Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Johnsan Bastiampillai / 2022 மார்ச் 30 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
பெரும் பொருளாதார நெருக்கடியையும் அரசியல் குழப்பங்களையும் நாடு எதிர்கொண்டுள்ளது. இந்தப் பின்புலத்தில், ஆட்சி மாற்றம் ஏற்படப் போகின்றது; பிரதமர் மாறப் போகின்றார்; ஜனாதிபதி பதவி விலகலாம்; வேறு ஒரு தரப்பு ஆட்சியைக் கைப்பற்றப் போகின்றது என்ற கதைகளும் உலா வரத் தொடங்கியுள்ளன.
வாழ்வாதார நெருக்கடியால், ஆட்சியாளர்கள் மீது மக்கள் வெறுப்பை உமிழத் தொடங்கி பல நாள்களாயிற்று. 69 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக் கொண்டதாக மார்தட்டிய ராஜபக்ஷ அரசாங்கம், அதைவிட இரு மடங்கு மக்களின் அதிருப்திக்கு இன்று ஆளாகியுள்ளதை, பகிரங்கமாகவே காண முடிகின்றது.
எப்போதும் எதுவும் நடக்கலாம் என்பதுதான், இப்போதிருக்கின்ற நிலைமையாகும். ஒருவேளை மாற்றங்கள் நிகழலாம்; அல்லது, அரசாங்கம் சிலவற்றுக்குத் தீர்வுகளை முன்வைத்தாலும், எதுவும் நடக்காமலேயே இப்படியே காலம் கழிவதற்கான நிகழ்தகவுகளும் இல்லாமலில்லை.
இந்நிலையில், இப்போது எதிர்க்கட்சி உள்ளடங்கலாக பல கட்சிகளும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளன. இந்தச் சூழல், அரசாங்கத்துக்கு ஒருவித உதறலை, உள்ளுக்குள் ஏற்படுத்தி உள்ளது. ஆனால், எல்லாக் களநிலைச் சாதகங்கள் இருந்தும், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை, எதிர்கட்சிகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. மோசடைந்து செல்லும் வாழ்வாதார நெருக்கடிகள் மக்களிடையே மேலும் கொதிநிலையை ஏற்படுத்தியுள்ளன. இதைச் சில அரசியல் தரப்புகள், தம்முடைய அரசியல் இலாபத்துக்காகப் பயன்படுத்த முனைகின்றன.
இந்த இடத்தில்தான், நாட்டு மக்கள் குறிப்பாக, முஸ்லிம் சமூகம் மிக அவதானமாகவும் அறிவார்ந்த அடிப்படையிலும் சிந்திக்க வேண்டியுள்ளது.
முஸ்லிம்களுக்கு நிறைய கசப்பான அனுபவங்கள் உள்ளன. ஆயுதக் குழுங்கள், பயங்கரவாதிகள், அடிப்படைவாத குழுக்கள், இனவாத சக்திகள், அரச இயந்திரம் ஆகியவற்றால், கடந்த காலங்களில் பெற்றுக் கொண்ட அனுபவங்களைப் பாடமாகக் கொண்டே, முஸ்லிம்கள் தமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது, சிங்கள மக்கள் நேரடியாகவே அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர். கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்க்கின்றனர். பதவி விலகிச் செல்லுங்கள் என்று கனத்த குரலில் கேட்கின்றனர். அந்த மக்களிடம், இனவாதமோ பொய்யான தேசப்பற்றோ பலிக்காத நிலை வந்துள்ளது. ஆங்காங்கே அவர்கள் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொள்கின்றனர்.
அரசாங்கத்தின் மீதான இந்த அதிருப்தி, நாட்டின் பிரஜைகள் எல்லோருக்கும் பொதுவானது. இது, சிங்கள மக்களுக்கு மட்டும் உரியதல்ல. அந்த வகையில் தமிழர்களும் முஸ்லிம்களும் விமர்சனங்களை முன்வைக்கலாம், ஜனநாயக ரீதியான எதிர்ப்புக்காட்டலை மேற்கொள்ளலாம்.
ஆனால், இவற்றையெல்லாம் இலங்கை பிரஜைகள் என்ற பொதுவான அடையாளத்துடன் மட்டுமே முன்னெடுக்க வேண்டும். அதைவிடுத்து முஸ்லிம்கள், தமிழர்கள் என்ற அடையாளத்தை முன்னிறுத்தி, அரசாங்கத்துக்கான எதிர்ப்பை தெரிவிக்கக் கூடாது. குறிப்பாக, முஸ்லிம் அரசியல் கட்சிகள், எம்.பிக்களின் பின்னால் அறவே போகத் தேவையில்லை.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ஒரு சில முஸ்லிம் கட்சிகள், எம்.பிக்கள் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த ஆயத்தங்களை மேற்கொள்வதாகத் தெரிகின்றது. அதாவது, அரசாங்கத்தின் மீது, முஸ்லிம் மக்களுக்குக் காணப்படுகின்ற மனவெறுப்பை, தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, அவர்களை அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் களத்துக்குள் தள்ளிவிட முயல்கின்றனர்.
இதன் அர்த்தம், அரசாங்கத்தை விமர்சிக்கக் கூடாது என்பதோ, என்ன நெருக்கடி வந்தாலும் வாயைப் பொத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்பதோ அல்ல! மாறாக, நெருக்கடிகளை எதிர்கொள்ளும் இலங்கையராக, அவற்றை எதிர்க்க வேண்டுமே தவிர, ஒரு தனியான இன, மத அடையாளத்துடன் களமிறங்கக் கூடாது என்பதாகும்.
இதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உள்ளன. ஒன்று, இலங்கையின் இனவாத ஆதிக்க அரசியல். இரண்டாவது, முஸ்லிம் அரசியல் தலைவர்கள், எம்.பிக்களின் கடந்தகால செயற்பாடுகள் ஆகும்.
மீளெழுச்சி பெற்ற புதிய பாணியிலான இனவாதம், 2010 இற்குப் பின்னரான அரசியலில் செல்வாக்குச் செலுத்தி வருகின்றது. இனவாதம் சில போதுகளில் ஓய்வெடுக்கின்றதே தவிர, எந்த அரசாங்கமும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், முஸ்லிம்களை இன, மத ரீதியாக ஒடுக்குகின்ற போக்குகள் விஸ்வரூபம் எடுத்ததை நாமறிவோம். இதன் காரணமாக முஸ்லிம்கள் நிறையவே இழப்புகளைச் சந்தித்துள்ளார்கள்.
இதை மூலதனமாக்கியே பெருந்தேசியக் கட்சிகள் அரசியல் செய்கின்றன. குறிப்பாக, இஸ்லாமிய பயங்கரவாதம், முஸ்லிம் விரோத கருத்தியல் என்பவற்றைப் பயன்படுத்தியே இந்த அரசாங்கமும் ஆட்சியைக் கைப்பற்றியது.
இப்போது இனவாதமும் இல்லை; முஸ்லிம் விரோத கதைகளும் இல்லை. எல்லா மக்களும் பொருளாதார நெருக்கடி என்ற பொது வெளிக்கு வந்திருக்கின்றனர். இந்நிலைமை, சிங்கள மக்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தியுள்ளது. இனவாத கட்டுக்கதைகளால் தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை அவர்கள் உணர்கின்றார்கள்.
இது முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை, நல்லதொரு சூழலாகும். மூன்று வருடங்களுக்குள் நிலைமைகள் இந்தளவுக்கு தலைகீழாக மாறும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். சிங்கள மக்களே, அரசை விமர்சிப்பார்கள் என்பதை கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.
ஆனால், முஸ்லிம்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, முஸ்லிம்கள் மீதான இனவாத சக்திகளின் பாய்ச்சலையும் அரச தரப்பிலிருந்தான நெருக்குவாரங்களையும் தாமதப்படுத்தி இருக்கின்றதே தவிர, எல்லா இனவாதிகளும் திருந்தி விட்டார்கள்; இனி எதுவும் நடக்காது என்று கூறுவதற்கில்லை.
எனவே, இந்தச் சந்தர்ப்பத்தில், முஸ்லிம்கள் என்ற சுலோகத்தைத் தூக்கிக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதோ, அரசாங்கத்துக்கு எதிராக வீதியில் இறங்குவதோ, அவ்வளவு புத்திசாலித்தனமான முடிவல்ல.
‘முஸ்லிம்கள் எதிர்க்கின்றார்கள்’ என்ற தோற்றப்பாடு, எவ்வாறான எதிர்விளைகளை கொண்டு வரும் எனத் தெரியாது. அப்படி நடந்தால், இதன் எதிர்விளைவுகளை முஸ்லிம் சமூகமே சந்திக்க வேண்டி வரும்.
இதேவேளை, முஸ்லிம் அரசியல் தலைவர்கள், எம்.பிக்கள் இதற்கு முன்னர் பல தடவை, மக்களைத் தூண்டிவிட்டு, தமது அரசியலுக்காக அவர்களைப் பயன்படுத்திவிட்டு, பிறகு நட்டாற்றில் விட்டுச் சென்ற கதைகள் ஏராளம் உள்ளன.
கடைசியாக நடைபெற்ற இரண்டு தேர்தல்கள் உள்ளடங்கலாக, பல தேர்தல்கள், அரசியல் நகர்வுகளில் அரசாங்கத்தையும் இனவாதிகளையும் காட்டி, முஸ்லிம் மக்களுக்கு எச்சரிக்கை செய்தனர். அதன்மூலம், மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு வாக்குகளைப் பெற்றனர். அதன் பிறகு என்ன நடந்தது?
முஸ்லிம் சமூகத்துக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை; நமது அரசியல் இருப்பும் வருவாயும் அவசியம் என்ற கோதாவில் மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு, அந்தப் பக்கம் இருந்து, இந்தப் பக்கம் பாந்தனர். இதன்மூலம் வெகுமதிகளைப் பெற்றுக் கொண்டனர்.
ஆனால், முஸ்லிம்கள் ராஜபக்ஷர்களை அல்லது, குறிப்பிட்ட அரசியல் தரப்பை எதிர்க்கின்றார்கள் என்ற தோற்றப்பாட்டைக் களைவதற்கு அவர்கள் முயற்சிகளை எடுக்கவில்லை. அல்லது, அப்போது எடுத்த நிலைப்பாட்டுக்கும் பிறகு, அது மாறியதற்கும் காரணமென்ன என்பதை, சிங்கள தேசியத்துக்கு தெளிவுபடுத்தவில்லை.
எனவே, முஸ்லிம் அரசியல்வாதிகளை நம்பி, முஸ்லிம் சமூகம் என்ற அடையாளத்தை முன்னிறுத்தி, அரசாங்க எதிர்ப்பை வெளிப்படுத்தத் தேவையில்லை. எந்த நேரத்திலும் அவர்கள், தமது சமூகத்தை கைவிடலாம் என்ற எச்சரிக்கை உணர்வு அவசியமாகும்.
முஸ்லிம்கள், இந்தச் சந்தர்ப்பத்தில் மிகக் கவனமாக ஒவ்வொரு காலடியையும் எடுத்து வைக்க வேண்டும். எனவே, முஸ்லிம்கள் ஒன்றில் நடப்பவற்றை புதினம் பார்க்கலாம்.
அல்லது, கருத்துச் சுதந்திரமும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரமும், இலங்கை அரசியலமைப்பில் எல்லோருக்கும் உள்ளது என்ற அடிப்படையில், ஓர் இலங்கை பொதுமகனாக சிங்கள, தமிழ் மக்களுடன் இணைந்து, நாட்டின் நெருக்கடிகளுக்கு எதிரான வெகுஜன முன்னெடுப்புகளில் பங்குபற்றலாம்.
ஆனால் அதைவிடுத்து, ஒரு முஸ்லிம் அரசியல் கட்சியின் கொடியுடனோ, முஸ்லிம் என்ற அடையாளத்தை முன்னிறுத்தியோ வீதிக்கு இறங்கும் பொறுப்பற்ற நடவடிக்கைகள், எதிர்காலத்தில் நாம் நினைத்திராத உருவத்தில், ஓர் எதிர்வினையாக நம்மை நோக்கி வரலாம் என்பதை, மறந்து விடக் கூடாது.
இனவாதத்துக்கு எதிராக வாக்களிக்குமாறு கோரினார்கள். இதன்படி கணிசமான முஸ்லிம்கள் ராஜபக்சக்களுக்கு எதிரானவர்கள் என்ற தோற்றப்பாடு உருவானது.
இது கூடப் பரவாயில்லை. ஆனால், அதன்பிறகு என்ன நடந்தது? முஸ்லிம் எம்.பி.க்கள் 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்தனர். அரச ஆதரவு எம்.பிக்களாக மாறிப் போனார்கள். கட்சித் தலைவர்கள் பெரிதாக அறிக்கை விட்டார்களே தவிர, அந்த எம்.பிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேர்தலுக்கு முன்பிருந்தே ஒரு பக்குவமான அரசியலை செய்திருக்க வேண்டும் என்பதுடன், தேர்தல் பிரசாரங்களை மிதமாக முன்னெடுத்திருக்க வேண்டும். அதைவிடுத்து, முஸ்லிம்களை உசுப்பேற்றி, ராஜபக்சர்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, மக்களை நட்டாற்றில் விட்டதைப் போல கேவலம் வேறு எதுவும் இல்லை.
சரி அதையும் சகித்துக் கொள்வோம். இவ்வாறு அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதன் மூலம் அதாவது முட்டுக் கொடுப்பதன் ஊடாக, முஸ்லிம் எம்.பி.க்கள் எதைச் சாதித்துள்ளார்கள்?
கடந்த 20 வருடங்களில் இவ்வாறு அரசாங்கத்துக்கு அல்லது எதிரணிக்கு ஆதரவளித்தன் ஊடாக, முஸ்லிம் சமூகத்தின் எத்தனை பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளார்கள்?
எதிர்ப்பு அரசியலைச் செய்கின்ற தமிழர் தரப்பினால் அரசாங்கத்துடன் பேச முடிகின்றது என்றால், இணக்க அரசியல் என்ற கோதாவில் முட்டுக்கொடுக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளால் மேல்மட்ட ஆட்சியாளர்களை முறையாக சந்திக்கவோ, சமூகப் பிரச்சினைகளை முன்வைக்கவோ ஏன் முடியவில்லை?
இதற்கு முழுமுதற் காரணம் அரசியல்வாதிகள். இரண்டாவது காரணம், திரும்பத் திரும்ப வாக்களிக்கின்ற மக்கள். எனவே, முஸ்லிம் அரசியல் மேற்குறிப்பிட்டது போல, சமூகம் சார்ந்த அரசியலாக மாற வேண்டும் என்றால், மக்களும் அரசியல்வாதிகளும் திருந்த வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
24 Nov 2024
24 Nov 2024