

நாம் என்னதான் சொன்னாலும், இலங்கை என்பது சிங்களப் பௌத்த பெரும்பான்மையைக் கொண்ட ஒரு பல்லின நாடு என்ற அடிப்படை விடயத்தை மறந்து விடக் கூடாது. எனவே, இங்கு சில வகையான தீர்வுப் பொதிகள் நடைமுறைச் சாத்தியமாவது, அவ்வளவு சுலபமான காரியமல்ல. ஆனால், தமிழ்த் தரப்பு அவ்வாறான நிலைப்பாட்டில், ஓர் இம்மியளவு நெகிழ்வுத் தன்மையையே இதுவரை வெளிக்காட்டியுள்ளது என்பது கவனிப்புக்குரியது. 

மறுபுறத்தில், ரணில் விக்கிரமசிங்க போன்ற சில பெரும்பான்மையினத் தலைவர்கள், தீர்வு விடயத்தில் பிடிவாதமின்றி நடந்து கொண்டாலும் கூட, பொதுவாக பெருந்தேசிய அரசியல் என்பது, உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றின் ஊடாக, தமிழ்த் தரப்பு கோருகின்ற ‘எல்லாவற்றையும்’ முழுமையாகத் தங்கத் தட்டில் வைத்து வழங்கப் தயாரில்லை. எனவேதான், இப்பிரச்சினை இன்னும் பிச்சைக்காரனின் புண்ணைப்போலவே இருக்கின்றது.  

இந்தப் பின்புலத்தில் நோக்கும் போது, தற்போது நடைபெறும் பேச்சுகளும் எவ்வளவு தூரம் செல்லும், அதன் விளைபயன் என்னவாக இருக்கும் என்பதெல்லாம் நடக்கும் வரை நிச்சயமற்றதாகவே தெரிகின்றது. அதையெல்லாம் தாண்டி, இச்சந்திப்பு ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் நடைபெறுவதால், பல வகைகளில் முக்கியமானது என்பதை மறுக்கவியலாது. 

எனவே, இந்தச் சந்திப்புகளுக்கு இவ்விவகாரங்களுடன் தொடர்புபட்ட முஸ்லிம் தரப்பும் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். கலந்துரையாடப்படுகின்ற விடயதானங்கள் தொடர்பில் வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் என்ன நிலைப்பாட்டில் உள்ளனர்? அவர்களது அபிலாஷைகள் என்ன என்பதும் சமகாலத்தில் உரையாடப்பட வேண்டியது இன்றியமையாதது ஆகும். 

அரசாங்கத்துக்கும் தமிழ்த் தரப்புக்கும் இடையிலான பேச்சுகள், வடக்கையும் கிழக்கையும் உள்ளடக்கியதான இனப்பிரச்சினை தீர்வை நோக்கிய ஒரு முயற்சியாகும். அத்துடன் அதிகாரப் பகிர்வு, காணி விவகாரம், காணாமல் போனோர் விகாரம், கைதிகள் விடயம், நல்லிணக்கம் என்பன பற்றியும் இக் கூட்டங்களில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. 

இனப்பிரச்சினை என்பது அரசாங்கம் மற்றும் படைகளுடனும், தமிழ் ஆயுதக்குழுக்கள் மற்றும் தமிழ் மக்களுடனும் தொடர்புபட்டதாக நோக்கப்பட்டாலும், உண்மையில் அது வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்கள் மீதும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அநாவசியமான முறையில் முஸ்லிம்கள் இருதலைக் கொள்ளியாக நசுக்கப்பட்ட வரலாற்றை மறக்க முடியாது. 

எனவே, இப்பேச்சுகளில் பேசப்படுகின்ற 99 சதவீதமான விவகாரங்கள் முஸ்லிம் மக்களுடனும் தொடர்புபட்டது என்பதை முதலில் அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும். 

குறிப்பாக, வடக்கு, கிழக்கு இணைக்கப்படக் கூடாது என்பது இவ்விரு மாகாணங்களிலும் வாழும் முஸ்லிம்களின் நிலைப்பாடாகும். அதேபோன்று, அதிகாரப் பகிர்வு எப்படியானதாக இருக்க வேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு முஸ்லிம் சமூகத்துக்கு உள்ளது. 

முஸ்லிம்களுக்கும் இலட்சக் கணக்கான ஹெக்டேயர் காணிகள் பற்றிய பிரச்சினைகள் உள்ளன. யுத்த காலத்தில் கடத்தப்பட்டோர் காணாமல்போனோர் பற்றிய பிரச்சினைகளும், விடுதலைப் புலிகள் மற்றும் ஆயுதம் தரித்த குழுக்கள், படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் கதைகளும் ஏராளம் உள்ளன. 

ஆனால், துரதிர்ஷ்டவசமாக முஸ்லிம் சமூகமும், முக்கியமாக முஸ்லிம் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இதற்குத் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்காக, நீதியை நிலைநாட்டுவதற்காக தமிழ்ச் சமூகத்தைப் போன்று தொடராக போராடவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். 
அதாவது, கடைசித் தருணத்தில்தான் பஸ்ஸில் ஏறுகின்றார்கள்; இதன் காரணமாகவே, தமிழர்களுக்கு ஏதாவது தீர்வு கிடைக்கப் போகின்ற தருணத்தில், முஸ்லிம்கள் அதில் பங்கு கேட்கின்றார்கள் அல்லது, குறுக்கே வந்து விடுகின்றார்கள் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். 

ஆனால், எது எப்படியிருப்பினும் முஸ்லிம்கள் இப்பேச்சுவாhத்தைக்கு அழைக்கப்படாமையை நியாயப்படுத்தி விட முடியாது. அதேபோன்று, (இனவாத சிங்களவர்கள் அன்றி) வடக்கிலும் கிழக்கிலும் யுத்தத்தால் இழப்புகளைச் சந்தித்த அப்பாவிச் சிங்கள மக்களையும் கவனத்தில் கொள்வதே எதிர்காலத்துக்கு நல்லதெனலாம்.  

இப்போது, இந்தச் சந்திப்புகளில் முஸ்லிம் தரப்பு உள்வாங்கப்படவில்லை என்ற பத்திரிகை பத்திகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் விமர்சனங்கள் எழுந்த பிறகு, முஸ்லிம் எம்.பிக்களும் அரசாங்கமும் கண்விழித்திருப்பதாக தெரிகின்றது. 

இதில் தமக்கும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும்; தீர்வுடன் தொடர்புபட்ட விடயங்கள் தம்முடனும் கலந்துரையாடப்பட வேண்டும் என்று முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கைகளை விடுத்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இதையடுத்து விரைவில் அரசாங்கம் முஸ்லிம் தரப்பையும் சந்திக்கும் என்ற செய்திகள் வெளிவந்திருக்கின்றன. 

நாட்டிலுள்ள தமிழர்களின் பிரச்சினைகளை மட்டுமன்றி, முஸ்லிம்கள், சிங்களவர்கள் மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க வேண்டும். அதற்கான உரையாடல்களை நடத்தத் தயாராக இருப்பதாகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறி வருகின்றார். 

எனவே, பல யதார்த்த பூர்வமான காரணங்களின் அடிப்படையில், தமிழ் தரப்பை தனியாகவும் முஸ்லிம் தரப்பை வேறாகவும் சந்திக்க அரசாங்கம் திட்டமிட்டு இருக்கலாம். இருப்பினும், இதற்கு நிறைய காலம் தேவைப்படும். அத்துடன் அரசாங்கம் முஸ்லிம்களின் தலையில் பழியைப் போட்டு, தமிழர்களுக்கு ஏதாவது ஒன்றை மறுக்கவும் செய்யலாம். 

எனவே, ஒரே மேசையில் பேசுவது வாதவிவாதங்களைத் தோற்றுவிக்கும் என்றாலும் ஒரு காத்திரமான உரையாடலாக அதைப் பக்குவமாக கையாளலாம். ஒருவேளை, ஒரே மேசையில் தமிழ் தரப்பையும் முஸ்லிம் தரப்பையும் சந்திப்பது சாத்திமயற்றது என்றாலும் கூட, முஸ்லிம் தரப்புடன் சமகாலத்தில், சமாந்திரமான உரையாடல்கள் ஆரம்பிக்க வேண்டும்.  

இது வடக்கு, கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்ட விவகாரம் என்பதால், முஸ்லிம் தரப்பு என்று சொல்லும் போது இவ்விரு மாகாணங்களிலும் உள்ள முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள், எம்.பிக்கள் கட்டாயமாக உள்வாங்கப்பட வேண்டும். மாகாண சபை அரசியலில் முக்கிய வகிபங்கை கொண்டிருந்தவர்களின் அபிப்பிராயங்களும் பெறப்படலாம். 

இங்கு ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். அதாவது, இப்போது முஸ்லிம் கட்சித் தலைவராகவோ அல்லது எம்.பியாகவோ இருக்கின்ற பலருக்கு புரையோடிப்போன பிரச்சினைகள் பற்றி எதுவுமே தெரியாது. முறையான ஆவணங்களும் தரவுகளும் இல்லை. 

இனப்பிரச்சினை என்பது பல தசாப்த கால வரலாற்றுடன் தொடர்புபட்டது. ஆகவே, புதுமுக எம்.பிக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இதன் ஆழ அகலங்களும் வரலாற்றுச் சம்பவங்களும் தெரியாது. 

எனவே, முஸ்லிம் தலைவர்கள் மற்றும் எம்.பிக்களை மட்டும்தான் கூப்பிடுவோம் என்ற கொள்கையை தளர்த்தி, தற்சமயம் பிரதிநிதித்துவ அதிகாரத்தில் இல்லாத வடக்கு, கிழக்கைச் சேர்ந்த விடயமறிந்த முஸ்லிம் அரசியல்வாதிகளையும் இந்தப் பேச்சுக்கு அழைப்பது காத்திரமானதாக அமையும். தமிழ் தரப்பிலும் ஓய்வுநிலை அரசியல்வாதிகள் உள்வாங்கப்படுவது அவசியமாகும். 

அரசாங்கமும் தமிழ்த் தரப்பும் முஸ்லிம் தரப்பும் இதய சுத்தியுடன் பேச வேண்டும். பெரிய தீர்வுகளைப் பற்றிப் பேசிப் பேசியே காலத்தை வீணடிக்காமல், கிடைக்கக் கூடிய சிறிய தீர்வுகளையாவது  சாத்தியமாக்கிக் கொள்ள முன்வர வேண்டும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .