2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

முஸ்லிம் சமூகம் திருந்தாத வரை அரசியல்வாதிகளை திருத்த முடியாது

Johnsan Bastiampillai   / 2022 பெப்ரவரி 02 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

ஒரு பிள்ளைக்கு, சிறு வயதிலிருந்தே பூனையைக் காட்டி, “இதுதான் யானை” என்று சொல்லிப் பழக்கி வந்தால், அந்தப் பிள்ளை பெரிய ஆளாக வளர்ந்தாலும், உண்மையான யானையை, யானை என்று ஏற்றுக் கொள்ளத் தயங்கும். பூனையே அதனது எண்ணங்களில், யானையாக இருக்கும். இது எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

குறிப்பாக, ஒரு சமூகம் எவ்விதமான அரசியல் கோட்பாடுகளால், கலாசாரத்தால் கட்டமைக்கப்படுகின்றதோ, எவ்விதம் அரசியல் மயப்படுத்தப்படுகின்றதோ, அதையே ‘சரியான அரசியல் வழிமுறை’ என்று நம்பிக் கொண்டிருக்கும். அவ்வாறு நம்பிக் கொண்டிருக்கும் காலம் வரைக்கும், சமூகம் தன்னை மாற்றிக் கொள்ளவும் மாட்டாது; அரசியல்வாதிகள் திருந்தப் போவதும் இல்லை.

இதற்கு, நிகழ்காலத்தில் மிகச் சிறந்த உதாரணமாக, இலங்கை முஸ்லிம் அரசியலைக் குறிப்பிடலாம்.

கடந்த இரு தசாப்பதங்களில், பிரதிநிதித்துவ அரசியலுக்குள் பிரவேசித்த முஸ்லிம் அரசியல்வாதிகள், சமூகத்தின் நீண்டகாலப் பிரச்சினைகளையோ குறுங்கால எதிர்பார்ப்புகளையோ நிறைவேற்றவில்லை. சமூகப் போராட்ட வீரர்கள் போல, தேர்தல் மேடைகளில் முழங்குகின்ற இவர்கள், பிற்பாடு பெருந்தேசியத்தின் செல்லப் பிள்ளைகளாகி விடுவதுதான் வழக்கமாக இருக்கின்றது.

சமூகத்தின் நலனை மையமாகக் கொண்ட அரசியல் நகர்வின் ஊடாகவோ அல்லது, பேரம்பேசும் அரசியலின் மூலமாகவோ, பல விடயங்களை இக்காலப் பகுதியில் சாதித்திருக்க முடியும். குறைந்தபட்சம் முஸ்லிம்களின் அரசியலில், ஓர் அங்குல முன்னேற்றத்தையாவது ஏற்படுத்தியிருக்கலாம்.

ஆனால், ஒரு பெருந்தேசிய கட்சியை வசைபாடி, மக்களின் வாக்குகளைப் பெற்றுவிட்டு, அதேகட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், பின்கதவால் ‘டீல்’ பேசி, ‘பிரதியுபகாரங்களை’ பெற்றுக் கொண்டு, கூட்டத்தோடு சோரம் போவதே முஸ்லிம் அரசியல் கலாசாரமாகியுள்ளது.

சமூகத்தின் உரிமை, கௌரவம் போன்ற விடயங்களுக்காகக் குரல் கொடுப்பதற்கு, குறைந்தபட்சம் வாழ்வாதார நெருக்கடிகள் பற்றிப் பேசுவதற்குக் கூட, திராணியற்ற ஓர் அரசியல் ‘பேய்க்காட்டி’களின் கூட்டத்தையே, நாம் அரசியல் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம். அதாவது இந்தப் ‘பூனை’களையே, சமூகம் ‘யானை’கள் என்று நம்பிக் கொண்டிருக்கின்றது.

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகள், அவர்கள் அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாத போதும், அச்சமூகத்தின் உரிமைக்காக இடைவிடாது குரல் கொடுத்து வருகின்றனர். தமிழர்களுக்குத் தீர்வு கிட்டியதா, கிட்டுமா? என்பதெல்லாம் இரண்டாவது விடயம். ஆனால், எல்லாக் காலத்திலும் தமிழர் அரசியல் உயிர்ப்புடன் உள்ளது.

பெரும்பான்மை மக்களை மையப்படுத்திய பெருந்தேசிய அரசியலும், இயல்பாகவே எப்போதும் சிங்கள மக்களின் நலனில் கவனமாகவே இயங்கி வருகின்றது. ஆனால், முஸ்லிம் அரசியல்வாதிகள் மாத்திரம், இதற்கு விதிவிலக்கான, என்னவென்று வரையறுக்க முடியாத ஒரு ‘கேடுகேட்ட’ அரசியலை செய்து வருகின்றார்கள்.

25 வருடங்களாக எம்.பியாக, அமைச்சராக இருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் முதற்கொண்டு, இந்த முறை நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட எம்.பிக்கள் வரை எல்லோரும், மேடையில் பேசும் போதும் ஊடகங்களுக்கு அறிக்கை விடுகின்ற போதும், “சமூகத்துக்காக உயிரைக் கொடுப்போம்” என்றுதான் பேசுகின்றார்கள்.

இருப்பினும், நிஜத்தில் சமூகத்தைப் பயன்படுத்தி பதவி, பணம் என நிறையச் சம்பாதித்திருக்கின்றார்களே தவிர, சமூகத்துக்காக உருப்படியாக எதையும் பெற்றுக் கொடுத்ததாகத் தெரியவில்லை. அதுமட்டுமன்றி, இப்படிச் செய்வதுதான் சிறந்த அரசியல் என்ற பொய்த் தோற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.

அதனால், போகப் போக இன்னுமின்னும் மோசமான வியாபாரிகளும் குள்ளநரிகளும் சமூகத் துரோகிகளும் ‘டீல்’ மன்னர்களுமே முஸ்லிம் அரசியலுக்குள் பிரவேசித்துக் கொண்டு இருப்பதையும் காண முடிகின்றது.  

தேர்தல் மேடைகளில் எப்படிப் பேசினால், கட்சியின் எந்த கீதத்தை ஒலிக்க விட்டால், எவ்வளவு பணம் செலவழித்தால், இம்முறை வெற்றி பெறலாம் என்ற கணக்கு, அரசியல்வாதிகளுக்கு நன்கு தெரியும்.

பெருமளவு முஸ்லிம் மக்களை உணர்ச்சிகரப் பேச்சாலும், இன்னும் சிலரை இனவாதத்தைத் தூண்டியும் கவரலாம் என்பதையும் குறிப்பிட்ட ஒரு தொகுதி மக்களுக்கு, கடைசி நாளில் பணத்தை, பொருளைக் கொடுத்தாவது ‘வழி’க்குக் கொண்டு வரலாம் என்பதையும், அவர்கள் நன்றாகக் கற்று வைத்திருக்கின்றார்கள்.

அப்படியென்றால், முஸ்லிம் அரசியல் இந்தளவுக்குக் கெட்டுக் குட்டிச்சுவராகிப் போனதற்கு அரசியல்வாதிகள் மட்டுமன்றி, முஸ்லிம் மக்களும்தான் காரணம் என்பதை, அடிக்கோடிட்ட வார்த்தைகளால் குறிப்பிட வேண்டியுள்ளது.

முஸ்லிம் கட்சித் தலைவர்கள், எம்.பிக்கள் சமூகத்தின் நலனுக்காக முன்னிற்கவில்லை என்பது, ஒவ்வொரு முஸ்லிம் பொது மகனுக்கும் தெரியும். தேநீர்க் கடைகள் உள்ளடங்கலாக, அரசியல் பேசப்படுகின்ற ஒவ்வோர் இடத்திலும் இதை மக்கள் வெளிப்படையாக விமர்சித்து, கெட்ட வார்த்தைகளால் தூற்றுகின்றனர்.

அப்படியென்றால், இந்தச் சமூகம் என்ன செய்ய வேண்டும்?......

முஸ்லிம் அரசியல்வாதிகளிடம், இதுபற்றிக் கேள்வி எழுப்ப வேண்டும். அவர்கள், தமது பதவிக் காலத்துக்குள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால், அடுத்த தேர்தலில் சம்பந்தப்பட்டவர்களை தெளிவாகத் தோற்கடித்து, வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அவர் யாராக இருந்தாலும் சரியே!

ஆனால், நிஜத்தில் என்ன நடக்கின்றது?

முஸ்லிம் கட்சித் தலைவர்கள், எம்.பிக்களை, முஸ்லிம் சமூகத்தில் உள்ள கல்விச் சமூகமோ அழுத்தக் குழுக்களோ வழிநடத்துவதும் இல்லை. இந்தக் குழுக்கள் உட்பட, பொது அமைப்புகளோ அல்லது வாக்காளப் பெருமக்களோ ஒரு காலத்திலும் கேள்வி எழுப்பியதும் இல்லை.

மாறாக, ஏதோவொரு காரணத்துக்காக அடுத்த தேர்தலிலும் அந்த அரசியல்வாதிகளுக்கு வாக்களிப்பதற்கு, அவர்களைத் தலைவர்களாக ஏற்றுக் கொள்வதற்கு, முஸ்லிம் சமூகம் தயாராக இருக்கின்றது.

குறிப்பிட்ட கட்சிக்காக, நமக்குத் தெரிந்தவர் என்பதற்காக, எமது ஊருக்கு எம்.பி வேண்டும் என்பதற்காக, இவரை விட்டால் வேறு யாரும் இல்லை என்பதற்காக, அவர் நமக்குத் தொழில் தந்தவர், வீதி போட்டுத் தந்தவர் என்ற அற்ப காரணங்களுக்காக, பெருமளவான மக்கள் வாக்களிக்கின்றனர்.  

அரசியல்வாதிகளின் இனவாதப் பேச்சில் மயங்கி, கட்சி கீதத்தில் மெய்மறந்து, உணர்ச்சிகர வாக்குறுதிகளில் சொக்கிப்போய், இன்னும் குறிப்பிட்டளவான மக்கள் வாக்களிக்கின்றனர்.

அதுமட்டுமன்றி, தளம்பல் நிலையிலுள்ள கீழ்மட்ட வாக்காளர்கள், கடைசித் தருணத்தில் சிறுதொகை பணத்துக்காகவும் அன்பளிப்புக்காகவும் கூட, வாக்களிக்கும் முடிவை எடுக்கின்றனர் என்பது இரகசியமல்ல.

அதேவேளை, முஸ்லிம் கட்சித் தலைவர்களும் தற்போதைய மற்றும் முன்னாள் எம்.பிக்களும் பதவி, பணத்தின் மீதான வேட்கையை ஒருபுறம் வைத்துவிட்டு, சமூகத்துக்காகக் கொஞ்சமேனும் மனச்சாட்சியுடன் செயற்பட வேண்டும் என்ற முடிவை எடுத்ததாகவும் தெரியவில்லை.

தம்மைச் சுற்றியுள்ள நான்கைந்து ‘ஆமாசாமி’களையும் ‘பேஸ்புக்’ போராளிகளையும் இணைப்பதிகாரிகளையும் பார்த்து, ‘இவர்கள்தான் முஸ்லிம் சமூகம்’ என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் வரைக்கும், அரசியல்வாதிகளால் இந்த நச்சுவட்டத்தில் இருந்து வெளியில் வரவும் முடியாது.

மறுபுறத்தில், முஸ்லிம் எம்.பிக்கள் சமூகத் துரோகத்தை செய்யும்போது, ‘இனிமேல் இந்த ஏமாற்றுக்காரனுகளுக்கு வாக்களிப்பதில்லை’ என்றும் ‘இவர்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும்’    என்றும் சபதம் செய்கின்ற படித்தவர்கள் கூட, வாக்களிப்பு தினத்தில் பாவிகளுக்கு மன்னிப்பு வழங்குபவர்களாக ஆகிவிடுகின்ற நிலைமை, முஸ்லிம் சமூகத்துக்குள் மட்டும்தான் இருக்கின்றது.

இந்தப் பின்னணியில், முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்ச்சியாகச் செய்கின்ற தவறுகளைத் தட்டிக் கேட்பதற்கு, ஒரு சமூகமாக முஸ்லிம்கள் முன்வரவில்லை. மீண்டும் மீண்டும் தவணை முறையில் ஏமாறுவதற்கு, முஸ்லிம் சமூகம் வெட்கப்படவில்லை.

பல்கலைக்கழக மாணவர்கள், கற்றறிந்தோர், சிவில் சமூகம் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திலும், யாராவது முன்வந்து சமூகத்தைத் திருத்துவதற்கும் அதனூடாக அரசியல் ஒழுங்கை மாற்றியமைப்பதற்கும் முன்வருவதற்கான அறிகுறிகள் இல்லை.

ஏமாற்றுவதற்கு ஒரு கூட்டமும் காலாகாலத்துக்கும் ஏமாந்து  கொண்டிருப்பதற்கு பெருமளவான மக்கள் கூட்டமும், எப்போதும் தயார்நிலையில் இருக்கின்றது.

ஆகவே ‘ஒரு சமூகம் தானாகத் திருந்தாத வரை, இறைவன் அவர்களைத் திருத்துவதில்லை’ என்ற இஸ்லாமிய இறை வசனம், பொய்யாகிப் போகவும் முடியாது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .